Friday, August 23, 2019

அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம் இந்த வசனத்திலோ அல்லது திருக்குரானிலோ இருக்கிறதா?

குர்ஆனில் இருக்கிறதா?
ஆக்கம்: சத்தியமார்க்கம் -

ஐயம்:

“பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்” எனும் வசனத்தை தமிழில் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்று மொழி பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம் இந்த வசனத்திலோ அல்லது திருக்குரானிலோ இருக்கிறதா? – சாணக்கியன்.


தெளிவு:

பி, இஸ்மு, அல்லாஹ், அல்-ரஹ்மான், அல்-ரஹீம் ஆகிய ஐந்து அரபுச் சொற்கள் இணைந்து, அரபு மொழியின் சந்தி இலக்கணத்துக்கு இயைந்து, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்று வழங்கப்படுகிறது. அந்த ஐந்து அரபுச் சொற்களுக்கும் தனித் தனியான தமிழ்சொற்கள் முறையே:

பி=ஆல்
இஸ்மு = பெயர்
அல்லாஹ் = வணக்க-வழிபாடுகளுக்குரிய கடவுள்
அர்ரஹ்மான் = அளவற்ற அருளாளன்
அர்ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்


அன்பு, அருள், பரிவு, கருணை, இரக்கம் போன்ற பல பொருள்களைத் தன்னகத்தே கொண்ட ‘அர்ரஹீம்’ எனும் செறிவுச் சொல்லானது ‘ரஹிம’ எனும் வேரடி வினையிலிருந்து பிறந்த பண்புப் பெயராகும். ‘ரஹீம்’ எனும் சொல்லோடு இணைந்த ‘அல்’ எனும் பெயர்ச் சொல், குறிப்பாக உணர்த்துவதற்குப் பயன் படுத்தப்பட்டதாகும். அதாவது குறிப்பாகு பெயர். ‘அல்-ரஹீம்’ எனும் சொல், அரபு மொழியின் புணர்ச்சி இலக்கணப்படி ‘அர்ரஹீம்’ என மொழியப்படும்.

எனவே, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்னும் அரபுச் சொற்றொடருக்கு, “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்” எனும் தமிழ் மொழி பெயர்ப்பு, சரியானதே!

இந்தச் சொல், இறைமறையின் 113 அத்தியாயங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இறை வசனங்கள் சிலவற்றின் உள்ளும் இடம்பெற்றுள்ளது. அவையாவன:

“மேலும், உங்கள் கடவுள் ஒரேயொருவன்தான்; அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்“ 002:163.

“வணக்க வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ். அவனையன்றி வேறு கடவுள் இல்லை. வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்“ 059:022.

“(இவ்வேதம்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிமிருந்து இறக்கியருளப்பட்டது” 041:002.

“திண்ணமாக நான் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என்பதை (நபியே!) என் அடியார்களிடம் அறிவித்துவிடுவீராக!” 015:049.

oOo

ஐயம்:

திருக்குரானிலே இறைவன் தன்னைப்பற்றி “அனுவளவும் நீதி தவறாத நீதிமான்” என்று சொல்கிறான். “தீமை செய்தால் நரகம், நன்மை செய்தால் சுவர்க்கம்” என்று செயலும் அதன் விளைவையும் பற்றி தெளிவாக சொல்கிறான். எந்த இடத்திலும் “என் மீது அன்பு செலுத்து” என்று சொல்லவில்லை. நீதிபதிக்கு பயந்தால்தான் சட்டத்தை மனிதன் மதிப்பான். நீதிபதிக்கு அவன் மீது அன்பு வந்துவிட்டால் சட்டத்தை வளைப்பான். “அன்பே சிவம், God is love” போன்ற சிந்தனையெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. “கண்ணன் மீது காதல் வரலாம். அல்லாஹ் மீது பயம் வரவேண்டும்” என்பதுதான் இஸ்லாம்.

அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான் சரி. இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? – சாணக்கியன்.

தெளிவு:

“என் மீது அன்பு செலுத்து” என்று அல்லாஹ் தன் அடியார்களுக்கு எந்தக் கட்டளையும் இடவில்லைதான். மாறாக, “என்னை அஞ்சி வாழுங்கள்” என்பதாகவே இறைமறை நெடுகிலும் கட்டளையிடுகின்றான். அதேவேளை, “பசியுடன் உணவு கேட்டு உங்களிடம் வருபவருக்கு அன்புடனும் பரிவுடனும் உணவளிப்பது என்னிடம் நீங்கள் காட்டும் அன்புக்கு ஒப்பாகும்” என்று அல்லாஹ் கூறுவதாக அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம் ஹதீஸ் 4661 கருவின் சுருக்கம்).

“அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான் சரி” என்பதை ‘அர்ரஹீம்’ எனும் சொல்லுக்குத் தமிழாக்கம் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால், முதல் ஐயத்துக்கான தெளிவைப் படித்துக் கொள்ளுங்கள். “அல்லாஹ், நிகரற்ற கருணையாளன் என்பது மட்டுமே சரி” என்று ஒற்றைப்படுத்தினால் அது  பிழையாகும். “அல்லாஹ், நிகரற்ற கருணையாளன்” என்பதும் சரி. போலவே, அன்பாளன், மன்னிப்பவன், கொடையாளன், நீதிபதி ஆகிய அவனுடைய எல்லாப் பண்புப் பெயர்களுக்கும் நிலைமொழியாக ‘நிகரற்ற’ வரும். ஏனெனில் அவனே நிகரற்றவன்தான்.

முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது… (006:149).

(இறைவன் மிக்க அறிந்தவன்).

No comments: