மக்கள் தலைவர் வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப்
வடஆற்காடு மாவட்டத்திலுள்ள (தற்போது திருவண்ணாமலை மாவட்டம்) வந்தவாசிக்கு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு. 22.01.1760 அன்று இங்கு நடைபெற்ற மூன்றாவது கர்நாடகப்போரில் அயர்புட் தலைமையிலான ஆங்கிலேயக் கம்பெனிப்படை, தாமஸ் ஆர்தர் தலைமையிலான பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தது.
இப்போரின் மூலம் இந்தியாவில் பிரான்ஸ் நாட்டின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. அவர்கள் படிப்படியாக இந்தியாவிலிருந்த அனைத்து பெரிய, சிரிய அரசர்களை வென்று முழு இந்தியாவையும் தங்களது குடையின் கீழ் கொண்டு வந்தனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தவாசி நகரில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்கள் தவிர, தமிழ் நாட்டின் தென்பகுதியிலிருந்தும் முஸ்லிம்கள் இந்நகருக்குப் பல்வேறு காலகட்டங்களில் வந்து குடியேறியுள்ளனர். இந்நகரில் பிறந்த சமூதாயச் சேவையாளர் ஜனாப் கே.ஏ. வகாப் அவர்களைப்பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
கே.ஏ.வகாப் 12.06.1932 அன்று வந்தவாசியில் அப்துல் ஹமீது சாகிப் - ருக்கையா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தந்தையார் அப்துல் ஹமீது சாகிப் வந்தவாசியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். அனைத்துத் தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவராகத் திகழ்ந்தார். வந்தவாசி பெரிய பள்ளிவாசலின் முத்தவல்லியாகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அன்றையக் காலகட்டத்தில் வந்தவாசியிலிருந்து மக்கா சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றித் திரும்பிய இரண்டாவது முஸ்லிம் இவர் என்றது குறிப்பிடத்ததக்கது.
வகாப் சாகிப் தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை வந்தவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அப்போது பள்ளியின் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சென்னை சென்று அங்குள்ள அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயின்று கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் சென்னை புதுக்கல்லூரியில் பயின்று கொண்டிருந்த
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிப் மற்றும்
நீடூர் சயீது ஆகியோருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. கல்லூரியில், தமிழ்ச் சங்கச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவை அழைத்துச் சிறப்புக் கூட்டம் நடத்தினார்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் அவர் அரசுப் பணியில் சேர ஆர்வம் காட்டவில்லை. சட்டக் கல்லூரியில் சேர்ந்து சில மாதங்களே அங்கு பயின்று விட்டு இடையிலேயே ஊர் திரும்பினார். தனது தந்தையார் நடத்தி வந்த பாத்திரக் கடையில் அவருக்கு உதவியாக இருந்தார். தந்தையாரின் மறைவிற்றுப் பின்னர், கடையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். பாத்திரங்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை ஒன்றையும் தொடங்கினார். நகரின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவராக உயர்ந்தார். நகர வர்த்தக சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றினார்.
வந்தவாசியில், பெரும்பான்மையான மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் கோரைப்பாய் நெய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 7000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருந்தனர். இந்த நெசவாளர்களுக்கு கட்டுபடியாகின்ற விலை கிடைக்க வேண்டு மென்பதற்காகவும். அரசு வழங்குகின்ற உதவிகளை முறையாகப் பெறவேண்டு மென்பதற்காகவும், அவர்களை ஒன்று திரட்டி கூட்டுறவு சங்கம் ஒன்றை அமைத்தார். அந்த சங்கத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் தலைவராகவும் பல ஆண்டுகள் பதவிவகித்தார்.
அரசியல் ஈடுபாடு :
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிபுடன் ஏற்பட்ட நட்புறவு காரணமாக மாணவப் பருவத்திலேயே முஸ்லிம் லீகில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்து ஊர் திரும்பியதும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். விரைவிலேயே நகர முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் பல ஆண்டுகள் இருந்தார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்தார். நாளடைவில் தனது ஈடுபாடு காரணமாக மாநில முஸ்லிம் லீக் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். மாநில அளவிலும் பல பொறுப்புகள் இவரைத் தேடிவந்தன.
1977 ஆம் ஆண்டு முதல் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிபின் மறைவிற்குப் பின்னர், 19.05.1999 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில முஸ்லிம் லீக் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகயிருந்த பேராசிரியர் காதர் முகையதீன் சாகிப் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வகாப் சாகிப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கபட்டார். மரணிக்கும் வரை அவர் அப் பொறுப்பில் இருந்து திறம்படப் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு வந்தவாசி நகரில் மாவட்ட முஸ்லிம் லீக் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். இக் கூட்டத்தில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி அமைப்புகளிலும் அவர் பல்வேறு பொறுப்புகள் வகித்தார். 1958ஆம் ஆண்டு தனது 26வது வயதிலேயே வந்தவாசி பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1978ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார். பின்னர். 1986ஆம் ஆண்டு நகராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு (இந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களித்து தலைவரைத் தேர்ந்தெடுத்தனர்.) அ.தி.மு.க வேட்பாளரான பாலு முதலியாரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகள் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
பேரூராட்சித் தலைவராகவும், நகராட்சித் தலைவராகவும் அவர் பணியாற்றிய காலத்தில் வந்தவாசி நகரில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். குறிப்பாக மக்களின் நீண்ட காலப் பிரச்னையான குடிநீர்ப் பிரச்னையை தீர்ப்பதற்காக செய்யாறு நகரிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றி மக்களின் தாகம் தீர்த்தார்.
தேர்தல் அரசியலில் :
சட்ட மன்றத் தேர்தல்களிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட கட்சி இவருக்கு பல முறை வாய்ப்பளித்தது. 1971ஆம் ஆண்டு இராணிப் பேட்டை தொகுதியிலும், 1977 ஆம் ஆண்டு அதே தொகுதியிலும். 1980ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியிலும், 1989ஆம் ஆண்டு துறைமுகம் தொகுதியிலும், 1996ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி தொகுதியிலும் முஸ்லிம் லீகின் வேட்பாளராகப் போட்டியிட்டார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வந்தவாசித் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவற்றுள் 1971ஆம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றார். பிற தேர்தல்களில் இவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. 1980ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் 940 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
muthaal1muthal 2
1971ஆம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க ஆதரவுடன் போட்டியிட்ட இவர், ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜி. ரங்கநாத நாயக்கரை விட 5385 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் இவருடன் மேலும் ஐந்து முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டிருந்தனர்.
1. சென்னை துறைமுகம் - திருப்பூர் மைதீன்
2. புவனகிரி - எம்.ஏ. அபூ சாலிஹ்
3. அரவாக்குறிச்சி - வி.எம். அப்துல் ஜப்பார், பி.ஏ.
4. வாணியம்பாடி - எம்.ஏ. அப்துல் லத்தீப்
5. மேலப்பாளையம் - எஸ். கோதர் முகையதீன்
இந்த அறுவர் கொண்ட முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சிக்கு திருப்பூர் முகையதீன் தலைவராக இருந்தார். இந்த சட்டமன்றத்தில் தான் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் ஆறுபேர் இருந்தனர். அதற்கு முன்னரும் இல்லை பின்னரும் இது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1977ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் அ.இ.அ.தி.மு.க கூட்டணியிலும் 1980ஆம் ஆண்டு தி.மு.க கூட்டணியிலும், 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலும், 1996ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியிலும் 1999ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் இவர் சென்னை துறைமுகம் தொகுதியில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை எதிர்த்தும், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை திருவல்லிக் கேணியில் தி.மு.க வின் நாஞ்சில் மனோகரனை எதிர்த்தும் முஸ்லிம் லீக் வேட்பாளராகக் களத்தில் இருந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் :
1971-1976 ஆம் ஆண்டுகளில் இராணிப் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவிவகித்த வகாப் சாகிப், சட்டமன்ற நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார். முஸ்லிம்களின் நலன்கள், உரிமைகள் சார்ந்த பிரச்னைகள் குறித்தும், தொகுதியின் பிரச்னைகள் குறித்தும் மற்றும் மக்களைப் பாதித்த பல்வேறு பொதுப் பிரச்னைகள் குறித்தும்
சட்டமன்றத்தில் பேசினார். இராணிப்பேட்டையில் கூட்டுறவு தொழிற்பேட்டை அமைந்திடப் பாடுபட்டார்.
சட்டமன்றத்தில் பல்வேறு மானியக் கோரிக்கைகளில் கலந்து கொண்டு பேசிய வகாப் சாகிப், தனது பதவிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமிருந்து பதில்களைப் பெற்றுள்ளார். வக்ப் போர்டு சார்பில் சென்னை நகரில் கல்லூரி நிறுவப்பட வேண்டுமென்றும், மாணவிகளின் கிளர்ச்சி காரணமாக அப்போது மூடப்பட்டிருந்த சென்னை எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரியைத் திறப்பதற்கு அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், வடஆற்காடு மாவட்டத்திலுள்ள பீடித் தொழிலாளர்களின் பிரச்னை குறித்தும், வந்தவாசியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், வக்ப் போர்டின் சார்பில் மருத்துவக் கல்லூரியும், தொழில் நுட்பக் கல்லூரியும் தொடங்கப்பட வேண்டுமென்றும், வந்வாசி கோரைப்பாய் நெசவாளர்களின் பிரச்னைகள் குறித்தும். உருது மொழி பேசும் முஸ்லிம்களைப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும், மதுவின் தீமைகள் குறித்த செய்திகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெறவேண்டுமென்றும், தனித் தொகுதிகளாக உள்ள வந்தவாசி, ஆம்பூர், பேர்ணாம்பட்டுத் தொகுதிகளைப் பொதுத் தொகுதிகளாக மாற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக தகுதி படைத்த முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும், இப்படிப் பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இவரது சட்டமன்றப் பணிகள் அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டன.
11.08.1973 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது உரையாற்றிய சட்டமன்றக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ‘நாடெல்லாம் கள்வர் கூட்டம்’ என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடினார் அவருக்குப் பின் உரையாற்றிய வகாப் சாகிப் அதேபோல் ‘நாடெல்லாம் கள்வர் கூட்டம்’ என்று தொடங்கும் கீழ்க்கண்ட பாடலைப் பாடி தனது உரையை நிறைவு செய்தார்.
நாடெல்லாம் கள்வர் கூட்டம்
நல்லவர் இல்லை என்று
பாடலை ஏற்றுக் கொண்டால்
நாமெல்லாம் கள்வராவோம்
வீடெல்லாம் இன்பம் வேண்டும்
வேதனை தொலைய வேண்டும்
நாடெல்லாம் செழிக்க வேண்டும்
நல்லவர் பெருக வேண்டும்
காடெல்லாம் திருத்தி நல்ல
கழனியாய் ஆக்க வேண்டும்
பாட்டாளி வாழ வேண்டும்
பண்புகள் பெருக வேண்டும் என்று
பாடெல்லாம் பட்டு வரும்
பண்பட்ட தமிழராட்சி
வாழவே கை கொடுப்போம்
வளரவே ஒத்துழைப்போம்
சட்டமன்ற உறுதி மொழிக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்த வகாப் சாகிப் 1974ஆம் ஆண்டு டெல்லி சென்று அப்போதையப் பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களைச் சந்தித்து வந்தவாசி கோரைப் பாய் நெசவாளர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்தார். கோரைப் புல்லை விவசாய விளைபொருளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரைப்பாய் நெசவாளர்களின் கோரிக்கையை அப்போது வலியுறுத்தினார்.
சமயப் பணிகள் :
பல்வேறு அரசியல் பணிகளுக்கிடையிலேயும், சமயப் பணிகளிலும் வகாப் சாகிப் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1960ஆம் ஆண்டு தி.மு.க பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணாவையும். முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிபையும் அழைத்து வந்து வந்த வாசியில் மிகப் பெரும் மீலாது மாநாடு ஒன்றை நடத்தினார். தனது தந்தையாரைப் போலவே வந்தவாசி பெரிய பள்ளிவாசலை நிர்வகிக்கும் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1963ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மரணிக்கும் வரை அந்தப் பள்ளி வாசலின் நிர்வாகத்தில் ஏழாவது ஒரு பொறுப்பிலிருந்து பணியாற்றினார். பள்ளிவாசலின் பொருளாளராக இருந்த போது வந்தவாசி நகரப் பேருந்து நிலையத்தில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காலியிடத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டார். அதன் மூலம் பள்ளிவாசலின் வருமானம் பெருகியது.
பின்னர் அந்தப் பள்ளி வாசலின் முத்த வல்லியாகத் தேர்ந்தெடுக்கபடப்டார். தனது பதவிக் காலத்தில் வந்தவாசி நகரின் புறநகர்ப் பகுதிகளான காயிதே மில்லத் நகரிலும், சீதக்காதி நகரிலும் புதிய பள்ளிவாசல்கள் கட்டி அவற்றை சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமதை சாகிபைக் கொண்டு திறப்பு விழா நடத்தினார். பெரிய பள்ளி வாசலுக்கு எதிர்புறத்தில் ஒரு திருமண மண்டபம் கட்டினார். (அவரது மறைவிற்குப் பின்னர் இந்த கல்யாண மண்டபத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது) மேலும் அல்ஹஸனதுல் ஜாரியா என்ற அரபிக் கல்லூரியையும் ஜமாத் சார்பில் தொடங்கி நடத்தி வந்தார்.
எழுத்து :
மாணவப் பருவத்திலேயே மணிவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு ஆகிய இதழ்களில் சமயம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதினார். பின்னர் தெடர்ந்து ‘வந்தவாசி வகாப்’ என்ற தலைப்பில் முஸ்லிம்லீக் இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். அமீரக நாடுகளில் பயணம் மேற்கொண்ட போது எற்பட்ட அனுபவங்கள் குறித்து ஐக்கிய அரபு நாடுகளில் மறக்க முடியாத பயணம் என்ற தலைப்பிலும், தனது ஹஜ் பயண அனுபவங்களைத் தொகுத்து ‘ புனித ஹஜ் பயண அனுபவங்கள்’ என்ற தலைப்பிலும் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
பண்பு நலன்கள் :
வகாப் சாகிப், அனைத்து சமய மக்களாலும் மதிக்கப்பட்டவராகத் திகழ்ந்தார். சாதி, சமய பேதமின்றி தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வார். பல படித்த இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெற உதவியுள்ளார். அதன் காரணமாகவே இந்து சமய மக்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் வந்தவாசியின் பேரூராட்சி/நகராட்சித் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிபுடன் அவருக்கு கல்லூரி நாட்களில் ஏற்பட்ட உறவு தொடர்ந்து பல்லாண்டுகள் நீடித்தது. அவரின் நம்பிக்கைக்குரிய நண்பராக இருந்தார். ஜப்பான், சிங்கப்பூர், தைவான், மலேசியா, பர்மா, ஹாங்காங், அரேபியா, அமீரக நாடுகள் ஆகியவற்றுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
குடும்பம் :
வகாப் சாகிபிற்கு 1953 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ஹஜ்ஜா பீவி. இத்தம்பதியினருக்கு ரஜியா சுல்தானா என்ற மகளும், அப்துல் காதர் ஷெரீப் என்ற மகனும் உண்டு. மகன் தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இறுதி நாட்கள்:
2004ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகையதீனை ஆதரித்து வகாப் சாகிப் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 5.5.2004 அன்று தேர்தல் பணி நிமித்தம் சென்னை சென்ற அவர் தி.மு.க பிரமுகர் முஸ்தபா என்பவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிட்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார்.
வகாப் சாகிப் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகப் பணிக்கும் சமுதாயப் பணிக்குமே செலவிட்டார். அவர் ஒரு மிகச் சிறந்த சேவையாளராக, மக்கள் தலைவராக விளங்கினார். அவரது அரிய பணிகள் வந்தவாசி நகர மக்களாலும் அந்த மாவட்ட மக்களாலும் என்றென்றும் நினைவு கூரப்படும் என்பது திண்ணம்.
குறிப்பு:
வகாப் சாகிப் குறித்த தகவல்களைத் தந்திட்ட திருவண்ணாமலை மாவட்ட முஸ்லிம் லீக் கௌரவத் தலைவர் டி.எம். பீர்முகம்மது அவர்களுக்கும் வகாப் சாகிபின் மகனார் அப்துல் காதர் ஷெரீப்புக்கும் எனது நன்றி
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள .... 99767 35561
No comments:
Post a Comment