Monday, May 29, 2017

உகாண்டாவின் மண்ணின் மைந்தன். முன்னாள் அதிபர் ஈத் அமீனின் இனத்தை சார்ந்தவர்

எனக்குத் தெரிந்து ....!
குடும்ப நிறுவன நிலைப்பாடு.
எனக்குத் தெரிந்து, நேர்மையுடன் திறமையும் கொண்டு கடினமாக உழைப்பவர்களுக்கு வளர்ச்சியும் உயர்ச்சியும் நிச்சையம் கிடைக்கும்.
ஆனால் அதை தக்கவைத்து முன்செல்ல வேண்டுமானால் அவரால் மட்டுமே முடிவதில்லை.
உற்றார் உறவினர் உறுதுணை கண்டிப்பாக தேவைப்படும்.
இன்றும் எனது தொழில்வழி நட்ப்பில் இருக்கும் ஒருவர் உகாண்டாவின் மண்ணின் மைந்தன். முன்னாள் அதிபர் ஈத் அமீனின் இனத்தை சார்ந்தவர். இப்போது பெரும் செல்வந்தர் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் அவரை அறியவரும்போது அரசியல் மாற்றங்களில் அடிபட்டு குடும்பமே சிதைந்து சின்னாபின்னமாக நிலையில் இருந்தார்.

இறுதியாக கையில் எஞ்சியிருந்த சிறு தொகையை கொண்டு வியாபாரத்தை தொடங்கி முழுமுயற்சியுடன் கடுமையாக உழைத்து முன்னேற்றம் கண்டது மட்டுமல்லாமல் தனது கூட்டுக் குடும்பத்தில் அனைத்து பிள்ளைகளையும் உயர் கல்வியளித்து பல நெருங்கிய சொந்தங்களுக்கு தனது நிறுவனத்திலேயே வேலையும் கொடுத்து வளர்த்துவிட்டார்.
குடும்பத்தினருடைய வளர்ச்சியில்
பெரும்பங்கு வகித்ததுடன் பிரதியுபகாரம் பார்க்காது உதவிகள் செய்துவந்தார்.
அவர்களில் சிலர் செய்யும் செயல்களால் ஏற்படும் நட்டங்களையும் தானாக ஈடுசெய்வார்.
அவர்களில் ஒரு சில ரத்தபந்தங்களுக்கு நிறுவனத்தில் சிறு பங்குகளையும்
கொடுத்தார். எவ்வளவு பெரிய மனது வேண்டும். நல்லது செய்வதே நோக்கமாக இருந்தது
ஆனால் நடந்தது என்ன?
சொல்கிறேன் .... பொறுங்கள்.
நகரத்தில் வீடும் வாசலும் இருந்தாலும் சொந்த கிராமத்து வீட்டிற்கு மாதம் தோறும் செல்வதையொரு வழிபாடாகவே செய்துவந்தார். நானும் சில சந்தர்ப்பங்களில் அவரது கிராமத்து வீட்டிற்கு சென்றுள்ளேன். ஒரு குட்டிராஜாவைப் போலவே வாழ்ந்து வருகிறார்.
தொழில் ஏற்றங்களை மட்டுமே கண்டுவந்த அவரது நிறுவனம், அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் சிறிது ஆட்டம் காண ஆரம்பித்தது.
எல்லாம் முடியப்போகிறது எரியிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுபோல நிறுவனத்தில் பங்குகளை பெற்ற ஐவரில் மூவர் நிறுவனமே அவர்களுக்குத்தான் சொந்தம் மூத்தவருக்கு அதில் எந்த அருகதையும் கிடையாது.
இது எங்கள் குடும்ப சொத்து என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சில வருடங்களாக நடந்து வருகிறது. இன்னும் எத்தனை வருடங்களாகுமோ நீதி கிடைப்பதற்கு?
நீதி பெரியவருக்கே கிடைக்கும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை
இருக்கிறது.
படிப்பினை:
எங்கள் பகுதியில் சொல்வார்கள் 'சக்கைப்பழமா சூந்து பார்ப்பதற்கு?' என்று.
எவ்வளவுதான் அன்பு செலுத்தினாலும் ஆதரவு அளித்தாலும் மனிதன் எப்போது மாறுவான் என்பது அவனுக்கே கூட தெரியமுடியாதுபோலும்!
ஆகையினால் ஆத்தில் போட்டாலும் அளந்து போடவேண்டும்.
பாகம் 9
தொடரலாம்.
ராஜா வாவுபிள்ளை

No comments: