Raheemullah Mohamed Vavar
ஆக, எங்கேயும் எல்லாமும் அப்படித்தான் இருக்கிறது போலும். ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் என்றாலும் இவ்வளவு தள்ளுமுள்ளு ஏற்படும் என்று நினைக்கவேயில்லை. அவர்களைப் போன்றவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை எவ்வித மாற்றமுமின்றி அப்படியேதான் தங்கள் தீண்டாமை நிலைப்பாட்டை பேணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்….
மற்றுமொரு தோழரிடம் பிறிதொரு விஷயத்தை சற்றே தயக்கமாய் கேட்ட போது “என்ன இப்படி தயங்கித் தயங்கி கேட்கிறீகள், உரிமையோடு சொல்லுங்கள், அது என்ன முடியுமானால் என்று தேடிப் பிடித்ததுபோல் கேட்பது, முடித்து வை என்று சொல்ல வேண்டும், சொன்னதை அப்படியே இப்போதே முடித்து வைக்கிறேன்” என்று சொல்லிய சொல்லால் பட்டென்று மனசுக்குள் ஆழமாக நுழைந்து அவருக்கான அந்த தனி இடத்தில் மீண்டும் கம்பீரமாக ஏறி அமர்ந்து கொண்டார்.
வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமே, நீரும் நிலமுமாய், அனலும் புனலுமாய், சூரிய சந்திரனுமாய், வெப்பமும் குளிருமாய், இரவும் பகலுமாய், ஆணும் பெண்ணுமாய், நல்லவை அல்லவையாய் என்றிருக்கையில் அதில் உள்ளடங்கிய எப்பொருளும் எவ்வுயிரும் அப்படியும் இப்படியுமாகவே இருக்க முடியும் என்கிற பேருண்மையை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டியாவது மனிதர்களின் இரு தரப்பினரையும் அப்போதைக்கப்போது பார்த்து பேசி பழகிட வேண்டிய அவசியம் இருக்கிறதுதான் போலும்.
நன்று, தீது என்கிற இந்த இரண்டு பக்கங்களில் எந்த ஒரு பக்கத்திலிருந்தாவது தொடர்பு அறுந்து போகுமானால், நாங்களெல்லாம் விவேகமானவர்களாக்கும் என்று தங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்களின் யதார்த்த சமநிலை அவர்களை அறியாமலேயே பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு, இதையே சற்று மாற்றிச் சொல்வதென்றால்………
அறிவின் வெளிச்சப் பகுதியில் மாத்திரமே வாழும் மனிதர்களுக்கு அறவே தெரியாது அதன் இருண்ட பகுதியில் வாழும் மக்களின் இயல்பு நிலை என்னவென்று ?
No comments:
Post a Comment