Saturday, July 27, 2019

வெளிநாட்டு சம்பாத்தியங்களும் சமுதாய முன்னேற்றங்களும் ....

ஆக்கம் : அப்துல் கபூர்



பேரிறைவன் ஊட்டிய பேரருளில் நனைகிற இன்றைய நமது சமுதாயத்தின் அன்றைய பெரும்பாலான குடும்பங்களில் வறுமை பாய் விரித்து அமர்ந்திருக்க வாய் சுவைத்து வயிறு நிறைய அருந்தும் உணவுகளுக்காக தாய் தந்தையர் கஷ்டப்பட்ட பழங்காலங்கள் நமது மனசில் அசைந்து செல்லுகையில் அந்த நினைவுகள் நம்மை பிசைந்து கொண்டே இருக்கும் ....

கடந்து போன நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் நம்முடைய பாட்டன்களும் பூட்டன்களும் பணம் நாடி பிழைப்பு தேடி நெஞ்சினில் தைரியம் சூடி தீர்க்கமாகவும் கடல்வழி மார்க்கமாகவும் பர்மாவிலும் ரங்கூனிலும் கால்கள் பதித்து பணியாற்றி உழைப்புதனை அர்ப்பணித்து வாழ்ந்தனர் ....


அந்தந்த நாடுகளின் சூழல்களில்
கலவரங்கள் உருவெடுத்து நிலவரங்கள் மோசமாகி பாதிப்புகள் ஏற்பட்டதும் பல மாசமாகி நம்மவர்களின் சம்பாதிப்புகள் தடைபட்டு பஞ்சம் ஏற்பட்டு உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாயத்தில் கடலோரங்களை கடினப்பட்டு கடந்தும் மணலோரங்களில் பல நாட்கள் நடந்தும் தாயகத்தில் தஞ்சம் புகுந்தனர் என்கிற சுமையான நிகழ்வுகளை நமது முன்னோர்களில் சிலர் நம்மிடம் சொல்லியதுண்டு ....

காலங்களின் வேகமான சுழற்சிகளில் கோர்க்கப்பட்ட வலைகளில் சிக்குண்ட பெரும்பாலான குடும்பங்கள் தறிகளில் நெசவு நெய்து பாய்கள் முடைந்து இன்னபிற வழிகளில் உள்ளூரில் வருமானங்கள் ஈட்டினாலும் தன்னிறைவு அடைவதற்கு வழியின்றி தவித்தது ...

இந்த சிரமமான வேளைகளின் இருள் நீங்க இறைவனின் அருள் பட்டு சிங்கப்பூரும் மலேசியாவும் கரங்கள் நீட்டி எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என்றழைத்து நம்முடைய வேதனைகளை களைய கொஞ்சம் உரங்கள் இட்டது ....

நம்முடைய மூதாதையரும் தாதையரும் ஐம்பதுகளிலும் அதையடுத்து அறுபதுகளிலும் இல்லங்கள் துறந்து சுகங்கள் மறந்து முகங்கள் தெளிய அகங்கள் ஆசைகளால் துளிர்க்க கப்பலில் பயணித்து அந்த நாடுகளில் எதிர்பார்ப்போடு இறங்கினர் ....

வியாபார கடைகளில் பணிகளாற்றியும் பின்னர் சொந்தமாக தொழில்கள் முனைந்தும் சிங்கப்பூரான சிங்கையிலும் மலேஷியாவின் சுங்கையிலும் வாசமாகவும் விசுவாசமாகவும் உழைத்து முன்னேறி தமது முதுகுகளை மெதுவாய் நிமிர்த்தினர் ....

விடுமுறைகளில் ஊருக்கு வருகையில் சாரங்கள் உடுத்தி அதன் மீது பெல்டுகள் கட்டி பளபளக்கும் சட்டைகள் அணிந்து உதடுகளில் சுருட்டுகளையும் சிகரெட்டுகளையும் பற்ற வைத்து புகை சிந்தி நம்மூர் சபராளிகள் மிடுக்காகவும் துடுக்காகவும் பகை இன்றி வலம் வந்து அசத்தினர் ....

அந்த தேசங்களில் வாங்கி கொண்டு வந்த சாக்லெட்களும் பிஸ்கட்களும் ஓவலும் ஹார்லிக்ஸும் குடும்பங்களுக்குள் பரிமாறப்பட்டு புதிய சுவைகள் நாவுகளுக்கு அறிமுகமானதும் சமுதாயத்தில் வெளிநாட்டு வாழ்க்கையின் ஆவலும் அமோகமாக அதிகரித்தது ....

வறுமையின் கோரப் பிடிகள் கோரம் பாயை விட்டு மெதுவாக எழுந்து நாம் அனுபவித்த இறுக்கங்களை கொஞ்சமாக தளர்த்தியது ....

அவ்வப்போது இன்னும் விரியும்
இன் ஷா அல்லாஹ் ....

அப்துல் கபூர்
26.07.2019 ....

No comments: