Sunday, December 2, 2018
சிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்
வணக்கம் புரிபவரை விட ஓர் அறிஞரின் சிறப்பு நட்சத்திரங்களை விட சந்திரனின் சிறப்பை போன்றதாகும். அறிஞர்கள் இறைத்தூதரின் வாரிசுகள். இறைத்தூதர்கள் தங்கம், வெள்ளி நாணயங்களை அனந்தரப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் “இல்ம்” என்ற ஞானத்தைத்தான். அதை எடுத்துக்கொண்டவர் மாபெரும் நற்பங்கை அடைந்துகொண்டார் என்று மார்க்க அறிஞர்களின் சிறப்பை அகிலத்துக்கு உணர்த்தியுள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள். (அபூதர்தா(ரலி), அபூதாவுது) அந்த அறிஞர்களின் பத்து அடையாளங்கள் இதோ…
Ø இறை பொருத்தம் பெறும் ஆர்வம்
“அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி கற்க வேண்டிய கல்வியை, உலக ஆதாயங்களில் ஒன்றை அடைவதற்காக ஒருவர் கற்றால் நாளை மறுமையில் அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்.” (அபூதாவூது, அபூ ஹூரைரா(ரலி)) “மறுமையின் விளைச்சலை விரும்புகிறவருக்கு அவரது விளைச்சலை அதிகப்படுத்துவோம். இவ்வுலகத்தில் விளைச்சலை விரும்புகிறவருக்கு அதிலிருந்து அவருக்கு கொடுப்போம். ஆனால்… அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை” (அல் குர்ஆன் 42:20)
Ø பிரபலமடையும் நோக்கம் கூடாது.
கல்வியிம் மூலம் பிற அறிஞர்களுக்கு நிகராகிவிட வேண்டும். அறிவீனர்களிடம் வாதம் புரிய வேண்டும். அதன் மூலம் மக்களின் உள்ளங்களை தன் பக்கம் திருப்புவதற்காக ஒருவன் கல்வியைத் தேடினால் அவனை அல்லாஹ் நரகத்தில் போடுவான். (கஃப் இபுனு மாலிக் (ரலி), திர்மிதி)
எதிலும் வலிந்து மூக்கை நுழைக்கக் கூடாது.
ஒரு தேவையை முன்னிட்டு தன்னை யாராவது அணுகினால், அவருக்கு உடனே உதவிபுரிந்து பயன் அளிப்பார். தன்னை விட்டும் விலகிக் கொண்டால் (அதற்காக கோபமோ வருத்தமோபடாமல்) தானும் ஒதுங்கிக் கொள்கிற மார்க்க அறிஞன் எத்துனை சிறப்பானவன்; எத்துனை சிறப்பானவன். (அலீ (ரலி) - மிஷ்காத்)
Ø மார்கத்தை மறைக்கக் கூடாது , மறுக்கக்கூடாது.
ஒரு மார்க்க அறிஞரிடம் அவர் அறிந்துள்ள கல்வியைக் கற்றுத்தருமாறு வேண்டப்படும் போது மறுக்காமல் அவர் கற்றுத்தர வேண்டும். (அவரே சிறந்த அறிஞர்) அதை அவர் கற்றுத்தர மறுத்தால், மறுமைநாளில் அவருக்கு நெருப்புக் கடிவாளம் இடப்படும் (அபூஹூரைரா(ரலி) அஹ்மது)
Ø தீமையைக் கண்டு கோபம் வரவேண்டும்
ஒருவர் எப்போது முழுமையான மார்க்க அறிஞராக ஆவாரென்றால், அல்லாஹ்வின் வரம்புகளை மீறும் விசயத்தில் மக்கள் மீது அவருக்கு கோபம் வரவேண்டும். பின்னர் அவர் தம்மைப் பற்றிச் சிந்தித்து அதைவிட கடுமையாகத் தம்மீதே கோபம்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் முழுமையான மார்க்க அறிவு பெற்றவர் ஆவார். (அபூதர்தா(ரலி)
Ø கற்பதின்படி செயல்பட வேண்டும்
“மக்களுக்கு நல்லவற்றை போதித்து விட்டு அதன்படி செயல்படாத அறிஞர், மக்களுக்கு வெளிச்சம் தந்துவிட்டு தன்னைத் தானே எரித்துக்கொள்கிற விளக்கை போன்றவர் ஆவார்” (ஜுந்த் இபுனு அப்துல்லாஹ் (ரலி) தப்ரானி). சுவனவாசிகள் சிலர் நரகவாசிகள் சிலரை எட்டிப் பார்ப்பார்கள். அப்போது அவர்கள் நரகவாசிகளிடம் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதன் மூலம்தான் நாங்கள் இங்கே சுவனத்துக்கு வந்தோம் நீங்கள் எப்படி நரகத்தில்? என்று ஆச்சரியத்துடன் வினவுவார்கள். அதற்கு அவர்கள் “உண்மைதான்… நாங்கள் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டிருந்தோம், ஆனால் எங்களை மறந்து விட்டோம்” என்று பதில் அளிப்பார்கள். (இபுனு அஸாகிர்)
Ø அதிக சலுகையும் கூடாது அதிக கண்டிப்பும் கூடாது
தனது உரையின் மூலம் மனிதர்களை இறைக்கருணை குறித்து நிராசையடையும்படி செய்யாமலும், இறைவனுக்கு மாற்றமாக நடக்கும் விசயத்தில் சலுகை காட்டாமலும், இறைவேதனை குறித்து அவர்களை அச்சமற்றவர்களாக ஆக்காமலும் இருப்பவனே சிறந்த அறிஞன் (அலீ(ரலி), கிதாபுல் ஃகராஜ் )
Ø அதிகார வர்க்கத்தை அண்டியிருக்கக் கூடாது.
எனது சமுதாய மக்களில் சிலர் மார்க்க அறிவைப் பெறுவர். குர்ஆனைக் கற்று அதைக் கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருப்பர். அதோடு… “அதிகார வர்க்கத்திடம் நாங்கள் செல்வதெல்லாம் அவர்களிடமுள்ள சில உலக வசதிகளை அடைந்து கொள்வதற்குத்தான். அதேசமயம் எங்களின் மார்க்கத்தை விட்டுத் தரமாட்டோம்” என்றும் கூறுவார்கள். ஆனால், இது சாத்தியமானது அல்ல, ஏனெனில் முட்செடியிலிருந்து முள்ளைத் தவிர வேறு எதனையும் பெற முடியாது என்பது எவ்வளவுக் கெவ்வளவு உண்மையோ அதுபோல, அதிகார வர்க்கத்துடனான நெருக்கம் பாவத்தின் பழியைத் தவிர வேறு எதனையும் பெற்றுத் தராது. (இப்னு அப்பாஸ்(ரலி) இப்னு மாஜா)
Ø குர்ஆன் நபிவழி நடக்க வேண்டும்
ஒருவர் நீரில் நடப்பதையோ, வானில் பறப்பதையோ வைத்து, அவரை சிறந்த இறைநேசர், மார்க்க அறிஞர் என்று நீங்கள் முடிவு செய்து ஏமாந்து விடவேண்டாம். அவருடைய நடத்தை குர்ஆன் நபிவழியோடு ஒத்து இருக்கிறதா என்று ஆய்வு செய்தே அவரை இறைநேசர், மார்க்க அறிஞர் என்று முடிவு செய்யுங்கள். (அறிஞர் லைஸ் இப்னு சஃத்(ரலி))
Ø மறுமைச் சிந்தனை வேண்டும்
அறிஞர்கள் கல்வியை முறைப்படி பாதுகாத்திருந்தால், மேலும் அதைத் தகுதியானவர்களிடம் மட்டுமே சேர்த்திருந்தால், நம் சமகால மக்களுக்குத் தலைவர்களாகவும் - முன்னோடிகளாகவும் அவர்கள் திகழ்ந்திருப்பார்கள். ஆனால், அதை அவர்கள் உலகாதாயவாதிகளிடம் சேர்த்து பாழ்படுத்திவிட்டார்கள். அதன் மூலம் அவர்களிடமுள்ள வசதிகளைப் பெற விரும்பினார்கள். அதன் விளவு என்ன ஆனது” அத்தகைய அறிஞர்கள், அந்த உலகதாயவாதிகளின் பார்வயில் இழிவடைந்தவர்களாயினர். ஒன்றை நன்றாக நினைவில் வையுங்கள். நபி (ஸல்) அவர்கள் மூலம் நான் செவிமடுத்த செய்தி இது. தனக்கு ஏற்படும் துன்பம் எதையும் பொருட்படுத்தாமல் மறுமையைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றவனின் உலகத் துன்பங்களை நீக்க அல்லாஹ் போதுமானவன். அதேசமயம் உலக வாழ்க்கையின் துன்பங்களை பெரிதாக எடுத்துக் கொள்பவனை இறைவன் பொருட்படுத்துவதே இல்லை. அவன் துன்பக் கடலில் அமிழ்ந்து போனாலும் சரியே.
(இபுனு மஸ்வூத்(ரலி)இப்னு மாஜா)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment