Tuesday, October 17, 2017

​​'ஷூ' - பெற்றோர் ஆசிரியர் கவனத்திற்கு!

Rafeeq Sulaiman
​​'ஷூ' - பெற்றோர் ஆசிரியர் கவனத்திற்கு!
                                 -------------------------------------------------------------------
'ஷூ' அணிவித்து பள்ளி செல்லும் நமது பிள்ளைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்படியொரு கேள்வியை வைத்த முன் பதிவில் பெரும்பாலோனோர், "இது தேவையற்றது - நம் கலாச்சாரத்தில் இல்லாதது." என்று பின்னூட்டம் எழுதியிருந்தார்கள்.
கலாச்சாரத்தையும் தாண்டி இது குழந்தைகளுக்கு நாம் தரும் கடும் தண்டனை, கற்பதற்காக அனுப்பும் நாம் அதற்கே தடைபோடுகிறோம் என்கிறது ஆராய்ச்சி. அதுவும் இந்தக் கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்று சாடிக்கொண்டிருக்கிறோமோ அதே மண்ணில்தான் இந்த உண்மையைத் தெரிவித்திருக்கிறார்கள்.

நாம் இன்று அனுபவிக்கும் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் நேரடியாகக் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. வேறு ஏதோவொன்றுக்கு முயன்றபோது அதிலேற்படும் வேறுவகையான முடிவுகளால் நினைத்துப்பார்த்திராத ஒரு புதுப்பொருள் கிடைத்திருக்கிறது. அதுபோல பயங்கர குளிர்பிரதேசமான வடக்கு ஐரோப்பாவிலுள்ள பள்ளிக்குழந்தைகள் வகுப்பறைக்குள் நுழையும்போது அவர்களது 'ஷூ'க்களை வகுப்புக்கு வெளியே கழற்றி வைத்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் மோசமான வானிலைக் காலங்களில், அவர்களது 'ஷூ'க்களில் படர்ந்து இருக்கும் பனித்துகள்கள் மற்றும் உருகிய நிலையில் இருக்கும் ஐஸ் கட்டிகளால் வகுப்பறை முழுவதும் ஈரமாவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு திடீரென எடுக்கப்பட்டிருக்கிறது.
பனிப்பொழிவு காலங்களில் மட்டும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த வழக்கத்தை சற்று உற்றுநோக்க வைத்தது மாணவர்களது நடவடிக்கையில் தெரிந்த மாற்றங்கள். குறிப்பாக படிப்பில் கூடிய ஆர்வம், சக மாணவ நண்பர்களிடம் இருந்த சீண்டல்கள் குறைந்திருந்தது, வாசிப்புத்திறன் அதிகரிப்பு, பாடங்களைக் கவனிக்கும் திறன் அதிகரிப்பு, வகுப்பறைகளில் குப்பைகள் அதிகம் சேரவில்லை, இதனால் தூய்மைப்பணிக்கான செலவு 27% குறைந்துள்ளது. மேசை நாற்காலிகளைச் சேதப்படுத்தும் மனநிலை குறைந்திருக்கிறது. தேர்வு முடிவுகளில் நல்ல முன்னேற்றம் என ஏராளமான நன்மைகள் மாணவர்களிடம் அதிகரித்து இருந்ததைக் கவனித்தது பள்ளி நிர்வாகம்.
இதை உடனே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது இங்கிலாந்திலுள்ள போர்னிமௌத் பல்கலைக்கழகம். பேராசிரியர் ஸ்டீஃபன் ஹெப்பல் தலைமையில் அமைந்த குழு 25 நாடுகளிலுள்ள நூற்றுக்கும் அதிகமான பள்ளிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களிடம் இந்தப் பரிசோதனையை கடந்த பத்து வருடங்களாக நடத்தியது. அதிலும் குறிப்பாக எந்நேரமும் காலணிகளுடன் இருக்கும் ஸ்பெயின் நாட்டு மாணவர்களிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சமர்ப்பித்த அறிக்கை முடிவில்தான் இந்த உண்மை வெளியாகியிருக்கிறது.
வகுப்பறைகளில் கால்களை இறுக்கிய 'ஷூ'க்களுடன் இருக்கும்போது மாணவர்களின் மனநிலை மிகவும் இறுக்கமாகவே இருக்கிறது. 'ஷூ' அணியாதிருக்கும் நிலையில் அவர்கள் தரையில் அமர்வதற்குத் தயங்குவதில்லை. வீட்டில் இருப்பதுபோன்றதொரு மனநிலையினை உணருகிறார்கள். இது மிகவும் ஆரோக்கியமான மனநிலை என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஐரோப்பாவிலுள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளில் 'ஷூ' இல்லாத கல்வி (Shoeless education policy) எனும் கொள்கையினைப் பின்பற்றுமாறு கல்வி நிறுவங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பேராசிரியர் ஹெப்பல், "இங்கிலாந்தில் 'ஷூ' இல்லாமல் இருக்கும்போது வீட்டில் இருக்கும் ஒரு சுதந்திரமான மனநிலையை உணர்கிறோம். இந்தியாவில் ஒரு புனிதமான இடத்தில் இருப்பதுபோல உணர்கிறார்கள்." என்று சொல்கிறார்.
இருக்கிற கோயிலையெல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் எனும் நாமும் இதை உணர்வோம். அறிவுசுமந்த மாணவர்களை உருவாக்குவோம்.
Source: https://www1.bournemouth.ac.uk

Picture: பேராசிரியர் ஸ்டீஃபன் ஹெப்பல்

- Rafeeq Sulaiman

No comments: