Monday, August 26, 2019

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் / கவிஞர் புகாரி சுயவிவரம் - Profile of Poet Buhari

கவிஞர் புகாரி சுயவிவரம் - Profile of Poet Buhari
உள்ளடக்கம்:
· குறுங்குறிப்பு
· வாழ்க்கைக் குறிப்பு
· கல்வி
· தொழில்
· குடும்பம்
· 1960-81 தமிழ்நாடு, இந்தியா
· 1981-99 சவூதி அரேபியா
· 1999-இன்றுவரை கனடா
· வெளியான கவிதைத் தொகுதிகள்
· அன்புடன் புகாரி - என் அறிமுகம்
· நிலாச்சாரல் நேர்காணல் 
குறுங்குறிப்பு:
· 1965 நினைவுக்கும் வராத இளவயது முதலே கவிஞன்
· 1973 பள்ளியிலேயே தமிழ் ஆசிரியரால் கவிஞரே என்று அழைக்கப்பட்டேன்
· 1976 முதல் உரைவீச்சுப் புதுக்கவிதை
· 1979 நண்பர்களோடு கயிறு என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன்
· 1979 அலிபாபா வாராந்திர இதழில் முதன் முதலில் கவிதை பிரசுரம்
· 1979 முதல் மேடையில் இரங்கல் கவிதை வாசிப்பு
· 1980 மாலனின் திசைகளில் என் கவிதைகள் பிரசுரம்
· 1981 சவுதிக்கு பணி நிமித்தம் புலம்பெயர்வு
· 1982 தீபம் இலக்கிய இதழில் தொடர்ந்து என் கவிதைகள் பிரசுரம்
· 1984 தாய் இதழின் ஆசிரியர் பக்கத்தில் என் கவிதைகள் பிரசுரம்
· 1986 இந்திய அமைச்சரவையில் தமிழ்மாநில அடையாளக்கவிதையாக என்கவிதை தேர்வு
· 1987 கணினியின் அச்சு எந்திரத்திற்கான தமிழ் எழுத்துருவை உருவாக்கினேன்
· 1988 குமுதம் கவிதைப் போட்டியில் பரிசு
· 1999 கனடாவுக்குக் குடிபெயர்வு
· 1999 நிலாவிலும் கற்கள் என்னும் வலைத்தளம் உருவாக்கினேன்
· 2000 தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின் தமிழோசை ஆண்டிதழை நான் மட்டுமே ஆக்கினேன்
· 2001 கனடா உதயன் நடத்திய கவிதைப் போட்டியில் தங்கப் பரிசு
· 2002 தங்கப்பதக்கக் கவிதைத் தேர்வில் நடுவர்
· 2002 கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுப்பினர்
· 2002 பாரதிதாசன் வையவிரி அவையின் இரண்டாம் பரிசு
· 2002 தமிழ் நாட்டுத் தமிழர்களுள் முதன்முறையாக வெளிநாட்டில் நூல் வெளியிட்டவன்

· 2002 வெளிச்ச அழைப்புகள் கவிதைநூல் வெளியீடு
· 2002 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அணிந்துரை
· 2002 கனடிய வானொலிகளிக் கவிதை வாசிப்பு
· 2002 இணைய இதழ்களில் கவிதைகள் பிரசுரம்
· 2002 இணைய தமிழ் மின் குழுமங்கள் பலவற்றிலும் முக்கிய உறுப்பினர்
· 2002 உயிரெழுத்து மற்றும் புத்தகப்புழு யாஹூ மின்குழுமத்தின் உரிமையாளர் & மட்டுநர்
· 2003 இணையத்தின் தமிழ்-உலகம் யாஹூ குழுமத்தின் ஆஸ்தான கவிஞர்
· 2003 வள்ளுவனுக்குப் புதுக்கவிதைப் பூமாலை என்று குறளைப் புதுக்கவிதையாக்கினேன்
· 2003 பாரதிதாசன் வையவிரி அவையின் முதல் பரிசு
· 2003 இணைய கவிதைப் போட்டியில் முதல் பரிசு
· 2003 கனடாவில் தமிழன் என்ற கட்டுரைத் தொடர் ஆரம்பம்
· 2003 இரண்டாவது கவிதை நூல் அன்புடன் இதயம் இந்தியாவிலும் கனடாவிலும் வெளியீடு
· 2003 இலந்தை மற்றும் கவிநாயகர் ஆகியோரின் அணிந்துரை
· 2003 வெளிச்ச அழைப்புகள் நூலுக்கு கவிதை உறவு சிறப்பு விருது
· 2003 இலக்கிய பீடம் தீபாவளி இதழில் கவிதை பிரசுரம்
· 2003 உலகிலேயே முதன் முதலாக இணையத்தில் என் கவிதை நூல் வெளியீடு
· 2004 உலகிலேயே முதன்முதலாக என் திஸ்கிவலைத்தளத்தை யுனித்தமிழுக்கு மாற்றினேன்
· 2005 உலகிலேயே முதன் முதலாக கூகுள் யுனித்தமிழ் குழுமம் தொடங்கினேன்
· 2005 மாலன் அணிந்துரையுடன் என் மூன்றாவது கவிதை நூல் ’சரணமென்றேன்’ வெளியீடு
· 2005 அ.முத்துலிங்கம் அணிந்துரையுடன் என் நான்காவது கவிதை நூல் ’பச்சைமிளகாய் இளவரசி’ வெளியீடு
· 2005 சென்னையில் ’கவிமுகத்தின் அறிமுகம்’ - மாலன், வைரமுத்து, யுகபாரதி மற்றும் பத்திரிகையாளர்கள்
· 2005 தமிழ் இலக்கியத்தோட்டம் ஆதரவில் ‘சரணமென்றேன்’ நூல் கனடாவில் வெளியீடு
· 2009 தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவாளர்
· 2010 என் ஐந்தாவது கவிதைநூல் ‘காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ சென்னையில் வெளியீடு
· 2010 என் ஆறாவது கவிதைநூல் ‘அறிதலில்லா அறிதல்’ திருச்சியில் வெளியீடு
· 2011 இசை ஆல்பத்திற்கக இஸ்லாமியப் பாடல்கள் எழுதிக் கொடுத்தேன்
· 2012 கனடாவில் இருந்துகொண்டே ’நெல்லை சந்திப்பு’  திரைப்படத்திற்குப் பாடல் எழுதிக் கொடுத்தேன்
· 2012 என் கவிதை நூல்கள் மின்நூலாய் உருவாக்கப்பட்டு இணையத்தில் கிடைக்க ஏற்பாடாகியது
· 2012 என் கவிதைகள் பல இசையமைக்கப்பட்டு பாடல்களாய் ஆகின
· 2018 உலகம் தழுவிய அமைப்பாக “எங்கள் தமிழ் மொழி” என்ற தொண்டியத்தைத் தொடங்கினேன்
· 2018 தொடர்ந்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் தமிழ்ச் சங்கங்களுக்காக பலவகை நிகழ்ச்சிகள் செய்கிறேன்
· 2019 இலக்கியச் சேவைக்காக தமிழர் தகவல் விருதும் தங்கப்பதக்கமும்
வாழ்க்கைக் குறிப்பு:
· தந்தை - அசன் பாவா ராவுத்தர், ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
· தாய் - உம்மல் பரிதா, அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
· பிறப்பிடம் - ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
· பிறந்த ஆண்டு - 10 ஆகஸ்ட் 1960 (பள்ளியில் பணியாளைக்கொண்டு பிழையான ஆண்டை இட்டுச் சேர்க்கப்பட்டதால் அரசு ஆவணங்களில் 1957)
கல்வி: 
· 1975 ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - தமிழ்வழிக் கல்வி 11ம் வகுப்பு - SSLC
· 1976 திருச்சி ஜமால் முகமது கல்லூரி - ஆங்கிலவழிக் கல்வி - புகுமுக வகுப்பு - PUC
· 1979 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - ஆங்கிலவழிக் கல்வி - இளங்கலை வணிக நிர்வாகம் - BBA
· 1999 மைக்ரோசாப்ட் சான்றுறுதி வல்லுனர் - Microsoft Certified Professional - MCP
· இந்தியா, சவூதி அரேபியா, அமெரிக்கா, மற்றும் கனடா நாடுகளில் பலவகைக் கணினிச் சான்றிதழ்கள்
தொழில்: 
· சுயதொழில் - தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் - கணினி வல்லுனர் (IT Professional Consultant)
குடும்பம்:     
· 1985 திருமணம் - மனைவி யாஸ்மின் புகாரி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
· 1986 மகள் ரிஸ்வானா புகாரி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
· 1990 மகன் சுகைல் புகாரி, தமாம், சவுதி அரேபியா
1960 - 1981 தமிழ்நாடு, இந்தியா
வானூறி மழைபொழியும்
வயலூறி கதிர்வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்... நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

ஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பெற்றெடுப்பதே எனக்குக் கவிதைகளாகின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.

1967
நான் எழுதிய முதலாவது கவிதை எதுவென்ற ஞாபகம் எனக்கு இல்லை. நான் எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன் என்றும் எனக்குத் தெரியாது. என் ஞாபகங்களில் நான் எதையோ எழுதினேன், எதையோ உரக்கச் சொல்ல்லிக்கொண்டு திரிந்தேன் என்பதுமட்டும் ஞாபகம் இருக்கிறது.

1970
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய ஒரு கவிதையை என் பள்ளி நண்பன் கோபி கிருஷ்ணனிடம் தயங்கித் தயங்கிக் காட்டி வெட்கப்பட்டது நினைவிருக்கிறது. ஆனால் அவனோ வெகுவாகப் பாராட்டி அவனது தாய் தந்தை அண்ணன் அனைவரிடமும் காட்டி என்னை வெட்கத்தின் உச்சிக்கே கொண்டு சென்று நிறுத்திவிட்டான்.

1973
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தமிழாசிரியர் கிருட்டிணன் அவர்கள் என்னைக் கவிஞரே என்றுதான் அன்போடு அழைப்பார். அப்போதெல்லாம் சந்தக் கவிதைகள் மட்டுமே நான் எழுதி வந்தேன்.

ஆசிரியர் கிருட்டிணன் ஒரு நல்ல கவிஞர். ஆண்டுவிழாவில் அவர் வாசித்த கவிதையை நேசிக்காதவர்களே இல்லை. என் கவிதைகளை வகுப்பில் கரும்பலகையில் எழுதி அதை மேம்படுத்துவார், பாராட்டுவார், அசை பிரித்துக் காட்டுவார், அணிகளைக் குறிப்பிட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுப்பார்.

அவர்தான் எனக்கு மனதில் பதியும் வண்ணம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை சொல்லித் தந்த என் பள்ளி ஆசிரியர். என் கவியாசான் என்று சொல்லலாம். உண்மையில் கண்ணதாசனும், கலைஞரும், அண்ணாவும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும், சிவாஜி கணேசன் போன்ற கலைஞர்களும்தான் எனக்குத் தமிழ் சொல்லித் தந்தனர், தமிழ் உச்சரிப்பை என் நாக்கில் நட்டனர். தமிழின் சுவையை எனக்குள் முழுமையாக அள்ளிக்கொட்டினர்.

அறுபதுகளில் வந்த திரைப்படங்கள்தாம் தமிழை வாழவைத்த திரைப்படங்கள் என்று சொல்வேன். இனிக்க இனிக்கத் தேன் சொட்டும் தமிழை என் செவிகளில் கொட்டி தமிழோடு தமிழாக கனவுலகில் வாழவைத்தன. திருவிளையாடல் போன்ற பக்திப் படங்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சரித்திரப் படங்கள், தங்கப் பதுமை போன்ற சமூகப்படங்கள் என்று பல படங்கள் தமிழின் சுவையைச் சொல்லித் தந்த அருமையான படங்கள் என்பேன்.

1975
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் கனவுகளோடு சேர்கிறேன். அதுவரை தமிழ்வழிக் கல்வியே பயின்ற என்னை ஆங்கிலவழிக் கல்வி என்று காய்ச்சி எடுக்கிறார்கள் பேராசிரியர்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. கண்களில் ஒரே இருட்டு. அப்போது மதியத்திற்குப்பின் ஒரு தமிழாசிரியர் வந்து அழகு தமிழ் பேசுகிறார். நம்புங்கள் மக்களே சொர்க்கம் என்பது செத்ததும் கிடைக்கும் ஏதோ ஒன்றல்ல. இப்படி அவ்வப்போது கிடைக்கும் பாக்கியங்கள்தாம்.

அதுவரை வீட்டில் மட்டுமே வசித்துவந்தநான் கல்லூரி விடுதியில் வசிக்கிறேன். என் புலம் பெயர் வாழ்வு முதன் முதலில் அங்கேதான், திருச்சியில்தான், ஜமால் முகமது கல்லூரி விடுதியில்தான் தொடங்கியது.

தமிழ்ப் பேராசிரியர் கம்பம் மன்சூர் அலி அவர்கள் இளயவராகவே இருந்தார். இங்கே எவராவது கவிதை எழுதுவோர் இருப்பர். அவர்களிடமிருந்து நாளை ஒரு கவிதையை எதிர் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு கவிதை என்றால் என்ன என்பதை விவரித்தும் கூறியிருந்தார்.

உடனே அமர்ந்து ஒரு கவிதையை அன்று மாலையே எழுதினேன். அவர் அடுத்தநாள் வகுப்பு வந்ததும் நான் எழுதிய கவிதையை அவரிடம் நீட்டினேன். அவரோ அப்படியே சட்டைப்பையில் செருகிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியராய் இருந்திருந்தால், அப்போதே வகுப்பில் அதை அலசிப் பேசி என்னை மகிழ்வித்திருப்பார். ஏமாற்றத்தோடு விடுதிக்குச் சென்று மௌனமாகவே இருந்துவிட்டு உறங்கிவிட்டேன்.

ஆனால் அடுத்த நாள் பேராசிரியர் மன்சூர் அலி அவர்கள் என்னை அள்ளி அனைத்ததைச் சொல்லி மாளாது. தன் வீட்டின் நூலகம் அழைத்துச் சென்று அத்தனை நூல்களையும் நீ வாசிக்க வேண்டும் என்று அள்ளிக்கொடுத்தார். அப்படி ஒரு ஆசான் எனக்கு அதன்பிறகு கிடைத்ததாகச் சொல்லமாட்டேன். 

அன்று என் கல்லூரி தமிழாசிரியர் கேட்டதற்காக நான் எழுதிய கவிதைதான் இது.

தீந்தமிழ்ப் பாடங்களைத்
தித்திக்கப் புகட்டுமெங்கள் தமிழய்யா
நீந்தும் ஆசையை ஏந்திச் சென்றேன்
நீர்சொன்ன கவியாற்றில் நீச்சலிட
பூந்திடச்சில துணிவுகளைப் புகுத்தி
எனதாசையையும் வளர்த்துவிட்டீர்
காந்தம்முன் இரும்பாய்நான்
கவிபுனைய முற்பட்டேன்

பாந்தமாய்க் கவிவடிக்கப்
   பெருந்துணையோ கருத்தென்றீர்
ஆந்தையாய் விழியுருட்டி
   அலசியுமொரு பலனில்லை
ஏந்துக உணர்சிகளென்றீர்
   எங்கிருந்தும் கிட்டவில்லை
சாந்திகெட்டேன் தமிழய்யா
   கவிவருமோ இச்சிறுவனுக்கு

1976
நான் கல்லூரி சென்றபின்னர்தான் உரைவீச்சு வடிவ புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்துவிட்டு விடைபெற்றபோது மாணவர்கள் நினைவுக்கையொப்பம் (ஆட்டோகிராப்) கேட்டார்கள். வாழ்வில் எல்லோரும் மிகப் பெரிய நடிகரிடமோ கவிஞரிடமோ தலைவர்களிடமோதான் நினைவொப்பம் கேட்பார்கள். ஆனால் கல்லூரிநாட்களில் மட்டும்தான் ஒவ்வொரு மாணவனும் மகா உயர்ந்தனாய் நின்று ஒவ்வொருவருக்கும் நினைவுக்கையொப்பம் போடுவான் வாங்கியும்கொள்வான். நேசனும் நேசிக்கப்படுபவனுமாய் இருக்கும் உயர் நிலை அது.

பிரியாவிடை (மாணவர்கள் அனைவருக்கும் ஒன்றுபோலவே நான் எழுதித்தந்த என் முதல் நினைவொப்பம்)

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்புவிழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
என் இனிய நண்பா

கிட்டத்தட்ட இதுதான் என் முதல் புதுக்கவிதை என்று சொல்லவேண்டும். இதை நான் புதுக்கவிதை எழுதுவதாய் நினைத்து எழுதவில்லை. என் மனம்போன போக்கில் சுருக்கமாக நான் எழுதிய நினைவொப்பப் பதிவுதான் இது.

அதோடு எனக்கு மொழியாக்கம் என்பது பிடித்த விடயம். நினைவொப்பம், யுனித்தமிழ் என்பதுபோல என் தேவைக்கேற்ப நான் மொழியாக்கம், சொல்லாக்கம் செய்துகொண்டே இருப்பேன்.

1979
இலக்கிய நண்பர்களோடு சேர்ந்து "கயிறு" என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஓர் அங்கமானேன். கயிறின் நடுப்பக்கக் கவிதை எப்போதும் என்னுடையதுதான். நானே என் கைப்பட அந்தப் பக்கத்தை என் கையெழுத்தில் எழுதி இடுவேன்.

கல்லூரி முடித்ததும், நண்பர்களின் தூண்டுதலால், என் கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினேன்.

தினமும் ஒரு கவிதையேனும் எழுதாமல் உறங்காத நாட்கள் அவை.

”அண்டா கா கசம்! அபூ கா ஹூக்கூம், திறந்திடு சீசேம்!" என்று நான் குளியளறையில் நின்று கத்தியதை அலிபாபா பத்திரிகை ஒட்டுக்கேட்டிருக்க வேண்டும். மகாத்மா காந்தியைப் பற்றி நான் எழுதிய கவிதையை அது பிரசுரித்தது. முதன் முதலில் என் கவிதையை அச்சில் கண்ட நான் ஓரடி உயர்ந்துவிட்டதாய் உணர்ந்தேன்.

முதல் மேடை: நான் முதன் முதலில் மேடை ஏறி என் கவிதை ஒன்றை வாசிக்கிறேன்.  எங்கள் ஊர் மருத்துவர் விபத்தில் எங்களைவிட்டுப் பிரிந்ததற்கான கவிதை அது.
1981 - 1999 சவூதி அரேபியா
1981
ஜூலை மாதம் சவூதி அரேபியா சென்றேன். கல்லூரி முடித்து நான் பணிதுவங்கிய முதல் நாடு சவூதி அரேபியாதான்.

எண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் என் கவிதைகளைத் தொடர்ந்து பிரசுரித்து வந்தது. ஒவ்வொரு பிரதியிலும் என் கவிதை நிச்சயமாக இருக்கும்.

மாலனின் திசைகள் என் கவிதைகளை வரவேற்றது. பிரசுரமான கவிதைகள் எனக்குள் ஆனந்தக் கூத்துகட்டி ஆடின.

1984
"அரபு மண்ணில் இதோ ஓர் அழகு ஊற்று" என்று என்னைப் புகழ்ந்து தலைப்பிட்டு, தாய் இதழின் ஆசிரியர் வலம்புரி ஜான் தன் ஆசிரியர் பக்கத்தில் என் கவிதைகளைப் பிரசுரித்து என்னைப் பெருமைப் படுத்தினார்.

1986
இந்தி-தமிழ் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, டெல்லி பல்கலைக்கழக இந்திப் பேராசிரியராய்ப் பணிபுரிந்த குமாரி ஜமுனா, 1986 அக்டோபர்-நவம்பர் தீபம் இதழில் வெளிவந்த 'உலகம்' என்ற என் கவிதையை அந்த வருடத்தின் தமிழ் மாநில அடையாளக் கவிதையாய்த் தேர்ந்தெடுத்து இந்தியில் மொழி பெயர்த்து, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் (Ministry of Human Resources Development - India) ஆண்டுமலரான வார்சிகி 86ல் வெளியிட்டார்.

1987
கணினியில் அச்சு எந்திரத்திற்கான (Printer) தமிழ் எழுத்துக்களை வடிவமைத்து என் தமிழ்க் கவிதைகளை அச்செடுத்து நண்பர்களுக்கு வழங்கினேன்.

1988
குமுதம் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்களால் தேர்வுசெய்யப்பட்டு பரிசு பெற்றேன்.

சவுதி அரேபியாவில் வாழ்ந்த காலத்தில் நான் ஏராளமான கவிதைகளை எழுதினேன். அவற்றை நூல் வடிவில் கொண்டுவர தீபம் பரிந்துரைத்தது. ஆனால் நான் பெரிய கவிஞனெல்லாம் இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டேன்.

கனடா வந்தபின்னர்தான் சவுதியில் எழுதிய கவிதைகளை நூலாக்கத் தொடங்கினேன்.

கனடாவும் இணையமும்தான் என் தமிழுக்கான என் கவிதைகளுக்கான என் தமிழ் வாழ்க்கைக்கான உண்மையான மேடைகள்.

இணையமும் ஈழத் தமிழ் அறிஞர்களும் என்னை ஊக்குவித்தவர்கள் ஊட்டிவளர்த்தவர்கள்.

1999 – இன்றுவரை கனடா

1999
ஜூலை கனடா வந்தேன்.

கனடாவின் தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் என் கவிதைகளை கனடியத் தமிழர்களுக்கு மின்னஞ்சல் வழியே அறிமுகப்படுத்தியது.

நிலாவிலும் கற்கள் என்ற என் வலைத்தளத்தில் மின்கவிதைத் தொகுப்பொன்றைத் துவங்கினேன்.

2000
என் முதல் இதழ்: தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின் தமிழோசை என்ற பல்சுவைத் தமிழிதழின் ஆசிரியராய் இருந்து அதனை வெளியிட்டேன்.

2001
தங்கப்பதக்கம்: கனடா உதயன் தமிழ் வாராந்திர பத்திரிகை, தனது ஆண்டு விழாவையொட்டி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் கவிஞர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் என் கவிதையொன்றை முதலாவது பரிசுக்குரியதாகத் தேர்வு செய்து திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் கரங்களால் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தது.

2002
இலங்கையின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களோடு கவியரங்க மேடைகள் கண்டேன்.

கனடா உதயனின் தங்கப்பதக்கக் கவிதைத் தேர்வுக்குழுவில் நடுவராக இருந்தேன்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உறுப்பினராகவும் அதன் கவிதைத் தேர்வுக்குழுவில் ஒருவனாகவும் இருந்தேன்.

ஏப்ரல் மாதம் இணைய ”தமிழ்-உலகம்” குழுமத்தின் 'பாரதிதாசன் வைய விரி அவை' நடத்திய கவிதைப் போட்டியில் என் 'தோழியரே! தோழியரே!' கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

என் முதல் கவிதைத் தொகுதியான 'வெளிச்ச அழைப்புகளை' கனடாவில் வெளியிட்டதன் மூலம், தமிழ் நாட்டிலிருந்து வந்து கனடாவில் குடியேறிய தமிழர்களுள் தமிழ்ப் புத்தகம் வெளியிடும் முதல் தமிழன் என்ற பெயர் பெற்றேன்.

வெளிச்ச அழைப்புகள் தொகுதிக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அற்புதமான அணிந்துரை வழங்கி என்னைக் கௌரவித்தார்.

கனடியன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கனடா கீதவாணி போன்ற 24 மணிநேர கனடிய தமிழ் வானொலிகளிலும் கனடா வேங்கூவர் வானொலியிலும் கவிதைகள் வாசிக்கின்றேன்.

பதிவுகள், கீற்று, திண்ணை, திசைகள், நிலாச்சாரல், எழில்நிலா போன்ற பல இணைய மின்னிதழ்களிலும் என் கவிதைகள் வெளிவருகின்றன.

அன்புடன், தமிழ்-உலகம்,  சந்தவசந்தம், உயிரெழுத்து, அகத்தியர் போன்ற யாகூ தமிழ் மின்குழுமங்கள் பலவற்றிலும் தொடர்ந்து எழுதிவருகிறேன்

இணையத்தில் பல கவியரங்கங்களிலும் கலந்துகொள்கிறேன். கவியரங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறேன்.

புத்தகப்புழு இணையக் குழுவில் மட்டுநராக இருந்தேன்.

உயிரெழுத்துக் குழுவின் உரிமையாளராகவும் மட்டுநராகவும் இருந்தேன்.

கனடாவின் தமிழ் ஆரம் தொலைக்காட்சி என்னையும் என் தமிழையும் நேர்காணல் செய்து ஒளிபரப்பியது.

2003
பிப்ரவரி 14, 2003 ஆஸ்தான கவிஞராக தமிழ்-உலகம் மின்குழுமம் என்னை அறிவித்தது.

தினம் ஒரு திருக்குறள் என்று வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலையைக் கோத்து வருகிறேன்.

இணையத்தில் தமிழ்-உலகம் என்ற யாகூ குழுமம் வாயிலாக பாரதிதாசன் வைய விரி அவை நடத்திய கவிதைப் போட்டியில் என் 'அவன்தான் பாரதிதாசன்!' கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

இணையத்தில் புத்தகப்புழு நடத்திய காதல் கவிதைப் போட்டியில் 'கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை' கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

”கனடாவில் தமிழன்” என்ற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரை எழுதி வருகிறேன்

ஏப்ரல் 4, 2003ல் மொன்றியல், கனடாவில் என் வெளிச்ச அழைப்புகள் மீண்டும் வெளியிடப்பட்டது

ஏப்ரல் 13, 2003ல் 'அன்புடன் இதயம்' என்ற என் இரண்டாம் கவிதைத் தொகுப்பின் பிரமாண்டமான வெளியீடு சென்னையில் நடந்தது.

இணையத் தமிழ் வாழ்வின் அடையாளத்திற்காக கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்களிடமும் கனடாத் தமிழ் வாழ்வின் அடையாளத்திற்காக கனடாவில் வாழும் ஈழக் கவிஞர்களுள் என் நேசத்திற்குரியவரான எனக்குத் தங்கப்பதக்கம் பரிந்துரைத்த கவிநாயகர் கந்தவனம் அவர்களிடமும் வேண்டி விரும்பி என் அன்புடன் இதயம் நூலுக்கு அணிந்துரை பெற்றேன்.

கவிதை உறவு - ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கும் சிறந்த கவிதை நூல்களுக்கான துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதுக்கான போட்டியில் என் 'வெளிச்ச அழைப்புகள்' கவிதை நூல் சிறப்புப் பரிசு பெற்றிருக்கிறது. மே மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற கவிதை உறவின் 31ம் ஆண்டு நிறைவு விழாவில் பரிசு வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் ஜி.கே வாசன்,  தனுஷ்கோடி ஆதித்தன், அருளாளர் ஆர்.எம்.வீரப்பன், ஊர்வசி செல்வராஜ், டாக்டர் மோகன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று இதன் நிறுவனர், சிறப்பாசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் எனக்கு அறியத்தந்தார்

தீபாவளி 2003 இலக்கியபீடம் இதழில் 'வெட்டிப் பயல்கள் பேச்சு' என்ற என் கவிதை பிரசுரமானது

டிசம்பர் 13, 2003, என் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அன்புடன் இதயம்' கனடாவில் வெளியிடப்பட்டு ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

இணைய இதழ் திண்ணையிலும் கனடிய தமிழ் செய்தித்தாள்களிலும் மற்றும் வானொலிகளிலும் இவ்விழா பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் கவிதைகளும் வெளியாகின.

எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ்-உலகம் இணைய குழுமம் மூலம் என் அன்புடன் இதயம் கவிதைத்தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப்பட்டது. அது பற்றிய திரு. மாலனின் தலைமை உரையிலிருந்து சில வரிகள் கீழே.

  வரலாற்றின் வைர மணித் துளியில்
  வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.
 
  இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
  இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.
 
  அயல் மொழிகள் முயல்வதற்குள்
  ஆரம்பித்து விட்டோ ம் நாம்.
 
  சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
 
  அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
  அனுமதிக்கப் போவதில்லை.

2004
ஜூன், நிலாவிலும் கற்கள் என்ற பெயரில் திஸ்கி எழுத்துருவில் 1999 லிருந்து செயல்பட்டுவந்த என் வலைத்தளத்தை முழுவதும் யுனித்தமிழுக்கு (யுனிகோடு) மாற்றினேன்.

http://anbudanbuhari.com என்ற முகவரியில் வெளிச்ச அழைப்புகள் என்ற தலைப்பில் அது இயங்கி வருகிறது

2005
மார்ச் 7, முழுவீச்சில் செயல்படும் 'அன்புடன்' என்ற யுனித்தமிழ் கூகுள் குழுமத்தை உலகிலேயே முதன் முறையாக தொடங்கினேன். அது வெற்றிநடை போட்டு திஸ்கி எழுதும் அனைவரையும் யுனித்தமிழுக்கு வரவேற்று ஈராயிரம் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டது

ஏப்ரல், http://anbudanbuhari.blogspot.com/ என்ற முகவரியில் ஒரு வலைப்பூவும் தொடங்கினேன்.

முதன் முதலாக இணையத்தில் இயல்கவிதை, ஒலிக்கவிதை, இசைக்கவிதை, படக்கவிதை என்று கவிதைகளை வகைபிரித்து போட்டி ஒன்றை வைத்து பரிசுகள் வழங்கினேன், எழுத்தாளர் மாலன், வானொலியாளர் ஆசிப் மீரான், நிலாச்சாரல் நிர்மலா போன்றவர்கள் நடுவர்களாய் இருந்தார்கள்

என் மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'சரணமென்றேன்' என்ற காதல் கவிதைகளின் தொகுப்பிற்கு எழுத்தாளர் மாலன் அணிந்துரை தந்தார்.

பச்சை மிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதைத் தொப்பு அச்சேறியது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் இதற்கான அணிந்துரையைத் தந்திருக்கிறார்.

மே மாதம் 9ம் தேதி சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலன் தலைமையில் எனக்கு ”கவிமுகத்தின் அறிமுகம்” என்ற தலைப்பில் அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  அதில் வாழ்த்துரை வழங்க கவிப்பேரரசு வைரமுத்து வந்திருந்தார். பத்திரிகையாளர்களும் கவிஞர்களும் பார்வையாளர்களாக வந்து சிறப்பித்தார்கள். கவிஞர் இந்திரன், அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன், படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகச் செல்வி ஆகியோர் சரணமென்றேன் என்ற என் மூன்றாவது கவிதை நூலை விமரிசித்தார்கள்.

'வரவு செய்கிறவன் தமிழ் செய்வதில் ஆச்சரியமில்லை, செலவு செய்கிறவன் தமிழ் செய்வதுதான் ஆச்சரியம். புகாரி, நீங்கள் கவிஞனாக இருப்பது தான் கவிதை, நாங்களல்ல' இப்படி கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்திப் பேசிய கவிஞர் புகாரி தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவரல்லர். அவரின் கவிதையின் வாசனை படாத தமிழ் இணைய இதழ்கள் இல்லை எனலாம்.

கவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நயங்கள் படைத்தவை. மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளைப் பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கும் கவிஞர் புகாரி இது வரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவருடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக. - இணைய இதழ் நிலாச்சாரலில் கவிஞர் சக்தி சக்திதாசன்,  லண்டன்

அக்டோபர் 1, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில், சரணமென்றேன் என்ற என் மூன்றாம் தொகுதியும் பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காம் தொகுதியும் திரு சிவதாசன் தலைமையில் வெளியிடப்பட்டது. கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் குலமோகன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். உதயன் ஆசிரியர் ஆர் என் லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.

நூல் விற்பனை மற்றும் நன்கொடையின் பெரும்பகுதியைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்காக வழங்கினேன்.

2009
இணையத்தின் தமிழ் இடுகைகளைத் திறட்டித் தரும் “தமிழ்மணம்” என்னையும் அழைத்தது. நட்சத்திரப் பதிவாளன் என்றது. தமிழ் வானத்தில் நானும் ஓர் ஒளிப் புள்ளியாய் மினுக்கலாம் என்று உடனே ஒப்புதல் தந்துவிட்டேன். 

கொஞ்சம் தமிழ், கொஞ்சம் காதல், கொஞ்சம் புதுக்கவிக்குறள், கொஞ்சம் கனடா என்று சில கொஞ்சங்களைப் பஞ்சமின்றிப் பொழியலாம் என்று ஆசைப்படுகிறது இந்த நெஞ்சு என்று முன்னுரை எழுதினேன்

இணையில்லாச் சேவைக்கோர் மணமே - தமிழ்
இடுகைகள் திரட்டிடும் வெற்றித் தமிழ்மணமே
முனைவர்கள் அறிஞர்கள் வாழ்த்த - தமிழ்
முதற்பெருந் திரட்டியே வாழ்க நீ வாழ்க

நட்சத்திரப் பதிவாளன் என்றாய் - எனை
நன்றித்தேன் நதியாக்கித் தமிழ்போல வென்றாய்
முத்தத்தமிழ் நாளும்நான் செய்வேன் - வலை
முற்றத்தில் கொட்டித்தினம் இச்சாகத் தருவேன்

2010
நவம்பர் 21 சென்னையில் திரிசக்தி பதிப்பகம் ’காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ என்ற என் ஐந்தாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. கபிலன் வைரமுத்து விமரிசன உரை வழங்கினார்

நவம்பர் 26 திருச்சியில் உயிர் எழுத்து பதிப்பகம் ‘அறிதலில்லா அறிதல்’ என்ற என் ஆறாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது.

2011
சிங்கப்பூரிலிருந்து தயாரான ஆல்பத்திற்காக இஸ்லாமியப் பாடல்கள் எழுதி இருக்கிறேன்

2012
கனடாவில் இருந்துகொண்டே இணையத் தொடர்பு வழியாகவும் தொலைபேசி வழியாகவும் நெல்லை சந்திப்பு என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதி இருக்கிறேன்

என் முதல் நான்கு கவிதை நூல்களும் மின் நூல்களாய் உருவாக்கப்பட்டு நிலாச்சாரல் டாட் காமில் கிடைக்க ஏற்பாடாகி உள்ளது

என் கவிதைகளுள் பல இசையமைக்கப்பட்டு பாடல்களாக்கப்பட்டுள்ளன

2018
”எங்கள் தமிழ் மொழி” என்று ஒரு தொண்டியக்கத்தினைத் தொடங்கினேன். முகநூல், டிவிட்டர், வாட்சப், வலைப்பூ போன்ற சமூக தளங்களில் பரப்புரைகளைச் செய்துவருகிறேன்.

உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைப் பிஞ்சு நாவுகளிலும், தமிழ் ஈர இருக்கை இட்டு என்றென்றும் வாழும் மொழியாய் வாழ்ந்திட வேண்டும். அதற்கான தொண்டுப்பயணமே ’எங்கள் தமிழ் மொழி’

உலக நாடுகளில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப் படுகிறது. அது அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். புலம்பெயர் தேசங்களின் மொழிகள் தமிழ் மொழியை விழுங்கிவிட எங்கள் தமிழர்கள் விட்டுவிடக் கூடாது

தமிழுக்குத் தாய்நாடு ஒன்றல்ல ஒரு நூறு பல நூறு என்று காட்டி மகிழ வேண்டும்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்றான் பாரதி

தமிழ் வெறும் மொழியல்ல
கற்புமிகு பண்பாட்டின் பாடசாலை
கலையாத கலாச்சாரத்தின் அடையாளம்

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவுகள் தமிழாக வேண்டும்
தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழாக வேண்டும்

தமிழில் சிந்தித்துத் தமிழாய் வாழும் இளைஞர்கள் இன்று
மெல்ல மெல்லக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்

இளைஞர்களைத் தமிழின்பால் ஈர்க்காமல்
புலம்பெயர் வாழ்வு புழுதிவாழ்வாகித்தானே போகும்

நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக....
அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக
தமிழர் மேடைகள் அமைந்திடல் வேண்டும்

ஐம்பதைக் கடந்தவர்களே
வந்து நொந்து அமர்ந்திருக்கும் முதியோர்க் கூடமாய்
நம் தமிழ் மேடைகள் இருந்தால்
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்
ஒற்றைத் தலைமுறையோடு கருகிச் சிதையாதா
கயானாக் கதை என்ன நாம் அறியாததா

ஒவ்வொரு புலம்பெயர் ஊரிலும் ஒரு தமிழ்ப்பள்ளியேனும்
இலவசமாய் நடத்தப்பட வேண்டும்
அங்கே தமிழர் இலவச உணவும் வழங்கப்படவேண்டும்
வீடுவீடாய்ச் சென்று தமிழ்ப்பிள்ளைகளை அழைத்துவர
இலவசப் பேருந்துச் சேவை தொடங்கப்படவேண்டும்
இதுவே உலகத்  தமிழர்களின் முன்
என் உறுதியான வேண்டுகோள்
2019
கனடாவில் 28 ஆண்டுகளாகப் புலம்பெயர்த் தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த தகவல் ஆக்கங்களை வெளியிட்டுச் சேவையாற்றிவரும் தமிழர் தகவல் பத்திரிகை, தன் 28வது விருது விழாவில் ’கவிதைக்கு மகுடம் சூட்டும் முன்னணிக் கவிஞர் புகாரி’ என்று பாராட்டி 2019 பிப்ரவரி 24ம் தேதி  இலக்கிய விருதுடன் தங்கப்பதக்கமும் சூட்டி மதிப்பளித்தது.

நீண்ட காலமாக
கவிதை நூல்களுக்கு அணிந்துரைகள் அளித்துள்ளேன்
கனடிய தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள்
நேர்காணல்கள்
பட்டிமன்ற இயக்கம், தலைமை
சிலம்புடை அரங்கம் (நீயா நானா) நிகழ்ச்சி இயக்குனர், நடத்துனர்
தீதும் நன்றும் (நீயா நானா போன்றது) நிகழ்ச்சியில் பங்கேற்பு
தமிழினி போட்டிகளின் நடுவர்
சங்கங்களில் சேவை

வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவை - அமெரிக்கா
முத்தமிழ்ச் சங்கம் - கலிபோர்னியா
தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் - கனடா
தமிழ்நாடு பல்கலாச்சாரச் சங்கம் - கனடா
தமிழ் எழுத்தாளர் இணையம் - கனடா
கனடா தமிழ்ச் சங்கம் - கனடா
வாட்டர்லூ தமிழ்ச் சங்கம் - கனடா
தமிழ் அரங்கம் - கனடா
போன்ற பல அமைப்புகளில்...

· கவியரங்க இயக்கம் மற்றும் தலைமை
· பட்டிமன்றம் இயக்கம் மற்றும் தலைமை
· நாடகங்கள் இயக்கம்
· சிறப்புச் சொற்பொழிவுகள்

    கனடிய வானொலிகளில்....

· கவிதை நேரம் நிகழ்ச்சி கீதவாணியில் என்னைக் கொண்டே செய்யப்பட்து
· கவியரங்கள்
· பட்டிமன்றங்கள்

    இணையத்தில்....

· முகநூலில் 5000 நண்பர்கள் என்ற எல்லையைத் தொட்டு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் துணுக்குகள்
· டிவிட்டரில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் கலந்துரையாடல்கள்
· வலைப்பூவில் கவிதைகள்
· இணைய பத்திரிகைகளில் கவிதைகள் மற்றும் கட்டுரைகள்
· வாட்சப் குழுமங்களில் கவிதைகள் மற்றும் கலந்துரையாடல்கள்


இதுவரையிலான என் கவிதைத் தொகுதிகள்:

1. வெளிச்ச அழைப்புகள்

தலைப்பு: வெளிச்ச அழைப்புகள்
அணிந்துரை: கவிப்பேரரசு வைரமுத்து
வருடம்: 2002

சிறப்பு:               
· இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவிலேயே முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல். டொராண்டோவில் வெளியிடப்பட்டது.
· கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார்    இராஜம்மாள் விருது சிறப்புப் பரிசு

2. அன்புடன் இதயம்

தலைப்பு: அன்புடன் இதயம்
அணிந்துரை: கவிநாயகர் வி. கந்தவனம்
வாழ்த்துரை: கவிமாமணி இலந்தை சு. இராமசாமி
வருடம்: 2003

சிறப்பு:               
· எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணைய சரித்திரத்திலேயே இணையத்தில் வெளியிடப்பட்ட முதல் நூல்
· தமிழ்மொழி மற்றுமென்றில்லாமல் வேறு எந்த மொழிக்குமே இணையம் வழி நிகழ்ந்த முதல் நூல் வெளியீடு என்ற பெருமை இதற்கே உண்டு
· சென்னையில் நிகழ்ந்த கற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் இதன் 'தண்ணீர்' கவிதை காட்சிக்கு வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்பினைப் பெற்றது
· கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இதன் 'தண்ணீர்' கவிதை பங்கேற்றுள்ளது.
· கல்லூரி விழா ஒன்றில் எழுத்தாளர் மாலன் அவர்களால் ’தண்ணீர்’ கவிதை பாராட்டிப் பேசப்பட்டது

3. சரணமென்றேன்

தலைப்பு: சரணமென்றேன்
அணிந்துரை: மாலன்
வருடம்: 2004

சிறப்பு:               
· முழுவதும் காதல் கவிதைகளையே கொண்ட என் முதல் தொகுப்பு
· சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கவிப்பேரரசு வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க வெளியிடப்பட்டது.
· தினம் ஒரு கவிதையில் தொடராக வந்தது

4. பச்சைமிளகாய் இளவரசி

தலைப்பு: பச்சை மிளகாய் இளவரசி
அணிந்துரை:      எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
வருடம்:          2005

சிறப்பு:               
· கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது.

5. காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

தலைப்பு: காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பதிப்புரை: இசைக்கவி ரமணன்
வருடம்: 2010

சிறப்பு:
· சென்னையில் 2010 நவம்பர் 21 பாரதீய வித்யாபவனில் டாக்டர் சுந்தர்ராமன் வெளியிட கவிஞர் கபிலன் வைரமுத்து பெற்றுக்கொண்டு விமரிசனம் செய்தார்..

6. அறிதலில்லா அறிதல்

தலைப்பு: அறிதலில்லா அறிதல்
வருடம்: 2010

சிறப்பு:
· திருச்சியில் 2010 நவம்பர் 26 அன்று ரவி குளிர்ச்சிற்றரங்கில் வெளியிடப்பட்டது..


அன்புடன் புகாரி (20031224) - என்னைப் பற்றிய என் கவிதை

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்று அந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி

உள்ளத்தின் பரப்புகளை
உழுதுநின்ற உணர்வுகளைச்
சொல்லும்சுவை நானுணர்ந்தேன்
சொன்னமொழி என்மொழிதான்
வென்றுவிட்ட நினைவெழுந்து
வெள்ளலையாய் வந்துமோத
கன்றுமனத் துள்ளலோடு
கவிஞனென கண்சிலிர்த்தேன்

பெற்றெடுத்த காதுகளில்
புகுந்ததிந்தச் செய்திவெடி
கற்றுபலப் பதவிவேண்டும்
கைநிறைய காசுவேண்டும்
வெற்றுக்கவி ஆகிவிட்டால்
வேதனையே வீடுசேரும்
முற்றுப்புள்ளி இட்டுவிடு
மூட்டைகட்டி கொளுத்திவிடு

தொட்டு ஒரு வரிமீண்டும்
தொடர்ந்தெழுதிப் போனாலோ
பட்டையாய்த் தோலுரிப்பேன்
பட்டினியே இருட்டறையில்
கட்டைக்குரல் கடுகடுக்கக்
கண்டிப்பாய்க் கூறிவிட்டார்
முட்டியது நீர் அன்றே என்
முதற்கவிதை பிறந்ததடா

0

பதின்வயதில் விளையாட்டு
பருவத்தின் குறுகுறுப்பு
புதுவனப்பில் தரையிறங்கி
பகல்நிலாக்கள் வலம்போக
மதுக்குடத்தில் மனம்விழுந்து
மதிமயங்கிக் கூத்தாட
உதித்தகவி கொஞ்சமல்ல
ஒவ்வொன்றும் முத்தழகு

காதலெனும் புயல் ஊற்றைக்
கவியேற்றாக் கவியுண்டோ
காதல்நதி குதிக்காமல்
கவிஞனென்று ஆனதுண்டோ
காதலுக்குள் விழும்போதும்
காதலாகி எழும்போதும்
காதலோடு அழும்போதும்
கவிதைகளோ பலகோடி

கவிதைகளால் சிறகசைத்த
காகிதங்கள் பார்வையிட்டு
கவிஞரே என அன்போடு
கற்றுத்தரும் தமிழய்யா
உயிர்மலர எனையழைத்து
உற்சாகம் தந்திடுவார்
பயிர்வளர்க்கும் உழவன்போல்
பாசமுடன் அரவணைப்பார்

அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்
ஆயிரமாய் அள்ளிவந்து
படிக்கவேண்டும் என்றெனக்குப்
பரிவோடு தந்திடுவார்
விடுப்பில்தான் படிக்கவேண்டும்
வேண்டாமிது இப்போது
இடுப்பொடியும் பாடமுண்டு
எப்படியும் முடிக்கவேண்டும்

மருத்துவனாய் எனையாக்க
மனமெல்லாம் கனவுகளாய்
இருக்கின்றார் என்வீட்டில்
எனைவிடுவீர் இப்போது
வருத்தம்தான் எனக்குவேறு
வழியுண்டோ  கூறுங்கள்
விருப்பத்தை ஒத்திவைத்து
விடைகூறிப் புறப்பட்டேன்

போதுமான மதிப்பெண்கள்
பெற்றேநான் தேர்ந்தபோதும்
மோதிமுட்டிப் பார்த்தேன் நான்
முடியவில்லை மருத்துவமும்
சாதிவழிச் சலுகையில்லை
சந்துவழி வசதியில்லை
வேதனையில் விளைந்ததடா
வைரமணிக் கவிவரிகள்

0

பட்டமொன்று பெற்றுவிட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து
கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போல என்னைப்
பாதையோரம் நிறுத்தியது

எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்
சொல்லவொருச் சொல்லுமில்லை
சுகம்பெற்றேன் சத்தியமாய்
இல்லாமைப் பேய்விரட்டி
என்வீட்டைக் காத்திட்டேன்

பாலைவனச் சாலைகளில்
பார்த்ததெலாம் நெருப்பெனினும்
ஊளையிடும் வறுமைபோக்கி
உறவுகளைக் காத்துநின்று
மாலையிட்டு மக்களீன்று
மனம் முழுதும் பசுமை பூக்க
வேலை தந்தப் பாலைவனம்
வேதனையைத் தீர்த்த தெய்வம்

பெற்ற மண்ணை உறவை நட்பை
பிரிந்துவந்த சோகவிதை
நெற்றிவரி இழுத்துச்சென்ற
நிலம்விழுந்து முட்டிமோத
பெற்றதுன்பம் கொஞ்சமல்ல
பிரிவென்பதும் வாழ்வுமல்ல
கற்றபெரும் அனுபவங்கள்
கவிதைகளாய் வெடித்ததடா

0

வருடங்கள் மூவாறு
வாழ்வளித்தப் பாலையிலே
உருண்டோடி விட்டபின்னர்
ஊர்தேடிப் புறப்பட்டேன்
அரும்புகளின் கல்வியெண்ணி
அப்படியே திசைமாற்றம்
அருமைநிலம் கனடாவில்
அவசரமாய்க் குடியேற்றம்

கனவுகண்ட புதியபூமி
கருணைமனத் தூயவானம்
இனங்களெலாம் இணைந்துபாடும்
இனியரதம் கனடியமண்
குணக்கேடு மதவெறியர்
குத்துவெட்டு பகையில்லா
மனிதநேயம் போற்றுமிந்த
மண்பெருமை விண்பாடும்

இணையத்தின் தமிழுக்கு
இங்குவந்தே என்வணக்கம்
முனைதீட்டிக் கவிபாட
முத்தமிழின் புதுச்சங்கம்
அணையுடைத்துக் கவிபாடும்
ஆற்றுவெள்ள உற்சவம்போல்
இணையமெங்கும் தமிழ்வாசம்
இதயமெங்கும் தேரோட்டம்

குளிர்தீண்டக் கவிகொஞ்சம்
கொட்டும்பனி கவிகொஞ்சம்
மலர்வண்ணம் இலைதாவும்
மரக்கிளையின் கவிகொஞ்சம்
வளர்தமிழை விண்ணேற்றி
உலகமெலாம் மழைபொழியும்
புலம்பெயர்ந்த ஈழத்தவர்
புகழ்பாடி கவிகொஞ்சம்

எழுதியெழுதி கவிதைகளை
இணையமெங்கும் தூவினேன்
எழுதிவைத்தத் தொகுப்புகளை
இங்கிருந்தே வெளியிட்டேன்
அழகுதமிழும் கணிமடியும்
அமுதூட்டித் தாலாட்ட
அழகழகாய்த் தேன்மழையாய்
அருங்கவிதை பொங்குதடா

0

பார்க்கவரும் விழிகளெல்லாம்
பார்ப்பதற்கே வருவதில்லை
கோர்க்கவரும் விரல்களுமே
கோர்ப்பதற்கே வருவதில்லை
ஊர்ப்பாட்டைக் கேட்டிருந்தால்
உன்பாட்டை மண்மூடும்
மார்தட்டித் திடங்கொண்டால்
மலைத்தொடரும் பொடியாகும்

யானைநடை போட்டாலும்
இடறிவிழும் காலமுண்டு
தேனமுதச் சொல்லெடுத்துத்
தித்திக்கப் பொய்யுரைத்து
பூனைபோலப் பாலருந்தப்
புறப்பட்டு வருவார்பின்
கானகத்து முட்புதரில்
கதியற்று நிறுத்திடுவார்

நிலவோடு விழிகளாட
நிலத்தோடு கால்களாட
விலகியோடும் பனிமேகம்
விருந்தாகும் சிலநேரம்
தழுவவரும் யோகங்களைத்
தடைபோடும் பாவங்கள்
நழுவிவிழும் அடிகளுக்கும்
நாடிவரும் ஒத்தடங்கள்

கோடுகளில் நதியோட்டம்
கரைகளிலோ நெஞ்சோட்டம்
ஏடுகளில் காணாத
எத்தனையோ கனவோட்டம்
கூடிவரும் வாய்ப்புகளில்
குறைவில்லாக் கொண்டாட்டம்
தேடுகின்ற அமைதிமட்டும்
தென்படாத திண்டாட்டம்

எத்தனையோ இவைபோல
என்வாழ்வில் காண்கின்றேன்
அத்தனைக்கும் மருந்தாக
ஆனதொரு மந்திரந்தான்
சொத்தைகளும் சரியாகும்
சுடர்வெற்றி வாழ்வாகும்
நத்தைபோல நகர்ந்தாலும்
நம்பிக்கை முன்னிறுத்து

நம்பிக்கை வளர்த்தெடுக்க
நாளெல்லாம் கவியெழுதி
தெம்புக்கோர் பாட்டென்று
திசையெங்கும் பாடவைத்து
அன்புமனம் அமுதளக்க
அன்னைத்தமிழ் எழுதுகிறேன்
அன்புக்கரம் வளைத்துலகை
அரவணைத்து வாழுகின்றேன்


நேர்காணல் - நிலாச்சாரல்

http://www.nilacharal.com/tamil/interview/tamil_interview_235_1.asp

"வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை"
இலக்கியச் சுடரொளி - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி

'வரவு செய்கிறவன் தமிழ் செய்வதில் ஆச்சரியமில்லை. செலவு செய்கிறவன் தமிழ் செய்வதுதான் ஆச்சரியம். புகாரி, நீங்கள் கவிஞனாக இருப்பது தான் கவிதை, நாங்களல்ல' இப்படி கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்திப் பேசிய கவிஞர் புகாரி தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவரல்லர். அவரின் கவிதையின் வாசனை படாத தமிழ் இணைய இதழ்கள் இல்லை எனலாம்.

கவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நயங்கள் படைத்தவை. மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளைப் பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கும் கவிஞர் புகாரி இது வரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவருடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக:


1) கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துதலின் பின்னணியில் அமைந்தது?

திட்டம் தீட்டிக்கொண்டு நான் என் முதல் கவிதையை எழுத அமரவில்லை. என் முதல் கவிதை எதுவென்றே எனக்குத் தெரியாது என்பதுதான் என் ஞாபக இடுக்குகளில் ஒட்டிக்கிடக்கும் உண்மை.

இன்றும் நான் என் அடுத்த கவிதையை எப்போது எழுதுவதென்ற திட்டமும் இல்லை, அது எதைப் பற்றியது என்ற திடமும் இல்லை. சட்டென கொட்டும் மழைக்குத் திட்டங்கள் இருப்பதில்லை. மிக இயல்பாக அது பொழிகிறது.

அடையாளம் தெரியாத அடர்த்தியான சிற்சில தாக்கங்களால் உள்ளுக்குள் கொதிபடும் எவையெவையோ சட்டென்று ஆவியாகின்றன. ஆவியானவை எல்லாம் எப்போதென்றறியாத விசித்திரப் பொற்கணங்களில் இதயவெளிகளில் கவி இழைகளாய்க் கருக்கொள்கின்றன, சற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு தனிமைப் பொழுதில் வீரியம்பெற்ற அந்த உணர்வுகள் கறுப்புக் குடை கண்ட பசுக்களாய் நரம்புகளில் வெறித்துக் கொண்டோட, கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுகின்றன கவிதைகளாய். பின் அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, அறிவின் சுடரொளியாலும் மொழியின் உளிகளாலும் தேவைக்கும் ரசனைகளின் உச்சத்திற்கும் ஏற்ப தட்டித் தட்டி செம்மையாய்ச் செதுக்க வேண்டியதுதான் என் மீதப்பணி.

புத்தி மொட்டுக்கள் பூத்துச் செழிக்காத பிஞ்சு வயதில் சிறுவர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிக்கொண்டிருந்தேன். என்னை இழுத்து நிறுத்திய கலைகளையெல்லாம் நின்று நிதானித்து ஆழமாய் ரசித்தேன். என்னை வேரோடு விழுங்கிய வார்த்தைகளில் எல்லாம் விழுந்து விழுந்து தொழுதேன். என்னை அறியாமல் ஆடிய கால்களும் அதனோடு அசைந்த இதயப் பசும்புல் பரப்பும் இசையின் ஆளுமையால் என்று உணராத வயதிலேயே மயங்கி நின்றேன். நெகிழ்ச்சியோடு முட்டிய கண்ணீர் மணிகள்தாம் என் ரசனையின் உயரத்தை எனக்கு அடையாளம் காட்டித் தந்தன. எதுவுமே அறியாதவன், உணர்வுகளின் தேவைகளால் எல்லாமும் ரசித்தேன்.

கவிதைப் பயிற்சி, இசைப்பயிற்சி, ஓவியப் பயிற்சி என்று முறையான எந்தக் கலைப் பயிற்சியும் என்னிடம் இல்லை. ஆனால் என் இதயம் கவிதைகளை நேசிக்கவே துடித்துக் கொண்டிருப்பதுபோலவும், என் செவிகள் இசையைக் கேட்கவே திறந்து கிடப்பதுபோலவும், என் விழிகள் அழகினை ரசிப்பதற்கே ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் உணர்வேன் எப்பொழுதும்.

என்றோ என் நினைவு தெளிவில்லாத நாளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன் என்றாலும், பல காலம் என்னை அறிந்த பலருக்கும் நான் கவிதை எழுதுவேன் என்றே தெரியாது.

2) உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவைகள் எந்த இடத்தில் கைகோர்க்கின்றன எந்த இடத்தில் விலக முற்படுகின்றன ?

அருமையான கேள்வி. வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியற்று வாழ்பவனே கவிஞன். இதனால் அவன் எதிர்கொள்ளும் கீறல்களையும் முத்தங்களாகவே ஏற்றுக்கொள்கிறான்.

கவிதைகளுக்காக வாழ்க்கையா வாழ்க்கைக்கு வணக்கம் செலுத்தும் விதமாய்க் கவிதைகளா என்று நான் என்னையே கேட்டுப் பார்த்ததுண்டு.

என் ஆயுளெனும் பெரும்பாலையில் வாழ்க்கை அவ்வப்போது கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது. அதன் தித்திப்பு முத்தங்களும் திரும்பியோட ஏங்கும் நினைவுகளும் விழிகளெங்கும் கவிதைகளாய்ப் பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன. உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட இதயக் கணங்களே கவிதைகள்.

வாழ்க்கையைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எனக்குள் ஞான முட்டைகள் உடைந்து கவிதைக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன. கவிதைகளைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எண்ணப் பொறிகள் சிதறி என் மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன.

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை ஏனெனில் அது என்னுடைய இயல்பு. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் ஏராள இடைவெளி ஏனெனில் அது வாழ்க்கையின் சிதைவு.

வாழ்க்கையை வளைத்து கவிதை ரதம் ஏற்றும் தவ முயற்சிகளே கவிதைகளாயும் நிகழும் வாழ்க்கையாயும் என்னோடு. என்னளவில் நான் வெற்றி பெற்றே வாழ்ந்துவருகிறேன்.

3) வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொழிலாக எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோமா என்று எண்ணியதுண்டா ?

எனக்கு அப்படித் தோன்றியதில்லை. ஆனால், இன்றெல்லாம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம்.

எழுத்தைத் தொழிலாகக் கொள்ளும் நிலை கண்டிப்பாக வளரவேண்டும். ஆனால் எழுதும்போது தொழிலுக்காக என்று எழுதக்கூடாது. அதாவது எழுதுவோர் வயிற்றைக் காயவைக்கும் அவலம் நீடிக்கக் கூடாது. குடும்பத்திற்கு அருகதையற்றவர்கள் என்ற நிலையிலேயே எழுத்தார்களை வைத்திருப்பது மனித இனத்திற்கே அவமானம்.

எல்லோருக்கும் எழுத்து கைவராது. கைவந்தவர்களின் காலை வாராதிருக்க வேண்டும் இந்த உலகம். பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழவிடவில்லை.

தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.

நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை.

எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு.

கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது.

4) உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் பற்றியும் கூறுவீர்களா?

வானூறி மழை பொழியும்
  வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
  தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
  கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
  பசியாறும் உரந்தையில்... நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு.  உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

ஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே எனக்குக் கவிதைகளாகின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.

5) நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் இருக்கிறதா? எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?

நான் எழுதிய முதலாவது கவிதை எதுவென்ற எனக்கு ஞாபகம் இல்லை. நான் எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன் என்றும் எனக்குத் தெரியாது. என் ஞாபகங்களில் நான் எதையோ எழுதினேன், எதையோ உரக்கச் சொல்ல்லிக்கொண்டு திரிந்தேன் என்பதுமட்டும் ஞாபகம் இருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய ஒரு கவிதையை என் பள்ளி நண்பன் கோபி கிருஷணனிடம் தயங்கித் தயங்கிக் காட்டி வெட்கப்பட்டது நினைவிருக்கிறது

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தமிழ் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள் என்னைக் கவிஞரே என்று அழைப்பார். அப்போதெல்லாம் இசைக்குள் மட்டுமே நான் எழுதி வந்தேன்.

நான் கல்லூரி சென்றபின்னர்தான் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

6) பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னணி ஏதாவது இருக்கிறதா?

அது என் பாட்டி வைத்த பெயர். கனடா வானொலி நேர்காணல்களிலும், தொலைபேசி வழியாகவும், நேரிலும் பலர் ஆர்வமாக இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழாவில்தான் நான் அந்தக் கதையைச் சொன்னேன். அங்கே எதைச் சொன்னேனோ அதையே இங்கேயும் சொல்கிறேன்.

பலரும் தான் ஒரு கவிஞனானதற்கு ஒரு பெண்தான் காரணம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். "நான் கவிஞனென்றால் அதெல்லாம் அந்த அழகியின் முகம் பார்த்து" என்றும் "அவள் கவிஞனாக்கினால் என்னை" என்றும் பல திரையிசைப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள். நான் கவிஞனானதும் ஒரு பெண்ணால்தான். அது வேறு யாருமல்ல என் பாட்டிதான்.

நன்றாக ரசித்து கதை சொல்லத் தெரிந்த பாட்டி கிடைக்கப்பெற்றவர்களெல்லாம் நிச்சயம் கவிஞனாகிவிடுவார்கள் :)

என் பாட்டி லயித்துச் சொன்ன பச்சைமிளகாய் இளவரசி கதையின் தலைப்புதான் முழுமையாய் என் ஞாபகத்தில் இருக்கிறதே தவிர வேறெதுவும் தெளிவாய் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

முன்பொரு காலத்தில், பச்சைமிளகாய்புரி பச்சைமிளகாய்புரி என்று ஒரு நாடு இருந்ததாம்.  அதை அழகான ஓர் அரசன் ஆண்டுவந்தானாம். அவன் ஓர் அழகான பெண்ணப் பார்த்து காதலில் விழுந்தானாம், அவளையே மணமும் முடித்தானாம். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லையாம். இப்படியோர் அன்பான கணவனுக்குத் தனனால் ஒரு பிள்ளையைப் பெற்றுத்தர இயலவில்லையே என்ற கவலையிலேயே மனம் உடைந்து அவள் இறந்துவிட்டாளாம். கதறி அழுத அரசன் அவளை ஓர் அழகிய தோட்டத்தில் புதைத்துவிட்டு தினமும் அவள் சமாதியின் முன்னமர்ந்து கண்ணீர் விடுவானாம். சில தினங்களில் அவள் சமாதியின் மீது ஓர் அழகான பச்சைமிளகாய்ச் செடி முளைத்ததாம். அதில் மிக வசீகரமாகவும் பெரிதாகவும் ஒரே ஒரு பச்சைமிளகாயும் முளைத்ததாம். அது வளர்ந்து வளர்ந்து பத்துமாதங்கள் கழிந்ததும், பட்டென்று வெடிக்க ஓர் இளவரசி அதிலிருந்து வெளிவந்தாளாம்.

அவளோ அழகென்றால் அழகு அப்படி ஓர் அழகாம். சூரியனைவிட வெளிச்சமாக நிலவை விட குளிர்ச்சியாக மலரைவிட மென்மையாக என்று பாட்டி சொல்லச் சொல்ல அந்தப் பேரழகியின் அழகு என் அடிமனதில் அப்படியே சென்று தங்கிவிட்டது.

அந்தப் பச்சைமிளகாய் இளவரசியை என்றோ என் வாழ்வில் ஒருநாள் சந்திப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு மெல்ல மெல்ல அவளை மறந்தும்போய் விட்டேன். நாட்கள் உருண்டோடின. எனக்குத் திருமணமும் ஆனது. ஆனால் என் பச்சைமிளகாய் இளவரசியைப் பார்க்கவே இல்லை. ஆனால், என் திருமணமான பத்தாவது மாதம் எனக்கே பிறந்தாள் அந்தப் பச்சைமிளகாய் இளவரசி.

என் மகளுக்காக நான் சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று இந்தத் தொகுப்பிலும் உள்ளது. அந்தக் கவிதையின் பெயர்தான் பச்சைமிளாய் இளவரசி.

நகைச்சுவை உணர்வுகளோடுதான் நான் இந்தத் தலைப்பை என் நான்காவது கவிதை நூலுக்கு வைத்தேன். பலராலும் அது பாராட்டப்படுவது மகிழ்வினைத் தருகிறது.

7) நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை? சமீபத்தில் ரசித்த கவிதை எதுவென்று சொல்ல முடியுமா?

ஆழமான பொருள் கொண்டவை. அழுத்தமான உணர்வு கொண்டவை. இறுக்கமான நடை கொண்டவை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புத்தம் புதியாய் இருப்பவை. என்றென்றும் என் உயிரைவிட்டு விலகாத நிரந்தர உயிர் கொண்டவை.

அவை எவையென்று சொல்வது அத்தனை எளிதான காரியமல்ல. அங்கங்கே அவற்றின் கண்ணசைப்புகளைக் கண்டிருக்கிறேன். எங்கெங்கோ அவற்றின் முகவரித் துண்டுகளை முகர்ந்திருக்கிறேன். இன்னும் எழுதப்படவில்லையோ என்றுகூட சிற்சில பொழுதுகளில் தேடல் தவத்தால் விழி வதை கொண்டிருக்கிறேன்.

மற்றபடி, என்னைச் சில கவிதைகள் இழுத்தணைத்து முத்தமிட்டிருக்கின்றன. சில உரசிக்கொண்டு போயிருக்கின்றன. சில ரகசியமாய்ப் புணர்ந்திருக்கின்றன. சில கைகோத்து நடந்திருக்கின்றன. சில கண்ணீரோடு கண்ணீரை விசாரித்திருக்கின்றன. என் ரசிப்பு வட்டம் மிகவும் அகலமானது. அதனுள் நேற்றே முளைத்த பசும்புல் பச்சை தலைகாட்டிச் சிரிக்கும். என்றோ எழுதிய ஓலை வரிகளின் வாசனை மொட்டுகள் அவிழும்.

எழுதிய எழுத்துக்களில் சில என்னை எட்டிப் பார்த்துப் புன்னகைக்கும். எழுதப்படாத மௌனத்தில் சிலிர்ப்பள்ளி வீசும்.

8) உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாளர்கள் யார்?

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவண்ணம்தான் இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் என்ற பெயர் பெற்றிருந்தாலும் சரி பெறாமலேயே எழுதிக்கொண்டிருந்தாலும் சரி.


9) இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல் பற்றிக் கூறுவீர்களா?

அது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு. 2004 பிப்ரவரி 8ல் தொடங்கி பத்து தினங்களுக்கு திசைகள் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் தலைமையில், லண்டன் பல்கலைக் கழகம் பேராசிரியர் சிவாபிள்ளை முன்னிலையில், தமிழ்-உலகம் குழுமம் இணையப் பந்தலில் என் அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப் பட்டது. அது பற்றிய திரு. மாலனின் தலைமை உரையிலிருந்து சில வரிகள் கீழே.

   வரலாற்றின் வைர மணித் துளியில்
   வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.

   இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
   இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.

   அயல் மொழிகள் முயல்வதற்குள்
   ஆரம்பித்து விட்டோ ம் நாம்.

   சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
   அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
   அனுமதிக்கப் போவதில்லை.

http://www.anbudanbuhari.com/linv00.html

10) அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது சொல்லுங்களேன் ?

நான் இணையத்திலும் குழுமங்களிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். 2005 மார்ச் மாதம் வரை நான் உறுப்பினராகவும், மட்டுனராகவும், உரிமையாளராகவும் இருந்த இணையக் குழுமங்கள் எல்லாம் யாகூ குழுமங்களாகும். அங்கே திஸ்கியில்தான் எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைத்தளமும் திஸ்கியில் தான் இருந்தது. 2004ல் என் வலைத்தளத்தைப் புதியதாய் வடிவமைத்தபோது, அதை முழுவதும் யுனிக்கோடு தமிழாக மாற்றினேன். யுனிகோடு தமிழ் என்ற பெயரை யுனித்தமிழ் என்றும் பெயர்மாற்றி அழைக்கத் தொடங்கினேன். http://anbudanbuhari.com

அதே சமயம், ஜிமெயில் கணக்கு திறக்கும் அழைப்பு ஒன்று கவிஞர் மதுரபாரதியிடமிருந்து எனக்கு வந்தது. அதற்கு முன்பே ஜிமெயில் பற்றி அறிந்திருந்தாலும், கவிஞர் மதுரபாரதியின் அழைப்பு அதனுள் முழுமையாய்ச் செல்ல எனக்கு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. ஜிமெயிலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே யுனித்தமிழ் மடலாடல்கள் நிகழ்த்த முடியும். உடனே, நண்பர்களையும் இணைத்துக்கொண்டு ஜிமெயில் அஞ்சல் சேவை வழியாக மடலாடத் தொடங்கினேன். அது என்னை அப்படியே ஈர்த்து இழுத்து அணைத்துக்கொண்டது. buhari@gmail.com

யுனித்தமிழில் வலைத்தளம், யுனித்தமிழில் அஞ்சல் இரண்டினையும் தொடர்ந்து யுனித்தமிழில் வலைப்பூ ஒன்றும் தொடங்கினேன். அதோடு நில்லாமல், அன்புடன் என்று கூகுள் குழுமம் ஒன்றையும் சோதனைக்காகத் தொடங்கினேன். தொடங்கியதும் பல சோதனைகள் செய்தேன். சோதனைகளில் வெற்றியும் பெற்றேன். http://groups.google.com/group/anbudan

"யுனித்தமிழ் - ஜிமெயில் - கூகுள் குழுமம்" http://www.anbudanbuhari.com/xunitamil.html என்று தலைப்பிட்டு தமிழுலகம் அறியும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி யாகூ குழுமங்கள் அனைத்திலும் இட்டேன். திண்ணை போன்ற இணைய இதழ்கள் பலவற்றிலும், TNF - தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கா, FeTNA - அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, NTYO - வட அமெரிக்க இளைஞர் தமிழ் அமைப்பு, MTS - டல்லாஸ் மாநகர தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து வழங்கிய தமிழர் திருவிழா ஆண்டுமலரிலும் வெளியாகி இருக்கிறது.

"எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது" http://www.anbudanbuhari.com/xunicodetamil.html என்ற தலைப்பில் யுனித்தமிழ் எழுதுவதற்கு எளிய முறையில் விளக்கங்கள் அளித்தேன். பலருக்கும் யுனித்தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தேன்

இன்று அன்புடன் வளர்ந்து மாபெரும் யுனித்தமிழ்க் குழும மரமாய் வேர்களும் விழுதுகளும் கிளைகளும் இலைகளும் பரப்பி செழுமையோடு நிற்கிறது. தினந்தோறும் பலரும் சேர்ந்த வண்ணமாய் இருக்கிறார்கள். யுனித்தமிழ் தட்டச்சவும் மடலாடவும் அறிந்தவண்ணமாய் இருக்கிறார்கள். செயல்பாட்டிலுள்ள உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு.

11) இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன ?

இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்.

1. வெளிச்ச அழைப்புகள் - 2002 - கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரையுடன். இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் இதுதான். இது கனடாவின் பெருநகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதின் சிறப்புப் பரிசு பெற்றது. ஏப்ரல் 2003ல் கனடாவின் மொன்றியல் நகரிலும் மறுவெளியீடு செய்யப்பட்டது. குமுதத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை, கனடாவில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற கவிதை, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி ஆண்டுமலரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கவிதை என்று பல சிறப்புக்கவிதைகளைக் கொண்ட என் முதல் கவிதை நூல் இது.

2. அன்புடன் இதயம் - 2003 - கவிநாயகர் வி. கந்தவனம் அணிந்துரையுடனும் இலந்தை சு. இராமசாமி வாழ்த்துரையுடனும். எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணையச் சரித்திரத்தில் முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப் பட்ட கவிதை நூல் இது. ஏப்ரல் 2003ல் சென்னையில் சபரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2003 கனடாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில், இணையத்தில் பரிசு பெற்ற கவிதைகளும், சென்னை சுற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட கவிதையும், கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பெற்ற பஞ்சபூதக்கவிதைகளும் உள்ளன.

3. சரணமென்றேன் - 2004 - மாலன் அணிந்துரை தந்தார். முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் பத்திரிகையாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க என் அறிமுகத்தோடு சரணமென்றேனும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கனடாவில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் வெளியிடப்பட்டது. கவிஞர் இந்திரன், கவிஞர் வைகைச் செல்வி, படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன் ஆகியோர் நூலை விமரிசனம் செய்தார்கள்.

4. பச்சைமிளகாய் இளவரசி - 2005 - எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரையுடன்.  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது. திரு சிவதாசன் தலைமை ஏற்க, கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, உதயன் ஆசிரியர் ஆர் என் லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விழாவில் வசூலான தொகை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

12) "தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ஏற்படும் தமிழின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது" இந்த கருத்திற்கு வலுவான ஆதரவு தரக்கூடிய வாதம் உங்கள் தரப்பிலிருந்து எதுவாக இருக்கும்?

அன்புடன் இதயம் என்ற என் இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய என் முன்னுரை, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் என்று நம்புகின்றேன்.

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல் - இணையம். தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்.

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ். வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும். தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம். ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள். சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம். இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல் ஆனது.

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று. உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா? இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கிவிட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து. புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள். உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள். வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி உதைத்து விளையாடுகிறது இன்று. நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடி நடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும். தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்படும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன. இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று. தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம். உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல். தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!
13) "புலம்பெயர் இலக்கியம்" என்றொரு பிரிவு தமிழிலக்கியத்திற்கு அவசியமா?

அவசியம் அவசியம் இல்லை என்பது இரண்டாம் பட்சம். எப்போதும் தானே வளர்வதைத் தாங்கிப்பிடிப்பதே  இலக்கியத்தில் உச்சம். இதுகாறும் தமிழில் உருவான இலக்கியங்களெல்லாம் வரலாமா என்று உத்தரவு கேட்டுக்கொண்டு வந்ததில்லை. வந்தபின் அதற்கொரு பெயர் சூட்டிப் பார்க்கிறோம். இலக்கியத்தில் ஒரு போட்டி மனப்பான்மை இருப்பது அதன் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே இலக்கியத்தில் பிரிவுகள் வரவேற்புக்குரியவை. புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி புலம்பெயர்ந்தவர்கள்தான் எழுதவேண்டும் என்று ஒன்றுமில்லை. புலம்பெயர்ந்தவர்களே எழுதினால் அதில் வீரியம் அதிகம் இருக்கும் என்பதும் உண்மை. நாடுவிட்டு நாடு நடக்கும்போதே பாட்டு கூடவே வருகிறது என்றால் அதில் எத்தனை உண்மை இருக்கும், உணர்ச்சி இருக்கும், ஆழம் இருக்கும், அதிசயம் இருக்கும்?

அதே வேளையில், புலம்பெயர்ந்தது தமிழனா தமிழா என்றொரு கேள்வியை நான் எனக்குள் கேட்டுவைத்தேன். தமிழனைக் காட்டிலும் அதிகம் தமிழே புலம்பெயர்ந்தது என்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு கவிதையும் எழுதினேன்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்

14) சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத்தகையது?

சிறுகதைகளைவிட கட்டுரைகளில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கட்டுரைகளுக்காக அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. ஈர்ப்போடு கவிதைகள் எடுத்துக்கொண்டவை போக மீதமுள்ள நேரமெல்லாம் கட்டுரைகளுக்கே. என் விடலையை விட்டு வெளியேறிய பருவங்களில் சிறுகதை எழுதி இருக்கிறேன். ஒரு சிறுகதை, நா பார்த்தசாரதியின் தீபத்திலும் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது சிறுகதைகள் எழுதும் எண்ணம் இல்லை. கவிதைகள்தாம் என்னை அடிக்கடி இழுத்து ஒத்திப்போகும் முத்தங்கள். இருப்பினும், கதைகள் எழுதவும் பின்னாளில் நான் அமரக்கூடும்.

15) தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள நாட்டம் திருப்திகரமாக உள்ளதா?

தற்போதைய இளம் சந்ததி மட்டும் அல்ல, முதியவர்களும் திருப்திதருபவர்களாய் இல்லை. அள்ளி அள்ளிக் கொட்டினாலும் தமிழ்த்தாய்க்குத் திருப்தி வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், தரமான இலக்கியம் படைக்க வேண்டியவர்களெல்லாம் வியாபார இலக்கியம் படைப்பதில் மும்முரமாகிப் போனார்களே அதுதான் இக்காலத்தின் மிகப் பெரிய நஷ்டம். உயர்ந்த இலக்கியங்களைப் படைக்க வேண்டிய கரங்கள் சில்லறைகளை எண்ணிக்கொண்டுதான் சிவந்துபோகின்றனவே தவிர உலகத்தரத்தில் எழுதி எழுதி அல்ல.

இந்நிலையில் இளைய தலைமுறையினரைப் பற்றிய கவலை மேலும் அதிகரிப்பது சரியானதுதான். வார்த்தைக்கொரு வார்த்தை என்று ஆங்கிலம் கலந்ததைத் தாண்டி இன்று பத்து ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்று பேசும் இழிநிலை வந்துவிட்டது. இதற்கான பொறுப்பை நம் தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்ணலை வானொலிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள் என்று எல்லோரும் சமமாகப் பிரித்துக்கொண்டார்கள். இதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிவேறு.

பெற்றோர்கள் மனதுவைத்தால்தான் இந்தக் கேவலமான நிலை மாறும். தமிழ் வாழும். தமிழனின் அடையாளம் காக்கப்படும். தமிழ்க் கலாசாரத்தின் பொருள் புரியும்.

ஆயினும் நானொன்று சொல்வேன். எந்தச் சூழலிலும் தமிழ்மட்டும் செத்துப் போய்விடாது. அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அடக்கப்ப்ட்டுக் கிடந்தாலும், வீரியமாய் வெளிவந்ததல்லவா நம் அமுதத் தமிழ்.

16) வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழிலக்கியம் எடுக்க வேண்டிய பாதை உங்களது பார்வையில் என்ன என்று எண்ணுகிறீர்கள் ?

தமிழர்கள் தமிழர்களிடம் தமிழில் பேசவேண்டும் என்ற வேண்டுகோள் ஒவ்வொரு செவியையும் ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்றுக்கொடுத்து தமிழர் பண்பாடு சொல்லிக்கொடுத்து வீட்டில் தமிழ் பேசி நல்ல தமிழ்ச் சூழலில் வளர்க்க வேண்டும்

தமிழைத் தவறவிட்டுவிட்டுத் தங்களின் அடையாளம் தொலைந்துபோய் நிற்கும் தமிழர்கள் உணரும் வண்ணமாய் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் துணுக்குகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்ந்து வரவேண்டும்.

திரைப்படமும் ஒரு மகா சக்திதான். அதில் நல்ல தமிழ் உலவவேண்டும். திரைப்பாடல்கள் தரமான தமிழில் வரவேண்டும். அதைப் பாடுவோர் தமிழறிந்து பாடவேண்டும்.

அரசியல்வாதிகள் தமிழைத் தன் பிழைப்புக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அதன் வளர்ச்சிக்காகவும் அது அனைத்துத் தமிழர்களின் வாழ்க்கைக்கும் வழி செய்யும் மொழியாகவும் ஆக்குவதற்கு உண்மையாய் உழைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்

தமிழின் பெருமைகளைக் கலைகளும் இலக்கியங்களும் வானுயர்த்திப் பிடிக்கவேண்டும்

வாழ்க தமிழ். நன்றி வணக்கம்.

அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.com/

https://nidurseasons.blogspot.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF

No comments: