Thursday, May 4, 2017
மாமியாரும்_மருமகளும்...!
மாமியார் தன் மருமகளை எவ்வாறெல்லாம் மனவருத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்குகிறார் என்பதற்கான சற்று விரிவான காரணங்களை பார்ப்போம்:
• மருமகள் அந்தியில் மல்லிகை சூடி அதனால் அதிகாலை தலை குளித்தல் கூடிப்போனால் ஆகாமல் போகும் சில மாமியாருக்கு.
• மகனுக்கு மருமகளுக்கும் ஏதாவது ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி அன்யோன்யம் கூடினால் சில மாமியார்கள் கேட்கும் அறிவார்ந்த கேள்வி யாதெனின் 'எதைக்காட்டி மயக்கினாய் என் மகனை'...?
• மருமகள் ஆடை மாற்றி அலங்காரம் செய்தாலும் ஆகாது என பேசும் சில மாமியாரும் உண்டு்
• மருமகளிடம் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் சரியும் ஒரே ஒரு சதவீதம் குறையும் இருந்தாலும் தொண்ணூற்று ஒன்பதை பூஜ்ஜியமாக்கி அந்த ஒரு சதவீதத்தை நூறாக்கும் சில மாமியாரும் உண்டு.
• மகளுடைய கணவனான தனது மருமகன் ஏதோ காரணத்தால் தன் மகளை கவனிக்கவில்லை என்றதும் தன் மகன் மருமகளை நல்ல முறையில் கவனிக்கும் முறையை கண்டு இரண்டையும் ஒப்பிட்டு மருமகள் மேல் புகை தள்ளும் சில மாமியாரும் உண்டு.
• என்னதான் வாய்க்கு ருசியாக மருமகள் வகை வகையாய் சமைத்தாலும் இதையெல்லாம் யார் சாப்பிடுவார் கொண்டு போய் நாயிடம் கொட்டு என்று தன் விஷ கொடுக்கால் கொட்டும் சில மாமியாரும் உண்டு.
• அவ்வளவு ஏன் மருமகள் ரசம் வைத்தாலும் அதை இவ்வளவு தண்ணீர் போலவா ரசம் காய்ச்சுவது என கேட்கும் சில அறிவார்ந்த மாமியாரும் உண்டு.
• மருமகளிடம் இருக்கும் ஆயிரம் கலையை கண்டு கொள்ளாமல் அதை புறந்தள்ளி அடுத்த வீட்டு மருமகள் தையல் மெஷினில் லுங்கிக்கு ஓரம் அடிப்பதை கண்டு புலகாங்கிதம் அடைந்து அதை பிக்காசோ ஓவியத்தோடு ஒப்பிட்டு சிலாய்கிக்கும் சில மாமியாரும் உண்டு.
• மருமகள் தன் தாய் வீடு சென்று வருகிறேன் என்றால் அன்றுதான் வகை வகையான பல நோய்கள் வரும் சில மாமியாருக்கு.
• மருமகளின் வீட்டிலிருந்து அவர் சம்மந்தப்பட்ட உறவினர் யாராவது வந்தால் செந்தாமரை மலர் போல் மாறும் சில மாமியார்களின் முகம்.
• மருமகள் இங்கு செல்கிறேன் என்றால் ஏன் அங்கே செல்ல வேண்டும் என கேட்பதும்! சரி வேண்டாம் என்று விட்டுவிட்டால் ஏன் அங்கு செல்லவில்லை என கேட்பதும் சில மாமியாரின் விந்தை குணங்கள்.
• செயல் ஒன்று என்றாலும் அதை தன் மகள் செய்தால் ஒரு அழகான அர்த்தமும் அதே செயலையே தன் மருமகள் செய்தால் வேறுவிதமான விகார அர்த்தமும் கொடுக்கும் சில மாமியாரும் உண்டு.
• தனது மகன் தன்னிடம் ஏதோ ஒரு காரியத்திற்காக கோபித்தால் அதறக்கு காரணம் தன் மருமகள்தான் என எண்ணி தனது கோபத்தை அப்படியே மருமகள் பக்கம் திருப்பும் சில மாமியாரும் உண்டு.
• தனது இளம்வயதில் இது கிடைக்கவில்லை அல்லது தான் வாழ இப்படி வாழ்க்கை அமையில்லை என்பதற்காக மருமகளுக்கு வாய்த்த வாய்ப்பான வாழ்க்கையை கண்டு வெதும்பி ததும்பும் சில மாமியாரும் உண்டு.
இப்படி எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக தன் மருமகள் என்னதான் தன்னை விழுந்து விழுந்து கவனித்தாலும் அதையெல்லாம் சட்டை செய்யாமல் அதை அப்படியே குப்பையில் போட்டுவிட்டு குதர்க்கம் பேசும் எத்தனையோ மாமியார்கள் இன்னும் இங்கே வாழத்தான் செய்கிறார்கள். அதையெல்லாம் தன் கணவருக்காக அப்படியே பொறுத்தும் சகித்தும் வாழ்க்கையை செவ்வனே நடத்தும் மருமகளும் இங்கேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Samsul Hameed Saleem Mohamed
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment