Sunday, May 14, 2017

எனக்குத் தெரிந்து ....! கைக்கு எட்டும் சிகரம் .

எனக்குத் தெரிந்து ....!
கைக்கு எட்டும் சிகரம் .
எனக்குத் தெரிந்து, மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதும் செய்யும் தொழிலில் சிறப்புகளுடன் உயர்நிலையை அடைவதும் கூடவே பெரும்பணம் சம்பாதிப்பதும் யாரும் படிப்பித்து வருவதில்லை.
மேலும், ஒரே நாளில் உச்சம் தொட்டவர்களும் அல்ல.
அறியாப்பருவத்திலேயே ஆழ்மனதில் விருப்பு விதைக்கப்பட்டு செயலெனும் நீரூற்றி திட்டமிடுதலெனும் பக்குவம் பார்த்து அறுவடைசெய்யும் ஆயிரம் காலத்து பயிரென்றே பார்த்துப் படித்ததில் அறிந்துகொண்டேன்.

ஆரம்ப எண்பதுகளில் இருபது வயதை தொட்டிருந்த போது எங்கள் குழுமத்தின் முதல் கிளையை நிர்வகிப்பதற்காக உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் இருந்து தெற்கே தன்சானியா நாட்டின் எல்லையின் அருகே அமைந்திருக்கும் மாசாக்கா எனும் நகருக்கு அனுப்பப்பட்டேன்.
அங்கு எங்களது ஏஜெண்டாக இருந்தவர்களுள் ஒருவர் உள்ளூர் செல்வந்தர். ஈத் அமின் உகாண்டாவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் பலமுறை புனித ஹஜ் செய்தவர்.
அவருக்கு என்னையொத்த வயதுடைய மகன்கள் மூவர் இருந்தனர். படிப்பு நேரம்போக மற்றெல்லா நேரங்களும் தந்தையின் வியாபாரத்தில் உதவுவதுமாக இருக்கும் இவர்களோடு வேறுவழியே இல்லாமல் அவர்களின் நட்ப்பில் ஈடுபாடு காட்டினேன். அந்நகரத்தில் மருந்துக்குக்கூட ஆசிய வம்சாவளியினர் அப்போது இல்லை. வேலைநேரம் முடிந்தபிறகு இருக்கும் நேரத்தை நல்லவிதமான இளவயது ஆர்வங்களுக்கு வடிகாலாக அமைந்தது எங்கள் நட்பு.
அப்போது நட்பின் தொடர்பு நேரடியாகத்தான் மனிதர்களிடையே இருந்தது.
இப்போதுபோல வலைத்தளம் வழியாகவல்ல.
அவர்களது பாடப்புத்தகங்களை படித்தேன். மேலும் வேண்டிய புத்தகங்களை அவர்களது பள்ளி நூலகங்களில் கேட்டுவாங்கி படித்தேன். நாட்டுநடப்பை அறிந்தேன். அவர்களோடு காடுகரைகளில் சுற்றினேன். இப்போது லட்சக்கணக்கில் உறுமிக்கொண்டு சாலைகளெங்கும் விரையும் பைக்குகள் அப்போது விரல்விட்டு எண்ணும்படியே உகாண்டாவில் இருந்தன. அவற்றில் ஓன்று அவர்களிடம் இருந்தது. அதையும் ஓட்டப்பழகினேன்
இருந்தாலும் நான் நானாகவே வளர்ந்தேன்.
அவர்களில் மூத்தவன் மிகவும் கெட்டிக்காரனாக இருப்பதை நானும் கண்டுகொண்டேன்.
காலத்தின் மாற்றங்களில் சிக்குண்டு அந்த குடும்பமே சிதைந்து போனது. இருந்தாலும் எங்கள் நட்பு அவன் எப்போதாவது கம்பாலா வரும்போது என்னை வந்து சந்திப்பதில் தொடர்ந்தது.
இடையில் சிலகாலம் தொடர்பு விட்டுப்போய்விட்டது. பின்னர் பண்பலை வானொலியிலும் காணொளி நிகழ்ச்சிகளிலும் இயற்கை மருத்துவராக அறிவுரைகள் வழங்குபவராக வந்து மிகப்பிரபலமானவராக தன்னை வளர்த்துக்கொண்டார். இந்தியாவிலும் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஆயுர் மற்றும் சித்தா இயற்கை மூலிகைகளால்
மருத்துவம் பார்ப்பதிலும் இயற்கை மருந்துகள் தயாரிப்பிலும் தொழிலதிபராக பரிணமித்து உள்ளார்.
சமீபகாலத்தில் ஒருநாள் வேறொரு நண்பரோடு கம்பாலா நகரத்திற்கு வெளியே மலைமீது ஒரு அரண்மைபோன்ற வீட்டை பார்ப்பதற்காக சென்றிருந்தேன்.
வீட்டை சுற்றிப்பார்த்து கொண்டிருந்தோம். நான்கு நிலைகளில் நாற்பது அரங்குகளுமாக வேலைப்பாடுகளுடன் விலையுயர்ந்த கதவு நிலைகளுடனாதாக பிரமாண்டமாக இருந்தது.
பார்த்துவிட்டு வெளியேறும் நேரத்தில் மிகவிலை உயர்ந்த வாகனத்தில் வந்து இறங்கிவர்தான் வீட்டின் உரிமையாளர். நாடறிந்த இயற்கை மருத்துவர். முன்னொரு காலத்தில் என்னோடு பால்ய நண்பராக இருந்தவர்தான் அவர்.
பரஸ்பர நலவிசாரிப்புகளில் பால்யத்தின் இனிமையான நினைவுகளில் மிதந்து நிதர்சனத்தை அடைந்தோம்.
படிப்பினை:
காலமும் நேரமும் எப்போதும் ஓன்று போல இருப்ப தில்லை. எத்தனை சோதனைகள் வந்தாலும் பொறுத்திருந்து எதிர்த்துநின்று கடுமையாய் முயற்சித்தால் சிகரங்கள் கைக்கு எட்டிய உயரத்தில்தான் என்பது விளங்கும்.
ராஜா வாவுபிள்ளை

No comments: