இறையளிக்கும் ஆற்றலில்
மேகங்கள் பாட்டெழுதி
ஆகாயம் இசையமைக்க
மழையெனும் இன்னிசை
பொழிவதில் குதூகலம் ....
பிஞ்சு குழந்தைகள்
வெண்மையாய் புன்னகைத்து
நாவினில் கனிந்திடும்
பஞ்சு மொழிகளை
மொழிவதில் குதூகலம் ....
பூமியெனும் தறிகளில்
இயற்கையவள் நெய்திடும்
பசுமையெனும் ஆடைகளை
கண்களுக்குள் அணிகையில்
மனசுக்குள் குதூகலம் ...
உள்ளமதில் ஊறிடும்
களங்கமிலா அன்புதனை
பாசமெனும் சிறைகளில்
நெருக்கமாய் பூட்டுவதில்
இதயத்திற்கு குதூகலம் ....
உழைப்பின் மடியமர்ந்து
திறமையினை வேர்வையாக்கி
கனவுகளை நிஜமாக்கிட
சம்பாதிக்கும் ஊதியங்களால்
குடும்பங்களில் குதூகலம் ....
தரணியெங்கும் வியாபித்து
கடினமாய் பணிகளாற்றி
விடுமுறைக்காக விமானமேறி
ஆசையெனும் சுமைகளோடு
ஊரிறங்குவதில் குதூகலம் ....
காற்றின் முதுகிலேறி
சுகங்களை சுமந்து
பயணிக்கிற தென்றல்
மனிதனின் உடலிலேறி
வருடுவதில் குதூகலம் ...
விரித்திடும் இதழ்களால்
தாவர கிளையிலமர்ந்து
சிரித்திடும் மலர்கள்
சிந்திடும் வாசனையை
முகர்வதில் குதூகலம் ....
ஏழ்மையெனும் ஆடையணிந்து
வறுமையெனும் முகவரியோடு
வாழ்ந்திடும் மனிதர்களை
மனமார்ந்த சேவைகளால்
அரவணைப்பதில் குதூகலம் ....
விண்ணுலக வாழ்க்கையாம்
மறுமையின் நிகழ்வுகளை
எடுத்தியம்பும் திருமறையாம்
குர்ஆனின் வசனங்களை
ஓதுவதில் குதூகலம் ....
அப்துல் கபூர்
No comments:
Post a Comment