Monday, October 23, 2017

இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

அப்துல்கையூம்
மாற்றுமத நண்பரொருவர் என்னிடம் முன்பொருமுறை ஒரு கேள்வி கேட்டிருந்தார். ‘வட்டி என்பது நம் அன்றாட வாழ்க்கையில், பொருளாதார கொடுக்கல் - வாங்கலில் நிரந்தர அங்கமாக ஆகி விட்டதொன்று. அதை ஒரு பஞ்சமாபாதகம் போன்று ஏன் உங்கள் மதம் சித்தரித்துக் காட்ட வேண்டும்?’ என்றார்.
அதற்கு நான் சொன்ன பதில் “வட்டி என்பது மேலோட்டமாக பார்ப்பதற்கு மிகச்சாதாரண ஒரு விஷயமாக நமக்குத் தோன்றுகிறது. அநியாயமான முறையில் வாங்குகின்ற வட்டியானது சமூகத்தின் சீர்கேடு. சமுதாயத்தில் பயங்கர பின்விளைவுகளையும். ஏழை எளியவர்களின் வாழ்வை சீரழிக்கக்கூடியதாக இருக்கின்றது” என்றேன். எனது பதில் அவரை திருப்திபடுத்தியதா இல்லையா என்று எனக்குத் தெரியாது.
கொடுங்கோலன் ஹிட்லர் யூதர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்ததற்கு காரணங்களில் ஒன்று, பொருளாதார ரீதியில் யூதர்கள் அநியாய வட்டி வாங்கி நாட்டின் நிலைமையை சீர்குலைத்தார்கள் என்பது அவனது சித்தாந்தந்தில் ஒன்று

தமிழில் ஒரு சொல்வழக்கு உண்டு. “அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியை கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன்” என்று.
வட்டியில் தான் எத்தனை வகை. வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி.. போதும் போதுமப்பா.
“பட்டணத்தில் பூதம்” திரைப்படத்தில் விடுகதை பாணியில் ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது. மூன்று பேர்கள் பாடும் அப்பாடலில் "உலகத்தில் சிறந்தது எது?" என்ற கேள்விக்கு வட்டி என்றும், மற்றவர் காதல் என்றும் மூன்றாமவர் தாய்மை என்றும் பதிலளித்து பாடுவார்கள்
உலகத்தில் சிறந்தது எது? – ஓர்
உருவமில்லாதது எது?
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது!
என்று தொடங்கும் அந்தப் பாடல்.
ஆளுக்கு ஆளு தருவதுண்டு...
அசலுக்கு மேலும் வளர்வதுண்டு...
நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு...
நல்ல நல்ல திட்டங்களும் வளர்வதுண்டு....
அது இல்லையென்றால் எதுவுமில்லை...
தொழிலில்லை; முதலில்லை; கடனுமில்லை!
சொல்லப்போனால், உலகமெங்கும்
வரவில்லை; செலவில்லை; வழக்குமில்லை;
அதன் ஆயுள் கெட்டி... மெல்லப் பார்க்கும் எட்டி...
அதுபோடும் குட்டி.... அதன் பேரு.... டி...
இன்னுமா தெரியலே....- வட்டி!
உலகத்தில் சிறந்தது வட்டி... – ஓர்
உருவமில்லாதது வட்டி....
இறுதியில் அப்பாடலில் எல்லாவற்றையும் விடச் சிறந்தது தாய்மைதான் என்ற ரீதியில் கவிஞர் கண்ணதாசன் பாடலை முடித்திருப்பார்.
“விபச்சாரமும்,வட்டியும் மலிந்து காணப்படும் சமுதாயம் தங்களை இறைவனின் தண்டனைக்கு இலக்காக்கிக் கொள்கிறார்கள்” என்பது நபிமொழி.
வட்டி வாங்குபவர்களையும் வட்டி கொடுப்பவர்களையும் சபிக்கும் விதமாக இறை வசனமும்,நபிகளாரின் பொன்மொழியும் ஒன்றல்ல இரண்டல்ல… ஏராளம் ஏராளம்.
இன்று கந்துவட்டி கொடுமையினால் தீக்கிரையாகி பலியான உயிர்களைக் கண்ட நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

#அப்துல்கையூம்

No comments: