அலங்கார சிலுவையை
ஆசையாய் சுமக்கும்
மனிதர்களின் காலமிது
அன்றாட அலுவல்களில்
காற்றாய் கரைந்துபோகும்
மனிதர்களின் காலமிது
அவ்வப்போதும் கூட
உறவுகளை நினைக்காத
மனிதர்களின் காலமிது
பணம் தின்று
உயிர் வாழும்
மனிதர்களின் காலமிது
உணவிலும் ரசாயனம்
கலந்து ரசித்துண்ணும்
மனிதர்களின் காலமிது
நாலும் தெரிந்துவிட்டதென
தன்னை மறந்த
மனிதர்களின் காலமிது
கால்களில் சிறகு வளர்த்து
பூமியில் மிதக்கும்
மனிதர்களின் காலமிது
ஆற்றுமணல் தோண்டி
ஆகாயம் தொட்டுவிட துடிக்கும்
மனிதர்களின் காலமிது
கையில் கணினி ஏந்தி
உலகை கையகப்படுத்திடத் திரியும்
மனிதர்களின் காலமிது
கால இயந்திரத்தாலும்
திருப்பிவிட முடியாத
மனிதர்களின் காலமிது
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment