Tuesday, October 24, 2017

" பர்தாவை நீக்கு--உன்னை பார்க்கணும்.......!"

கவிஞர் கிளியனூர் அப்துஸ் ஸலாம். அற்புதமான மனித நேயர்.
தமிழகத்தில் எங்கள் காலத்தில் வாழ்ந்திருந்த கவிஞர்களில் செல்வ வளம் கனிந்திருந்த கவிஞர்.
மயிலாடுதுறையில் காதீஜா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஹோல்சேல் கடை. சற்றுத் தள்ளியிருந்த கூறைநாடிலும் ஒரு கடையிருந்தது.
வளமிக்க கவிஞர். வளமான கவிஞர்.
இந்த மண்மீது இப்போது வாழும் வாய்பை இழந்திருப்பவர்.
அநேகமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இறைநாட்டப்படி அவனளவில் சென்றுவிட்டவர்.
கவிஞர் தா.காசிமுக்கும் எனக்கும் மச்சான் நாகூர் கவிஞர் ஜபருல்லாஹுக்கும் நெருங்கி நண்பர்.
தா.காசிம்தான் எனக்குக் கவிஞர் ஸலாமை அறிமுகம் செய்து வைத்தார்.
கவிஞர் ஸலாம் கவிதைகள் மிக வித்தியாசமான பாணிக்குரியன. பிறரிடமிருந்து வேறுபட்டு தனியே தன்னை முன்னிறுத்தும் வீரியம் நிலைத்தவை.
" இறைவனிடம் கையேந்துங்கள் --அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை.!
இது அவரது கவிதைப் பாணி.
இசைப் பாடல்கள்தாம் அவர் ஆக்கித் தந்த ஆக்கங்கள்.

வணிகர்.ஆனால் கவிதை வளங்கியவர்.
பொருளாதார எதிர்பார்ப்புகளற்றவர்.
பொருள்கள் வழங்கிய புரவலர்.
எனக்கும் இவருக்கும் உரிய புரிதல் நாங்கள் நேரில் காணதவரை விசித்திரப் பிம்பம் கொண்டவை.
இவர் பாடல்களைக் கேட்டு மிகவும் ரசித்து அவற்றில் மூழ்கி இருந்தேன்.
மாறுபட்ட இளைய சிந்தனை ஆற்றல் கவிஞன் இவர். ஏன் இசைப்பாட்டு மட்டும் எழுதும் பிடிவாதக்காரக் கவிஞனாக இருக்கிறார்? ஒரு புதுக் கவிதைக் கவிஞன் காணாமல் போகிறனே?
இப்படி ஆதங்கப் பட்டிருந்தேன்.
இவருக்கு அநேகமாக முப்பது வயதைத் தாண்ட முடியாது என நம்பினேன்.
என்னுடைய " பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகளை"ப் படித்துவிட்டு.
கவிஞர் ஸலாம் மனதில் பிம்பம் என்னைப் பற்றி வேறு மாதிரி வளர்த்திருந்தார்.
என் கவிதைத் தொகுப்பு நீண்ட நெடுந் தொடர் புதுக் கவிதைத் தொகுப்பு.
தமிழ்ப் புதுக் கவிதைத் தொகுப்பில் நீள்
தொடர் கவிதை அதுவரை வரவில்லை.
அதுதான் முதல் தொகுப்பு.
இதை அடுத்து குமுதத்தில் கவிஞர் வைரமுத்து பாரதி வரலாற்றை நீள் தொடராக எழுதினார்.
எனக்கு ஐம்பது வயதிருக்கும்.ஆழமான சிந்தனையின் ரேகை எழுத்தில் இருக்கிறது.ஆனாலும் டீன் ஏஜ் துள்ளலில் கவிதை நடனமிடுகிறது .
இப்படி என் பிம்பம் அவர் மனத்திரையில்.
ஏன் இப்படி? ஏறுக்கு மாறான பிம்பங்கள் எங்களில் முளைத்தன..?
இது தீர்மானமாகவே இருந்தது.
இதைப் புரிந்து வைத்திருந்த விளாட்டுக்காரக் கவிஞர் தா.காசிம் இதை மாற்றாமல் பாதுகாத்து தீடீரென ஒருநாள் காலையில் மயிலாடுதுறை கூறைநாடு கவிஞர் பங்களாவில் எங்களை நேரில் சந்திக்க வைத்தார்.
எங்கள் அதிர்ச்சி படீரென்று உடைந்து பிரவாகமாகப் பொங்கி விட்டது.
முப்பத்தைந்து வயது நானும், ஐம்பத்து ஐந்து வயது கவிஞரும் தழுவிக் கொண்டோம்.
சற்று நேரத்தில் என் நண்பர் கவிஞர் கிளியனூர் அஜீஸும் வந்து கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் நானும் ஜபருல்லாஹும் மயிலாடுதுறையைத் தொடும் போதெல்லாம் கவிஞர் வீட்டு விருந்துகளைத் தவிர்த்ததே இல்லை.
உணவை மட்டும் சொல்லவிலை. ஆன்மீக
இலக்கிய விருந்தையும்தான்.
எங்கள் ஞானத் தந்தையார் ஹஜ்ரத் அவர்களுக்கும் கவிஞருக்கும் இடையே ஆழமான பாசமும் நட்பும் கைகோர்த்திருந்தன.
ஆனாலும் இருவர் வாழ்நாளிலும் நேரில் சந்தித்ததே இல்லை. அந்தக் காலத்துப் பிசிராந்தையார் ,சோழன் நட்புபோல.
இருவருக்குமிடையே, ஸலாத்தைப் பரிமாற,செய்திகளைச் சொல்லிச் செல்ல
நானும் ஜபருல்லாஹும்தான். தூதுக்காரர்கள்.
ஹஜ்ரத்துக்கும் கவிஞருக்கும் , முப்பது கிலோ மீட்டரும் முக்கால் மணி நேரப் பயணத் தூரமும்தான் இடைவெளி.
ஆனாலும் இம்மண்ணுலகில் அவர்கள் இறுதிவரை நேரில் சந்தித்துக் கொள்ளவே இல்லை.
ஒருநாள் காலையில் மயிலாடுதுறையில் கவிஞர் பங்களாவில் நானும் ஜபருல்லாஹுவும் அவரைச் சந்தித்தோம்.
கவிஞர் எப்போதுமே சிரித்த முகத்தோடு கம்பீரமாகவே எங்களை வரவேற்பார்.
இயல்பிலேயே மிகைத்த நகைச்சுவை உணர்வுக்காரர். நகைச்சுவைச் சுரங்கம்.
மச்சான் ஜபருல்லாஹ் மேடைகளைக் கலகலப்பாக்கும் சிந்தனை பொதிந்த
நகைச் சுவைக் கதைகளில் எண்பது சதத்துக்கு மேல் கவிஞர் கொட்டிய கதைகள்தாம்.
அந்தக் கவிஞர் முகம் அன்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. வீட்டிற்குள் சென்றார்.
ஒரு பேப்பரைக் கையில் கொண்டு வந்தார்.
அதில் அவர் கைப்பட எழுதிய சில வரிகள் இருந்தன. வந்து இருக்கையில் அமர்ந்தார். வாசித்தார்.
" பர்தாவை நீக்கு
உன்னைப் பார்க்கணும் --உன்
பரிசுத்த அழகைக் கண்டு ரசிக்கணும்!"
இது பல்லவி. இப்படி இன்று அதிகாலையில் எழுதினேன். இதற்கு மேல் இதுவரை வரவில்லை என்றார். மனம் ஏனோ கனக்கிறது என்றும் சொன்னார்.
இந்த இறுக்கம் அவர் முகத்தில் நன்றாகவே அழுந்தித் தெரிந்தது.
"சரி கவிஞர்களே !மாடியில் குளித்து ரெடியாகிக் கீழே வாருங்கள்.சாப்பிடலாம்"என்றார் கவிஞர்.
கவிஞரின் தம்பி பத்தாஹ் எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்
சிறிது நேரத்தில் நாங்கள் தயாராகி ஹாலுக்கு வந்தோம்.
உணவு நிறைவேறிய பின்னும் கவிஞர் தன்னிலைக்கு வரவில்லை.
சற்று நேரத்தில் நாங்கள் நாகூர் புறப்பட்டோம். கவிஞர் விடை கொடுத்தார்.
இது அவர் இயல்பு இல்லை. கட்டாயப் படுத்தித் தங்கிப் பேசிப்போகச் சொல்வார். ஆனால் அன்று அது நிகழவில்லை.
புறப்பட்டோம். கவிஞர் எங்களை நிறுத்தி,
"ஹஜ்ரத்துக்கு அப்துஸ் ஸலாமின் ஸலாம்
சொல்லுங்கள்."என்றார்.
இது புதுமை. எப்போதும் இப்படிச் சொல்ல மாட்டார்."என் ஸலாம் சொல்லுங்கள்"என்றுதான் சொல்லுவார்.
நாங்கள் நாகூர் வந்து விட்டோம்.
ஹஜரத்தைச் சந்தித்து கவிஞரின் ஸலாத்தினை ஹஜ்ரத்துக்கு எத்தி வைத்தோம்.
கவிஞரின் கவிதைப் பல்லவி வரிகளையும் ஜபருல்லாஹ் இசையாகப் பாடினான்.
ஹஜ்ரத் முகம் மாறிவிட்டது.
சற்று நேரம் கடந்தது.
"ஜபருல்லாஹ்! இசையாக இல்லாமல் வசனமாகச் சொல்லுங்கள்"என ஹஜரத் கேட்டார்கள்
"பார்தாவை நீக்கு
உன்னைப் பார்க்கணும்--உன்
பரிசுத்த அழகைக் கண்டு ரசிக்கணும்.!
ஜபருல்லாஹ் வசன நடையில் சொன்னான்.
ஹஜ்ரத் முகம் சங்கடம் காட்டியது.
"ஏன் இப்படிக் கேட்டார்?.
எங்களிடம் பதிலை எதிர்பார்த்தல்ல. தங்களிடமே தாங்களே ஹஜ்ரத் கேட்டுக் கொண்டார்கள்.
பின்னர் ஹஜ்ரத் எங்களிடம் விளக்கம் தந்தார்கள்
எது பர்தா ?
உலகம்தான் பர்தா..!
இதை எப்படி நீக்குவது ?
மரணம்தான் நீக்கும்.!
பரிசுத்த அழகு ?
படைப்பாளன் அது !
கவிஞர் அவனை ரசிக்கணுமாம்.!
இப்படி ஒரு கோரிக்கையா?
நான் ஒருவன், நீங்கள் இருவர் சாட்சி வேறா?
ஹஜ்ரத் விளக்கம் இப்படி வெளிப்பட்டது.
இதன் பின்னர் கவிஞர் அப்துஸ் ஸலாம்
ஒரு சில மாதங்கள்தாம் மண்ணுலகில் வாழ்ந்தார்.
நானும் ஜபருல்லஹும் இந்த நிகழ்வுக்குப் பின்னர் கவிஞரைச் சந்திகவுமில்லை.
அவருக்குரிய பர்தா நீக்கப்பட்டு விட்டது..!.
அவர் அந்தப் பரிசுத்த அழகைக் கண்டு ரசிக்கப்
பிரார்த்திப்போம்....!
Hilal Musthafa

No comments: