Wednesday, October 7, 2020

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, நாசா நடத்திய சர்வதேச போட்டியில் விருது வென்றுள்ளதாக

 Aashiq Ahamed



அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, நாசா நடத்திய சர்வதேச போட்டியில் விருது வென்றுள்ளதாக அந்த பல்கலைக்கழக இணையதளம் செய்தி  வெளியிட்டுள்ளது. 

"Space Apps Challenge" என்ற பெயரில் நான்கு விண்வெளி மையங்களுடன் இணைந்து வருடா வருடம் இப்போட்டியை நடத்துகிறது நாசா. இவ்வருடம் 150 நாடுகளை சேர்ந்த 26,000+ மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். 

அக்டோபர் 2-டிலிருந்து நான்காம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஆயிஷா சம்தானி தலைமையிலான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக குழு (பார்க்க படம்), நடுவர் விருப்பத்தேர்வு விருதை வென்றுள்ளது. 

கங்கை மற்றும் சிந்து நதிகள் பாயும் வட இந்திய பகுதிகளில், கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலக்கட்டங்களில் காற்றின் தரம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர் இக்குழுவினர். காற்றின் தரம் உயர்வதால் ஏற்படும் உடல்நல ஆரோக்கியம் குறித்து விரிவாக பேசுகிறது இவர்களின் ஆய்வறிக்கை. 

இதுமட்டுமல்லாமல், இவர்கள் உருவாக்கியுள்ள காற்று தர குறியீடு யுக்தியின் மூலம், ஒரு பகுதியில் நிலவும் காற்று மாசு குறித்து அப்பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதுடன், உடல்நல வழிகாட்டல்களையும் கொடுக்க முடியும். இத்தகைய ஆய்வுக்காகவே அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் குழுவிற்கு நாசா விருது கிடைத்திருக்கிறது. 

வாழ்த்துக்கள். சமூகத்திற்கு பயன்தரும் மேலும் பல ஆய்வுகளை முன்னெடுக்க பிரார்த்தனைகள். 

படம்: விருது வென்ற மாணவர் குழு 

செய்திக்கான ஆதாரம்: 

1. Aligarh Muslim University Website. https://www.amu.ac.in/about3.jsp?did=2007

2. NASA Space Apps Challenge. https://www.spaceappschallenge.org/about/when-and-where/

No comments: