Sunday, December 2, 2018

ஒரு வெற்றிச் சின்னத்தின் நிழலில்..! / நிஷாமன்சூர்



நெப்போலியனின் பீரங்கித்துளையிலிருந்து உதிரும்
இரும்புத்துருவை விழுங்கி இனியும் பசியாற இயழாதெனக்
கண்கலங்கியழும் அகழி முதலைகளின்
ஒட்டினவயிற்றைத் தடவிக் கொடுத்தான்
சரபோஜி மாமன்னன்

கோட்டைக் காவலர்கள் கண்ணயரும் வேளை
பூக்கார பேரிளம்பெண்ணின் நைந்துகில் களைந்து
சிறுமுயக்கப் புணர்ச்சி கொண்ட கயல் வணிகன்
இடுப்பாடை இறுக்கிப்பின் வெறுங்கூடை சுமந்தான்


கவச உடைகள் அவசியப்படாத திணவெடுத்த தோள்களில்
வெண்புறாக் கழிவுகள் கோலமிட
வேல் வில்லாளன் ஆண்ட்ராய்டு பூண்டான்

சுயமிகளுக்காகப் புன்னகைத்து
கன்னத்துச் சதை கணுத்த யுவன்களின்
அலட்சிய உடல்மொழி கவர்ந்திழுக்க
விரைப்பின் கம்பீரத்தை உதடு சுழித்துப் பழித்து
பட்டத்து இளவரசி உப்பரிகை துறந்தாள்.

கலங்கரை விளக்க வெளிச்சம்
கண்களைக்கூச வைப்பதாகக்
குறைகூறிய மீனவன்
கச்சத்தீவருகே எல்லைமீறிப்பின்
இலங்கைப் படையின் கைதியானான்

உண்ட களைப்பில் சிற்றுறக்கம் கொண்ட மேய்ப்பர்கள்
வேலிதாண்டிய ஆடுகள்
சமைக்கப்படும் வாசனையை முகர்ந்தவாறு
தேடுதலைத் துவங்கினார்கள்.

அன்பின் வலியது சுயநலம் அதுவே மாந்தர்
செல்வத்துள் எல்லாம் தலை


#நிஷாமன்சூர்

No comments: