Friday, October 31, 2014

திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்தே ஆகவேண்டுமா?

முதலில் திருமணம் மற்றும் குடும்பம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்வது அவசியம். நீங்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. முழு சமூகத்திற்கும் தேசத்திற்கும் உலகத்திற்கும் சம்பந்தப்பட்ட விஷயம்.

உங்கள் குழந்தைகள்தானே வருங்கால உலகம்? தோராயமாக பத்து சதவீதம் பேர் மட்டுமே உலகில் எந்த இடத்திலும் சமாளித்து வாழும் திறமை படைத்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் இருக்கும் ஊரைத் தாண்டினாலே, பிழைப்புக்கு வழி இல்லாதவர்களாகத் தான் இருக்கிறோம். படிப்பறிவில்லாத தாயிடம் குழந்தை எப்படி வளரும்?


நிச்சயம் தாய்மார்கள் அத்தனை பேராலும் குழந்தைகளை அன்பாக பார்த்துக் கொள்ள முடியும். அதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதில், ஒரு குழந்தையின் மனநிலை உருவாக்கப்படும் அந்தத் தருணத்தில், அக்குழந்தையோடு நெருங்கிய தோழியாய் இருப்பது தாய்தான். குழந்தையின் உருவாக்கத்தில் தாயின் திறமை மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

எனவே சமூகம், தேசம், இன்னும் சொல்லப்போனால் அடுத்த தலைமுறையே முன்னோக்கிச் செல்ல மிக முக்கியமான காரணமாக இருப்பது ஒவ்வொரு தாயின் திறமையே. பெண்களின் படிப்பறிவு அடுத்த தலைமுறையை நிர்ணயிக்கிறது.

பெண்கள் படிப்பறிவு பெற்றால் ஏதோ தவறு நேரும் என்று இதுநாள்வரை இப்படியே வாழ்ந்துவிட்டோம். தற்போதைய சூழ்நிலையில், கல்வி இல்லாத பெண், குழந்தை பெற்றுக் கொள்வதற்கே தகுதி இல்லாதவள் என்றே சொல்லலாம்.

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் பல இடங்களில், ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கல்வியில் மட்டுமல்ல, ஆரோக்கியம், திறமை போன்றவற்றிலும் கூட அதிக எண்ணிக்கையிலான மக்கள், இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு கல்வியறிவு தர முயற்சிக்காமல், அவர்களை குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே உபயோகப்படுத்தியதுதான். இப்போது இந்தியாவில் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்கிறது.

நம்மில் எத்தனை பேர் உலத்தில் எந்த மூலையிலும் வேலை செய்யும் திறன் படைத்தவர்களாக இருக்கிறோம்? தோராயமாக பத்து சதவீதம் பேர் மட்டுமே உலகில் எந்த இடத்திலும் சமாளித்து வாழும் திறமை படைத்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் இருக்கும் ஊரைத் தாண்டினாலே, பிழைப்புக்கு வழி இல்லாதவர்களாகத் தான் இருக்கிறோம்.

கல்வியறிவு அற்ற தாயின் சூழ்நிலையில் வளர்ந்ததே இதற்கு முக்கியமான காரணம். இதற்காகவே பெண்களுக்கு, கல்வி அறிவு கொடுத்தே ஆக வேண்டும். இதைத் தாயோ, கணவனோ, மாமியாரோ யாராக இருந்தாலும் தடுக்கக்கூடாது, தடுக்க வாய்ப்பளிக்கவும் கூடாது. ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்றால் நாம் சற்று தீவிரமாக செயலாற்றினால் மட்டுமே நடக்கும்.

சிறிதளவாவது மாற்றம் உருவாக்க வேண்டுமென்றால் தீவிரம் இல்லாமல் எதுவும் நடக்காது. அந்த தீவிரத்தைப் பெண்கள் உருவாக்க வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெண் கல்வி மிகவும் அவசியம். நாம் இன்னமும் பலகாலம் பின்னோக்கியே வாழ்கிறோம். நாம் முன்னோக்கிப் போக வேண்டுமென்றால், நம் வீட்டில் இருக்கும் பெண்கள் நல்லமுறையில் கல்வியறிவு பெற்றால்தான் நாளைய தலைமுறை திறமையோடு இருக்கும்

M A Mohamed Ali
 

No comments: