Monday, May 8, 2017

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்...

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்...

இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப்போன்றே மற்ற சமூகங்களும் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.


அவர்களுடைய இந்த சூழ்ச்சியை முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் எந்தெந்த காலத்திலெல்லாம் இஸ்லாமிய சமுதாயம் ஓர் அணியில் ஒன்று சேரவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியதோ அப்போதெல்லாம் அந்த முயற்சியைத் தகர்ப்பதற்காக இஸ்லாத்தின் எதிரிகள் முழு முயற்சியோடு செயல்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

நபிகளாரின் மறைவுக்குப்பின் 1420 வருடங்கள் ஆகியும் இன்றுவரை நபிகளார் காலத்தில் காணப்பட்ட சமூக ஒற்றுமையை காண முடியவில்லை. கொள்கையை காரணமாகக் கொண்டு பிரிந்தார்கள் அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்தார்கள். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக பிரிந்தார்கள்.

குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதில் ஒவ்வொருவரும் சுயவிளக்கங்களைக் கொடுத்து பிரிந்தார்கள் தனி நபர்களின் மீதுள்ள பற்றின் காரணத்தினால் பிரிந்தார்கள் ஒவ்வொரு சாராரும் தங்களுடைய போங்கை நியாயப்படுத்துவதற்காக குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரணங்களையும் தான் பயன்படுத்தினார்கள்.

இன்றய இஸ்லாமிய சமூகத்தையும் அது எதிர்நோக்கியுள்ள அவல நிலைகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் போது கடந்த காலங்களிலே சந்திக்க அதே நிலையைத் தான் சிறிதும் மாற்றமின்றி சந்தித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவிலும் அப்படித்தான் இருக்கிறது. வட்டார அளவிலும் அப்படித்தான் இருக்கிறது.

நாம் வாழும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் என்றைக்காவது இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு ஒர்அணியில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை நம்மால் பார்க்க முடியவில்லை. நம்மைப் படைத்த இறைவன் அல்லாஹ்வை புரிந்து கொள்வதிலும் ஒன்றுபட்டவர்களாக இருக்கவில்லை.

சமுதாயத்தின் இப்படிப்பட்ட அவல நிலையை கண்கூடாக பார்த்தபோது தான் அறியாமையிலிருக்கின்ற மக்களுக்கு அல்லாஹ்வை புரிய வைத்து, அவன் தான் இறைவன் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஓர் இறைக் கொள்கையை நிலை நாட்டுகின்ற விஷயத்திலாவது சமூகத்தை ஒன்று கூட்டிவிடலாம் என்ற நல்லெண்ணத்தோடு, அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று எல்லோரும் சபதம் ஏற்போம் என்ற முழக்கத்தோடு இஸ்லாமிய சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் வீதியில் இறங்கினோம்.

அதனுடைய நல்ல பலனை கண் கூடாகக் கண்டோம். இலட்சியப் பயணத்தில் வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருப்பது சத்தியத்தின் எதிரியான சாத்தானுக்கு எப்படி நிம்மதியைத் தரும், வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பாணையை உடைத்த கதை போன்று, அல்லாஹ்வைப் பற்றி சரியாக புரியாமலிருந்த மக்கள் தெளிவுபெற்று அதிலேயே தங்களை ஐக்கியமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முழு மூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் சாத்தான் சமூகத்தில் ஊடுருவி, சிந்தனை சலவை செய்து, வேறுபக்கம் சமூகத்தின் சிந்தனையைத் திருப்பும் முயற்சியில் இறங்கினான். பலவீனமான மனமுடைய மனிதன் திசைமாறி போகும் நிலை உருவாகி இன்று பல்வேறு திசைகளிலும் சமூகம் சிதறிச் சென்று கொண்டிருக்கிறது.

இதைப்பார்த்து கவலைப்பாடத நல்லுள்ளங்கள் இல்லாமல் இருக்க முடியாது. நாளுக்கு நாள் அதிகாரித்துச் செல்லும் பிரிவினை வாதம் முற்றுப் பெற்றுவிடாதா? ஒர் அணியில் ஒன்று பட்டுவிட மாட்டார்களா? என்று ஏங்கும் நெஞ்சங்களின் உணர்வுகளை நியாயமானவை.

இவர்களை எப்படி ஒருங்கிணைப்பது?

இவர்களை எப்படி ஒருங்கிணைப்பது? ஏற்கனவே ஒன்று படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளெல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டு விட்டதே இனிமேலும் முயற்சிகள் பயனளிக்குமா? என்றெல்லாம் கேள்விகள் எழுவதில் தவறில்லை. அதேநேரத்தில், சிலர் வரட்டுத்தனமான வாதங்களையும், முரட்டுத்தனமான அனுகுமுறைகளையும், கசப்பான வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி, சமூகத்தை தாங்கள் விரும்புகின்ற விதத்தில் ஒன்று சேர்த்துவிடலாம் என மனப்பால் குடித்துவருகின்றனர்.

இவர்களின் அனுகுமுறைகளினால் சமூகம் எதிர்விளைவுகளைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குரோதமும் விரோதமும் கூடிக் கொண்டே போகிறது. இந்த அனுகுமுறையினால் எந்த வித பலனையும் எதிர்பார்க்க முடியவில்லை. இருக்கின்ற அணிகளோடு புதிதாக ஒரு அணியைத் தான் உருவாக்க முடிந்ததே தவிர, ஓர் அணியில் ஒன்று சேர்க்க முடியவில்லை.

இஸ்லாமிய சமூகத்தை ஒர் அணியில் ஒன்று சேர்க்க ஒரேவழி அல்லாஹ்வால் மனித சமூகத்திற்கு வழிகாட்டுவதற்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எந்த இலட்சியத்தை முன்வைத்து மக்களை ஒன்றிணைக்க பாடுபட்டார்களோ அதே இலட்சியத்தின் பால் மக்களை அழைத்தால் மட்டுமே அவர்களை ஒர் அணியில் ஒன்று சேர்க்க முடியும்.

அதாவது அல்லாஹ், ஒருவனை மட்டுமே வணங்குங்கள் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள் என்ற இந்த இலட்சியத்தை சரியான முறையில் மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் மட்டும் எல்லோரும் இணைந்து பாடுபடுவார்களானால் அல்லாஹ்வின் நாட்டத்தால் நிச்சயம் சமுதாயத்தை ஒர் அணியில் திரட்டி விடலாம். இந்த இலட்சியத்தை நிலைநாட்டும் முயற்சியைத்தான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் தமிழ் மக்களிடையில் 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

இன்று பலர் இந்த அடிப்படை இலட்சியத்தை மறந்துவிட்டு, அடிப்படை இல்லாத சில்லறை விஷயங்களில் மூக்கை நூழைத்து அதை பெரிது படுத்திக்கொண்டிருப்பதால் தான் சமூகம் சிதறிக் கொண்டிருக்கிறது. எல்லா இறைத்தூதர்களும் தங்களுடைய மக்களை இப்படித்தான் அழைத்தார்கள்ஸ.

"என்னுடைய சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள் உங்களுக்கு அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை" (அல்குர்ஆன் 11:50)

அல்லாஹ்வின் இறுதித் தூதர் சொன்னார்கள்: "நீங்கள் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் வெற்றிபெற்று விடுவீர்கள்''. (நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா)

நன்றி: அல்-ஜன்னத் ஜனவரி-2011
http://nidur.info

No comments: