Monday, October 19, 2020

புர்தா ஷரீஃப் புகலும் புகழுரைகள்

 புர்தா ஷரீஃப் புகலும் புகழுரைகள்

 அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ்

புர்தா ஷரீஃப் புகலும் புகழுரைகள்


(ஆய்வுக் கட்டுரை )


 


பன்னூலாசிரியர், முனைவர் தக்கலை எம்.எஸ். பஷீர்

இயக்குநர்

இஸ்லாமியத் தமிழியல் ஆய்வகம்

நாகர்கோவில் -

எகிப்து நாட்டு மாமேதை இமாம் ஷர்புத்தீன் முஹம்மது அல்பூஸிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கி.பி. 1211-1299, அவர்கள் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது காதல் கவிதைகளால் பாடிய கஸீதத்துல் புர்தா புகழுரைப் பாமாலை.


அற்புத மொழியாம் அரபியில் கஸீதத்துல் புர்தா அமைந்துள்ளது. கஸீதத்துல் புர்தா = புர்உத்தா - பிணி நீங்கல், புர்தா - பரிவட்டம் போர்வை என முறையே பொருட்படும்.


இமாம் பூஸிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் நோயினால் ஆறாத்துயருற்றபோது நபிகள் நாயகத்தின் மீது தாம் கொண்டிருந்த காதலை, பேரன்பினை - பாசத்தினை நேசத்தினை பாமாலையாகச் சூட்டியுள்ளார்கள் . இது 163 அரபு மொழியில் ஈரடிகளால் ஆனது. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், இமாம் பூஸிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் கனவில் தோற்றமாகி, அவர்களின் உடலைத் தம் திருக்கரங்களால் தொட்டுத் தடவினார்கள். இந்த ஆன்மிக உணர்வால்,பாவலர் பூஸிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின்  பிணி பரிபூரண குணமடைந்தது. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் போர்வையை தனக்கு உயர்த்திய காட்சியையும் பூசிரியார் கனவில் கண்டுகளித்து பேருவகை கொண்டார்கள்.


நோயுற்றபொழுதும், நோயற்ற பொழுதும் இல்லங்கள் தோறும், பொது மன்றங்களிலும் ஈடுபாட்டுடன், பயபக்தியுடன் ஓதித் தம் குறை தீர்த்து நிறைவு பெற வழி வகை செய்யும் திறல் மிகு நலமூட்டும் நெஞ்சு நெக்குருக பாடிய பெறலரும் காவியம்.


அல் ஸலாமத் என்னும் ஆன்மிகச் சிகிச்சை முறை பேணுதல் என்பதும் புர்தா ஓதுதலின் முக்கிய இடம் பெறுகிறது.


இக்காவியம் அல்கவாகிப் அல் துர்ரிய்யா ஃபீமத்ஹி கைரில் பரிய்யா என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. எனினும் புர்தாஹ் என்ற பெயரால் புகழ்பெற்றது. இந்நூலின் மற்றொரு பெயர் தாஜுல் ஔவ்ராத்.


மொழிபெயர்ப்புகள்:


பார்ஸி, துருக்கி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, இலத்தீன் போன்ற பல மொழிகளில் இன்றுவரை நூற்றிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள், விளக்கவுரைகள், விரிவுரைகள் வெளிவந்துள்ளன.


கி.பி. 1761 முதல் ஐரோப்பிய அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. பேராசிரியர் ஹிட்டியும் புகழும் பெருநூல். பஞ்சாபி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் மலேசியன் பதிப்பும், சுவாஹிலி மொழியில் பதிப்பும், பெர்சியன், உருதுவில் ஹைதராபாத்தில் சித்திரப் பதிப்பினையும் பெற்றச் சிறப்புண்டு. J.W. ரெட் ஹவுஸ் கி.பி. 1880இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஷெய்கு இஸ்லாமிய அறிஞர் இப்ராகீமுல் பாஜூரி விரிவான உரை எழுதியுள்ளார். இந்நூலுக்கு அஷ்ஷெய்கு காலிதுல் அஸ்ஹரி அறிஞர் இலக்கணக் குறிப்புகள் இலக்கிய நயங்களையும் ஓரக் குறிப்புகளாக எழுதியுள்ளார்.


இமாம் பூஸிரி இயற்றியவை. 1. அல் கஸீதத்துல் முளரிய்யா 2. அல் கஸீதத்துல் முஹம்மதிய்யா 3. அல் கஸீதத்துல் ஹம்ஜிய்யா.


இன்பத் தமிழில் நெய்தவர்கள் : 


1. புலவர் போர்த்திய பொன்னாடை என விரிவுரையாகப் பன்னூலாசிரியர் உத்தமபாளையம், கூடலூர்,மௌலவி N.S.N. முகம்மது அப்துல் காதர் பாக்கவி (1990, 4ஆம் பதிப்பு) எழுதிய உரைநடை விளக்கம். இதில் திருக்குர்ஆன் - ஹதீது,வரலாற்று நிகழ்ச்சிகளின் ஆதாரங்களைக் கொண்டு விளக்கவுரை எழுதியுள்ளார்கள். இதில் கவிஞர் ம.கா. மு.காதிறு முகைதீன் மரைக்காயரின் பாடல்களையும் எடுத்துக்காட்டியுள்ளார்கள் .


மதுரை ம.கா.மு.காதிறு முகைதீன் மரைக்காயர் செய்யுளாக கஸீதத்துல் புர்தாஹ் மாலை (1960) பாடியுள்ளார். 

. ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புத்தீன் மிஸ்பாஹி அவர்களும் (2001, 2007) உரைநடையாக்கியுள்ளார்.                    

கூத்தாநல்லூர் ஈத் மீலாதுந் நபி குழுவினரால் தமிழ் உரை நடை மொழிபெயர்ப்பு.

கவிப் பரிவட்டம் (புறுதா வென்னும் கஸீதாவனி மொழிபெயர்ப்பு -1953 (மாத்துறை காலி அல்பியன பிரஸ் - ஆசிரியர் பெயரில்லை - சுவடி ஆற்றுப்படை வால்யூம் - 1.

புறுதா மாலை - காளை அசனலியார் -1962.

கஸீதத்துல் புர்தா - இமாம் பூசிரி -1925. 8. மர்ஹும் பேராசிரியர் முனைவர் பசுலு முகைதீனின் நோயறுவனுவல் (1964, 1977, 1978)அழகுக் கவிதைகளின் ஈரடி மூலநூலின் ஓசையாலே அமைந்து நயந்தோற்றுகிறது.

அல் கஸீதத்துல் முஹம்மதிய்யா - விளக்க உரையுடன் - கவிஞானி ஜி.எஸ்.டி. மஹ்பூபு சுப்ஹானி.

மௌலவி முஹம்மது நூஹ் சிராஜுதீன் பாகவி - செந்தமிழ் கவியில் தேன் சிந்தும் புர்தா ஷரீப் என்ற பெயரில் நாலடி கவியாக அமைத்துள்ளார். 

மௌலவி அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி - எளிய நடையில் மொழி பெயர்த்து புர்தா ஷரீப் ஓதுவதன் பயன்களையும் இணைத்து ஃ பஹீமிய்யா பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டுள்ளார்.  

நோயற்றுபனுவல் / கஸீதத்துல் புர்தாஹ் மாலை - ஒரு பார்வை


ஜம்ஹுத்துல்மாலை தந்த மேனா ஹாஜியார் என்றும், மெய்ஞ்ஞானியின் மூத்த மகன் பாட்டாறு பாய்ந்தொழுகும் கோட்டாற்று,பேராசிரியர், முனைவர், பன்னூலாசிரியர், கவிஞர் வெற்றிச் செல்வன் பசுலு முகியித்தீன் பாடியது நோயறுபனுவல் (1962). இதற்கு முன்பே மதுரை காதர் முகைதீன் பாடிய நூல் பற்றி தெரியாதது என்பதையும் அறிவித்துள்ளார். (பக்கம் 27 நோயறுபனுவல்) என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இது அரபி ஈரடிக் கண்ணிகளுக்கு இசைவாக தமிழிலும் ஓசை நயம் இசைக்க முகிழ்த்த முத்துப்பனுவல் ஸலவாத்து 1+165 அரபி ஈரடிக் கண்ணிகளை 12 துணைத் தலைப்புகளாக நூலமைப்பு என நுவன்றுள்ளார். (பக். 281)


காதிர் முஹ்யித்தீன் மரைக்காயர் கி.பி. (1888-1975) இந்திய விடுதலைக்கு பாடுபட்ட வீரர் - பன்னூலாசிரியர் (பார்க்க இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் பக்கம் 143-145) இவர் 1-7, 8-11, 12-28, 29 முதல் பெருமானார் புகழ், அப்பால், வெளிப்படை என தலைப்புகளைக் காட்டியுள்ளார்.


புர்தா ஓதுவதன் பயன் என்ன என்பதையும் பார்த்துச் செல்வோம்.


அல்லாஹ் மீது - பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது மெய்யன்பு பெறுதல்.

மனதை அடக்குதல் - நன்மைகளைச் செய்தல்.

பாவ மன்னிப்பு பெறுதல்.

இல்லறத் துறவியாக இருந்த நாயக வாழ்வும் வாக்கும் கடைப்பிடித்தல். 

உடல், பொருள், ஆவி இஸ்லாத்திற்கே என்ற உணர்வூட்டல் என புர்தா மாலை நமக்கு பல அனுபவங்களை உணர்த்துகிறது எனில் மிகையன்று.

அரபிப் பாக்களின் இலக்கண இலக்கிய நயங்களை சிறப்புக்களையும் ஆய்வதும் நம் கடமை. ஆனால் இங்கு நற்றமிழில் பாடிய அந்நயமும் சிறப்பும் ஒருவாறு சுருக்கமுறக் காண்போம்.


ஸலாத்துடன் ஆரம்பமாகி 1-7 வரையுள்ள கண்ணிகள் - தலைவனைப் பாங்கன் வினவுதல். 17-28 - நெஞ்சோடு கிளத்தல், 8-11 -உற்றதுரைத்தல் எனும் தமிழ் மரபோடு ஒப்பாக்கி கூறுவர்.


ஆரம்பமே ஆன்மாவுடன் உரையாடுதல் போல அமைந்தது. குரு - சீடன், தலைவன் - தலைவி, சிங்கன் - சிங்கி, லைலா - லைலி,ஆண்டான் - அடியான் என வினா விடை வடிவமாகவும் குறிப்பிடலாம்.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதுற்ற காதல் நோயால் வருந்தி இரத்தக் கண்ணீர் சொரிதல் பற்றிக் கூறப்படும் பொழுது 'கண்ணுகுக்கும் நீரதிலே கறையுதிரம்' என நோயறு பனுவல் பாடும். இதனையே 'சலத்தினோடு இரத்தம்' என கவிகாதிர் முகைதீன் குறிப்பிடுவார்.


நோயறுபனுவல், 'காதல் நினைப்பும் காற்றும் ஒளியும் உணர்வை அதிகப்படுத்தலாக - மதீனா நகரின் 'காளிமா' என்ற இடத்தினையும், 'இழம்' என்ற மலையையும் கூறி (2); 'புதைந்துள்ள மனக் காதலை' கண்களும் இதயமும் வெளிப்படுத்தும் (4) எனப் பாடும் இமாம்'பூஸ்ரி, அரபியர் கூறும் உத்ரிக் கோத்திரத்துக் காதல்' எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளார் 'பனு உத்ரா' குலத்தினர் உண்மைக் காதல் கொள்ளும் மரபினர். அது இறப்பு வரை நீடிக்கும் காதல். எனவே புலவர் பூஸ்ரி பயன்படுத்தி எடுத்துக்காட்டியுள்ளார். இறைக் காதல், நபிக் காதல் எப்படியிருக்க வேண்டும் என்பதை இமாம் பூஸ்ரி ஓர் சூஃபியாகவும் விளக்கமளிக்கிறார். சூஃபித்துவத்தில்,இறைவனை அடைவதற்கான படி நிலையில் (1) குரு (2) நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  (3) இறை மீது காதல் கொள்ளுதல் என்று கூறுவர். மெய்ஞ்ஞானத் தமிழிலக்கியங்களில் இம்மூன்றும் காணப்படுவது காணலாம். இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் தமிழ் இலக்கியங்கள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) - ரமீஸ் பிலாலி (பக் - 246-306)


உருவகம்: 


'நோயுனது வதனமதில் / நெடுங்கண்ணீர் பசலைகளைத் / தோய்ந்து வசந்தம் பன்னீர்த் / தருவெனவும் நின்றதுவே' (7) எனக் காதல் நோயினால் முகத்தில் பசலை படர்ந்தது. நெடிய கண்ணீரும் வெளியாயிற்று. இதனால் உடல் வசந்தமாகவும் பன்னீர் மரமாகவும் காட்சி அளிக்கிறது எனப்பாடும் கண்ணிகளில் முகம் வசந்தமாகவும், பன்னீர் மரமாகவும் உருவகிக்கப்பட்டது. புலவர் பூஸ்ரியின் அரபுப்பா பொருத்தமாக தமிழ்ப்பாவாயிற்று. முகம் வசந்தமாகவும், பன்னீர் மரமாகவும் உருவகிக்கப்பட்ட நயம் காணலாம்.


இறப்பின் முன் அறிவிப்பு - நன்மைகள் செய்க: நரை, முதுமை, இறப்பின் முன்னறிவிப்பாகும் என்பதைக் கூறி நன்மைகளைச் செய்க. (12, 13, 14) எனப்பாடும் கண்ணிகள் அன்றும் இன்றும் இனி என்றும் உணர்த்தி அறிவூட்டுவன அன்றோ! நரை - விருந்தாளியாக மறுமைக்கு பலன் சேர்க்க வழிகாட்டி ஒளியூட்டுகிறது.


உவமை: மனம் - அடங்காத குதிரையினை அடக்கும் கடிவாளம் போல மனத்தினை அடக்கி நெறிப்படுத்த வேண்டும் (16) என்பதனை - மனக்குதிரையை அடக்கும் கடிவாளம் = நல்லறிவுரைகள் = திருமறையும் = நபிமொழியும் என்ப. இங்கு 7 வகை தப்சுகளையும் அறிந்துணர வேண்டும். சித்தர்கள், ஞானிகள் மனத்தினை 'மனக்குரங்கு என்று கூறுவதையும் காண்க.


உருவகம்: மனம் - குழந்தைக்கு உருவகித்து பால் குடித்தல் = மன இச்சைகளை நிறைவேற்றுதல் (18) என மனத்தினை பக்குவமாக்குதலுக்கு நல்லதாய் பால் குடியை மழலையில் நிறுத்துவது போல எனவும் உவமை மூலம் அறிவுறுத்துகிறார். ஆசையை அடக்க வேண்டும். ஆசைக்கு அடிமை ஆகக்கூடாது. மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம். ஆசை வெட்கம் அறியாது (19)என்ற அடிப்படை கருத்தை கண்ணிகளில் வைத்து ஆசைக்கு வேலி போடுகிறது.


மனப்பசு : மனம் என்ற பசுவை நற்செயல்களாகிய மேய்ச்சலில ஈடுபடுத்த வேண்டும் என்ற கூறும் பா நயம் இனிய நல்லறப் பாலைத் தரும் என்பது மிகையன்று. (20)


அரிய தவமும் அகந்தையினால் அழியும். தற்பெருமை, கர்வம், அகந்தை மனிதனை அழிக்கும். நன்மைகளில் ஹலால், ஹராம் அறிந்து வாழ வேண்டுகிறார். உடலில் கொழுப்பு நஞ்சாகிறது. அளவோடு உண்ணல் சாலச் சிறந்தது என்பனவற்றை (20, 21, 22)யும் பர்லு. நபில் கடமைகளை நிறைவேற்றவும் (28) வேண்டுகிறார்.


கண்ணிறைந்த பொல்லாங்கு : தீயவை பார்ப்பது, கேட்பது உள்ளத்தில் தீய உணர்வூட்டும் கண்ணின் வழியே மனத்தில் புகுந்த பொல்லாங்கு என்றார். பாவத்திற்கு வருந்தி கண்ணீர் விடுவது மனத்தின் பாரம் கண்ணீர் வழி இறங்குவதால் கண்ணீர் கண்களில் நிறைந்த பாவத்தை கழுவும் பயனாகவும் ஆகிறது (23) என்கிறது. சிறுபிழை பெரும் பிழைகளை (155) பாவமன்னிப்பு கேட்டு மீண்டும் பிழைகள் செய்யாதிருந்தால் பாவமன்னிப்பு உண்டு (155) எனக் கூறுகிறது.


சாத்தான், பகைவர் வழி செல்லாதே (24), அறிவு வழியே நல்வழி (25), சொல்லும் செயலும் ஒன்றாக இருத்தல் வேண்டும். பெறாத பிள்ளை வாரிசாகாது (26) என்று அறிவு கொளுத்துகிறார். 'நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்' -திருக்குர்ஆன், சொல்லுதல் யார்க்கும் எளிய எனும் திருக்குறள் கருத்துக்களையும் 27ஆம் கண்ணியில் சொல், செயல், சிறக்க நன்மைகளை ஏவி, நன்மைகளின் படி நட என்கிறது.


நபி புகழுரைத்து நம்மையும் வாழ்வாங்கு வாழ வேண்டுகிறார்.


நோயறு பனுவலாக மட்டுமின்றி உடல், உள நோய் நீக்குவதோடு 'இஸ்லாமியம்' கற்கத் தூண்டுகிறது. கற்பவை கற்ற பின் அதற்கு தக நிற்கவும் தூண்டுகிறது.


நபி வழி பின்பற்று. அவர் மீதும் காதல் கொள். இரு கால் வீக்கமுடன் இரவில் தொழுத வழி பின்பற்று (29). நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  உலகப் பற்றற்ற நிலையில் இறைவனைப் பற்றிக் கொண்ட நிலை (32)யில் நாமும் பின்பற்ற வேண்டுகிறார். நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  முமீன்களுக்கு பரிந்துரை செய்பவராக இருப்பதையும் சுட்டுகிறார் (36).


கயிறு (37): திருக்குர்ஆனின் (ஆல இம்ரான்) வசனம் புர்தாவாகிறது. “நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை நன்றாகப் பின்பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்துபோக வேண்டாம் எனும் ஒற்றுமை பேண ஓதுகிறார். இன்றும் மிக மிகத் தேவைதானே! பிழை பொறுக்க வேண்டுதல் (140-151) பண்பு ஞானிகளிடம் நிறைந்து காணப்படுகிறது. பீரப்பாவின் ஞானப் புகழ்ச்சியின் பல பாடல்கள் பிழை பொறுக்க வேண்டுதலாகும்.


வரலாற்று நிகழ்ச்சிகள் சில: “இறைவன், திருமக்காவின் மலைகளைத் தங்கம், வெள்ளியாக மாற்றி எனக்களித்தும் ஏற்றுக்கொள்ளாத நாயகத்தின் நிலையினை வியந்து ஓதப்படுகிறது. நீடுயர்ந்த பொன்மலைகள் / தம் அழைப்பையும் ஏலா / தீடு கொடுத்தக்கணத்தும் / தம் அயர்வை நாட்டி விட்டார் - நோயறுபனுவல் அகழ்ப்போரில் ஹிஜ்ரி 5இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மெல்லிடையில் வன்கல்லை / மேவவிட்டு வெம்பசியை / இல்லையெனக் காட்டியதில் / முன்னின்றார் எம்பெருமான்” (30) - என நாயகம் பசித்திருந்த நிலையினை நோயறுபனுவல் படம் பிடித்துக் காட்டுகிறது.


மதுரைக்கவி : “மென்மையுறு தம் வயிற்றில், வெம்பசியால், எம்பெருமான் வன்மையுறு கற்கள் வைத்து வரிந்து பொறுத்திருந்தார்”எனப் பாடியுள்ளார்.


சந்திரன் பிளவு (75) இதனில் சந்திரன் = நாயகத்தின் இதயம் ஒப்புமையாகக் கொண்டு மும்முறை பிளந்ததும் எண்ணற்பாலதாகும். தௌர் குகை நிகழ்ச்சி (76-79); நிழல் மேகந்தரல் (74) முஸ்லீம் தமிழ் புலவர்களும் ஓர் மரபாகப் போற்றுந்திறன் காணலாம். நபி பிறப்பின் முன் அறிவிப்பு (62, 63, 64) நாயகத்தின் பிறப்பால் (68,69) நடைபெற்ற நிகழ்ச்சிகளான எரி மீன்கள் வீழ்ந்தது. சைத்தான்கள் ஓடியது கூறப்பட்டது. இதனைச் சீறாவும் சிலையெடுத்து உருவாய்... எனப்பாடும். அப்ரகாவின் படை ஓட்டம் (70, 71) பெருமானார் பத்ரு, ஹுனைன் போரில் பகைவர் மீது பொடி கற்களால் வீசியது என சில வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாடி பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றினைப் படித்தும் பாடம் பெற வலியுறுத்துகிறது இப்பனுவல்.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்  சில அற்புதங்களை 85, 86 போன்றவற்றில் பாடியுள்ளார். ஆனால் அற்புதங்களுக்கு அப்பாற்பட்டவர் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள்.  (52).உமறுப்புலவர் சீறாவில் தனியாக பல படலங்களில் அற்புதங்களைப் பாடியுள்ளார். (தக்கலை பஷீர் தனிக் கட்டுரை காண்க).


திருக்குர்ஆனின் சிறப்புகளை 88, 96, 102, 104 பாடும் / திருக்குர்ஆனை கசடற கற்கவும், நிற்கவும் தூண்டும்.


நாயகம் சேய்மையிலே சிறியதாகவும் / அண்மையிலே கண்மயக்கும் / வாய்மையினால் அன்னார் பேர் / ஞாயிறு போல ஆகின்றார் என்ற உண்மை (49) உருவமாக நாயகம் சூரியன், பிற நபிமார் நட்சத்திரங்கள் என உருவாயிற்று (53) எனும் நயந்தோன்றப் பாடியுள்ளார்.'முகம்மது' (146) பெயரின் புகழுரைப்பார்.


நாயகத்தின் உள்/வெளி அழகுகள் தமிழழகு பெற உருப்பளிங்கு சொற்கட்டுக்குள் மணம் வீசச் செய்கிறார். (38, 48, 41, 42, 54, 55) 'நற்குணமே அழகாகி, / நன்மலரே முகமாகிச், / சொற்கடங்கா மேனியவர், / மேன்மையுறு மேனியன்றோ! (54). இங்ஙனமாக எனப் புகழ்ந்தேத்தும். நோயறுபனுவல் உள/உடல் நோய் நீக்குவதோடு மட்டுமின்றி இஸ்லாம் - திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  - நபிமார்கள் பற்றி மேலும் மேலும் அறியத்தூண்டும். கற்றுணர வழிவகை செய்கிறது. நாம் கற்பது மேலும் மேலும் அறிவு பெற வழிவகையாக அமைந்து நல்ல முமீன்களாக - முஸ்லிம்களாக வாழ்வோம். இதுவே புர்தா புகலும் புகழுரைகள் ஆகும்

https://alasrar.page/article அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ்.

No comments: