வெளிநாட்டு சம்பாத்தியங்களும்
சமுதாய முன்னேற்றங்களும் ....
மூன்றாம் பாகம்
எழுபதுகள் எண்பதுகளில்நிகழ்ந்தேறிய நீங்கா நினைவுகள் ....
முந்தைய பதிவுகளின் சுருக்கம் ....
நமது சமுதாயங்களின் மூதாதையர்கள் நாற்பது ஐம்பது அறுபதுகளில் பர்மா ரங்கூன் மலேஷியா சிங்கப்பூர் புருணே போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கப்பலில் பயணித்து தங்கள் குடும்பங்களுக்காக வருமானம் ஈட்டிய கடுமையான உழைப்புக்கு பின்னர் அடுத்த தலைமுறையினர் அரேபிய தேசங்களுக்கு பணிகள் தேடி ஏஜெண்டுகள் வாயிலாக பம்பாய் நகருக்கு ரயிலில் பயணிக்கிறார்கள் ....
தமிழகம் ஆந்திரா கர்நாடகா ஆகிய மூன்று வகை மாநிலங்களை கடந்து மகாராஷ்ரத்தின் பம்பாய் நகரத்துக்குள் புகை கக்கிய ரயில் வண்டி அதன் வேகத்தையும் சப்தத்தையும் குறைத்து மக்கள் நடமாட்டத்தால் இரைச்சல் மிகை நிலையத்தின் தண்டவாளங்களில் அமைதியாக நின்றது ....
பயணத்தில் சாய்ந்த இருக்கைகளில் பகலில் அமர்ந்தும் இரவில் தூங்கியும் எழுந்ததால் முதுகு வலிகளோடும் களைப்போடும் பெட்டி படுக்கைகளோடும் வந்திறங்கிய நம்மவர்களை பம்பாயில் குடியிருக்கும் நமதூர் குடும்ப நட்பு வாசிகள் மற்றும் ஏஜெண்டுகள் சிலர் வரவேற்று நலம் விசாரித்து அழைத்து சென்றனர் ....
நீராவி வண்டிகளில் பயணித்தவர்கள் தாராவி மற்றும் அந்தேரி போன்ற ஏரியாக்களில் நுழைந்து தமிழர்கள் அதிகம் வாழுகிற பகுதிகளில் வாடிய முகங்களோடு தேடிய குடியிருப்புகளில் நாடிய இறையின் அருளோடு ஆங்காங்கே தங்கினர் ....
பாஷை தெரியா புதிய மாநிலத்தை ஆச்சரியமாக நோக்கினாலும் அழகிய தமிழை தாய் மொழியாக பேசியும் பழகிய ஆங்கிலத்தை வாய் மொழியாக பேசியும்
தேசிய மொழியான ஹிந்தியை துவக்கத்தில் பேசிட நாவுகள் தடுமாறினாலும் பின்னர் ஓரளவு சமாளிக்க கற்றுக் கொண்டனர் ....
வீட்டுச் சாப்பாடு தின்று பழக்கப்பட்டோர் மெஸ்ஸுகளிலும் உணவகங்களில் சமைக்கும் உணவுகளின் ருசிகளில் கவனம் செலுத்தாது கிட்டியதை மென்று நாட்களை நகர்த்தினர் ....
கோட்டாறு இடலாக்குடியில் ஊர்முக மக்களோடு அங்குமிங்கும் சுற்றித் திரிந்து வாழ்ந்தவர்கள் நேர்முக தேர்வுகளை எதிர் கொள்ள ஏஜெண்டுகளின் அலுவலக வளாகங்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து என்னாகுமோ ஏதாகுமோ என்று படபடக்க தங்களது அழைப்புக்காக வரிசைகளில் காத்திருந்தனர் ....
நேர்முக உரையாடலின் போது கல்வியின் அருமை என்னவென்று ஒவ்வொருவரும் நன்றாக உணர்ந்தனர் ....
சில அரபிகள் (அ) உதவியாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதில் கூறிய திறமையானோர் கொஞ்சம் கூடுதலாகவும் மற்றோர் சற்று குறைவாகவும் தகுதிக்கேற்ற வேலைக்குரிய சம்பளத்தில் தேர்வாகியதும் புன்னகையோடும் களிப்போடும் அரேபியா பயணிக்க தயாராகி நிம்மதிக் காற்றினை லேசாக சுவாசிக்க துவங்கினர் ....
ஏஜெண்டுகள் என்கிற மாந்தோர் கைகளில் பணமளித்து நம்பிக்கையோடு காத்திருந்தும் குறிப்பிட்ட நாட்களில் வாய்ப்புகள் கிட்டாமல் ஏமாந்தோர் செய்வதறியாது தவித்த போது நீங்களும் விரைவாக வளைகுடா செல்லலாம் என்கிற ஆறுதலும் மற்றோரிடமிருந்து கிடைத்தது ....
சில நாட்களில் அரேபிய விசாக்கள் கிட்டி அவைகளை கடவுச் சீட்டுகளில் முத்திரை குத்தி விமானம் ஏறிட நாள் குறித்து ஆயத்தமாகி பம்பாய் விமான நிலையத்தை நோக்கி பேருந்துகளிலும் மகிழுந்துகளிலும் சென்றடைந்தனர் ....
விமான நிலைய சோதனைகள் முடிந்து விதவிதமான அலுமினியப் பறவைகள் நம்மவர்களை உள்ளிளுத்து மேகக் கூட்டங்களோடு பறந்த போது புதிதாக பயணிக்கும் சுகமான விமான அனுபவத்தின் மகிழ்ச்சியை மனங்கள் ஈர்க்க சவுதி பஹ்ரைன் துபாய் குவைத் கத்தார் போன்ற நாடுகளின் எல்லைகளின் கரைகள் தொட்டு தமது நீண்ட இறக்கைகளை விரித்து விமானங்கள் தரைகள் இறங்கியது ....
விமான தளத்தில் சுங்க அதிகாரிகளின் தேவையான பரிசோதனைகளுக்கு பின்னர் பணிகளுக்காக உள்ளே தங்க அனுமதி பெற்று வெளி வாயில் வாயிலாக வந்து அந்தந்த நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர் ....
தத்தமது சிந்தனைகளில் விரிகிற கனவுகளோடும் தமது உள்ளக் கிடங்குகளில் எரிகிற பிரச்சனைகளோடும் வளங்கள் சொரிகிற எண்ணெய் தேசங்களில் கால்கள் பதித்து புதிய உலகை ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் ஆர்வமாகவும் மலைப்போடு பார்த்து விடியலை எதிர் நோக்குகிறார்கள் ....
இன்னும் விரிகிறது
காத்திருங்கள் நண்பர்களே
இன் ஷா அல்லாஹ் ....
அப்துல் கபூர்
14.08.2019 ....Abdul Gafoor is in Kampala, Uganda.
No comments:
Post a Comment