Tuesday, October 13, 2020

12. நான்தான் அது

==============
நாகூர் ரூமி



”நீங்கள் பிறந்த தேதி என்ன?” 
”நான் பிறக்கவே இல்லை!”
”உங்களுக்கு இறப்பைப் பற்றிய பயமில்லையா?”
”நான் ஏற்கனவே இறந்துவிட்டேன்.”
”நான் யார்?”
”நீ எது இல்லை என்று தெரிந்துகொண்டால் போதும். நீ யார் என்று தெரியவேண்டியதில்லை. நீ யார் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது. நான் இதுதான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. நான் இதுவல்ல, நான் அதுவல்ல என்றுதான் சொல்லமுடியும்”. 
”தூங்கி விழிக்கும்போது இவ்வுலகம் திடீரென்று நமக்குத் தோன்றுகிறது. அது எங்கிருந்து வருகிறது?”
”அது தோன்றுவது இருக்கட்டும். ஆனால் அது யாருக்குத் தோன்றுகிறது? வருவது போவது எல்லாமே எப்போதுமே போகாத ஒரு பின்புலத்தில்தான் நிகழவேண்டும்”. 
”தூங்கும்போது அறியப்படுவது எதுவும் இல்லை, அறிபவனும் இல்லையல்லவா?”
”அப்படிச் சொல்லமுடியாது. அனுபவம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அனுபவம் இல்லாமல் போவதும் ஒரு அனுபவம்தான். ஒரு இருட்டு அறைக்குள் சென்று, ‘எனக்கு எதுவுமே தெரியவில்லை’ என்று சொல்வதைப் போன்றது அது. தனக்கு எதுவுமே தெரியவில்லை என்று யாருக்குத் தெரிகிறது?”
”விழிப்புணர்வின் மூலம் எது?”
”எல்லாவற்றுக்கும் விழிப்புணர்வுதான் மூலம். ”
”பல தரப்பட்ட பொருள்கள், விஷயங்கள் இவ்வுலகில் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் ஏற்படுத்திய, உருவாக்கிய ஒரு காரணி இருக்கவேண்டுமல்லவா? ஆனால் நீங்கள் அதை எப்படி மறுக்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை. எல்லாமே ஒன்று என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
”நான் வெறும் பிரக்ஞையை மட்டும்தான் பார்க்கிறேன். எல்லாமே பிரக்ஞையின் வடிவங்கள். சினிமா திரையில் தெரியும் காட்சிகள் யாவும் ஒளியின் வடிவங்கள்தானே? அதைப்போல, தெரிவதெல்லாம், நடப்பதெல்லாம் பிரக்ஞையின் வடிவங்களே.”
”அப்படியே வைத்துக்கொண்டாலும், ஒளியின் இயக்கத்துக்கு ஒரு காரணி இருக்குமல்லவா?”
”ஒளி இயங்குவதில்லை. ஃபிலிம்தான் அசைகிறது. அதைப்போல மனம் மட்டுமே அசைந்துகொண்டுள்ளது. ”
”இந்த உலகத்தின் துயரத்தை எப்படித் துடைப்பது?”
“உன் ஆசைகளினாலும் அச்சங்களினாலும் அவற்றை உருவாக்கியது நீதான். அவைகளை நீ சந்தித்துக்கொள். அவையெல்லாமே நீ யார் என்பதை உணராமல், மறந்துவிட்ட காரணத்தால் ஏற்பட்டவை. திரையில் தோன்றும் படங்களுக்கு உயிர் இருப்பதாக நீ நினைத்ததால் வந்த விளைவுகள். எனவே தீர்வை நீ உன்னிடமிருந்துதான் தொடங்கவேண்டும்”.
”பாவ புண்ணியம் என்பது என்ன?”
”நீ யார் என்று தெரிந்துகொள். அதுவே புண்ணியம். நீ யார் என்பதை தெரியாமலிருப்பது, மறந்திருப்பதுதான் பாவம்.”
”கடவுள் ஒருவன் உள்ளானா இல்லையா?”
“நீ உன்னை ஒரு ஆளாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை கடவுளும் ஒரு ஆள்தான். நீயும் சக மனிதனும் ஒன்றுதான் என்பதை உணரும்போது, எல்லாரிடமும் கடவுளைப் பார்க்க முடியும்”
”என் மனப்பான்மையை மாற்றிக்கொள்வதன் மூலம், நிஜத்தை மாற்ற முடியுமா?”
”மனப்பான்மைதான் நிஜமாகிறது”.
”கடவுள் பெயரை ஜபிப்பதென்பது இந்தியாவில் உள்ள பொதுவான பழக்கமாகும். அதில் நன்மை உண்டா?”
“ஒருவரின் பெயர் உனக்குத் தெரியுமானால் அவரை நீ எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம். கடவுளை அவரது பெயரைச் சொல்லி நீ அழைப்பதனால், அவரை உன்னிடம் வரவைத்து விடுகிறாய்”.
”நீங்கள் உங்கள் அனுபவத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அதை நான் எப்படி அறிந்துகொள்வது?”
“என் அனுபவம், உன் அனுபவம் என்று வித்தியாசப்படுத்திப் பேசுகிறாய். ஏனெனில் நானும் நீயும் வேறுவேறு என்று நினைக்கிறாய். ஆனால் அது உண்மையல்ல. சற்று ஆழமாகப் பார்த்தால் என் அனுபவமும் உன் அனுபவம்தான் என்பது தெரியவரும். எனவே நீ உனக்குள் ஆழமாகச் சென்று பார். உண்மை புரியும்”.
”இன்பம் துன்பம் என்பதெல்லாம் என்ன?”
”அவற்றை நீ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள். அவைகள் அனைத்துமே மனதின் நிலைகள். நான் மனமல்ல”. 
”காதல், அன்பு இதெல்லாம்கூட வெறும் மனநிலைகள்தானா?”
”காதல், அன்பு என்றால் நீ என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறாய் என்பதைப் பொறுத்தது அது. ஆசை ஒரு மனநிலைதான். ஆனால் எல்லாம் ஒன்று என்ற உணர்தலானது மனதுக்கு அப்பாற்பட்டது. என்னப் பொறுத்தவரை, என்னை எல்லாரிடத்திலும், எல்லாரிடத்தில் என்னையும் பார்ப்பதுதான் காதல், அன்பு எல்லாம்”. 
”ஒரு விஷயம் மறந்துபோக வேண்டுமெனில் அதுபற்றி ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் நான் யார் என்று எனக்கு இப்போது தெரியவில்லையெனில், இதற்கு முன்பு தெரிந்திருந்ததா?”
“நிச்சயமாக. நீ யார் என்ற அறிதலுக்குள் நீ யார் என்பதை மறத்தலும் சேர்ந்தே உள்ளது. விழிப்புணர்வு, விழிப்புணர்வற்ற தன்மையும் ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த உலகம் என்பது என்ன? நினைவுகளின் தொகுப்பு. ”நான்” என்ற முக்கியமான விஷயத்தை மட்டும் பற்றிக்கொண்டு மற்றதையெல்லாம் விட்டுவிடு. அதுதான் ஆன்மிக சாதனையாகும். தன்னை அறிதலில் பிடித்து வைத்துக்கொள்வதற்கும், மறந்து போவதற்கும் ஒன்றுமில்லை. எல்லாமே அறியப்படுகிறது. எதையுமே நினைவு வைத்துக்கொள்ளவேண்டியதில்லை”.
”ரமண மகரிஷி பேசத்துவங்குமுன் 20 ஆண்டுகள் மௌனமாக இருந்தாராம்.”
“ஆமாம். அது சரிதான். உள்ளே உள்ள பழம் பழுக்க வேண்டும். அதுவரை விழிப்புணர்விலே வாழ்தல் தொடர்ந்துகொண்டிருக்க வேண்டும். விடியலையே பகல் என்று நினைத்துவிடக்கூடாது”.
”ஜே கிருஷ்ணமூர்த்திகூட விழிப்புணர்வில் வாழ்வது பற்றி அடிக்கடி பேசுகிறார்”
 ”ஆமாம். அது சரிதான். ’சத்’ எனும் விழிப்புணர்வும், ‘சித்’ எனும் இருப்பும் சேரும்போது ஆனந்தம் கிடைக்கிறது. அதுவே ’சத்சித்ஆனந்தா’.”
”ஞானம் எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கும் என்பது நல்ல செய்தியல்லவா?”
“ஆமாம். அதைப்பற்றிக் கேள்விப்படுவதே அது கிடைக்கும் என்பதற்கான வாக்குறுதியாகும். ஒரு ஞானாசிரியரை சந்திப்பதே ஞானம் அடைந்துவிடுவீர்கள் என்பதற்கான உத்தரவாதமாகும்”.
”எது அதிக சக்தியுள்ளது? ஆசையா விதியா?”
“ஆசையே விதியை வடிவமைக்கிறது”.
இந்தக் கேள்வி பதில்களெல்லாம் என்ன என்று கேட்க வருகிறீர்கள் அல்லவா? தெரியும். இதோ சொல்கிறேன். 
இயேசு கிறிஸ்து, முஹம்மது நபிகள், புத்தர், மஹாவீரர், பரஹம்சர், விவேகானந்தர், ரமணர், ஜேகே, ஓஷோ, சித்தர்கள், சூஃபிகள் இப்படி பல ஞானிகளை இந்த உலகம் அறியும். 
அதேசமயம் அறியப்பட வேண்டிய, ஆனால் அவ்வளவாக அறியப்படாமல் பல ஞானிகள் வாழ்ந்துள்ளனர், வாழ்ந்துகொண்டும் உள்ளனர். அதில் ஒருவர்தான் நிசர்கதத்தா மஹாராஜ். 
யார் அவர்? பம்பாயில், அதாவது மும்பையில், பீடிக்கடை வைத்திருந்தவர்! ஆமாம். பீடிக்கடைதான். முப்பத்து மூன்றாவது வயதில் தன் குருவான சித்த ராமேஷ்வர் மஹராஜை சந்தித்தார். அவரோடு நிசர்கதத்தா இருந்தது மூன்று ஆண்டுகளுக்கும் குறைவு. ஆனால் குரு சொன்னதை அப்படியே அட்சரம் பிசகாமல் செய்தார். ’நான் இருக்கிறேன்’ என்பதில் கவனத்தை வைக்கச் சொன்னார் குரு. அதன்படியே ஒரு நாளைக்குப் பல மணி நேரங்கள் செய்தார் நிகர்கதத்தா. 
விளைவு? ஞானம்தான் வேறென்ன? 
இவ்வளவு சீக்கிரம் ஒருவருக்கு ஞானம் கிடைக்குமா?
இந்தக் கேள்விக்கு பதில் ஒன்றுதான். அது ஞானம் விழையும் மனிதரின் தீவிரத்தைப் பொறுத்தது. 
விவேகானந்தர் அறிவைத்தான் ஆரம்பத்தில் 
நம்பிவந்தார். தன் குருவான பரமஹம்சரையே தன் கேள்விகளால் துளைத்தார். நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் உங்கள் தாய் காளி உங்கள் கற்பனை என்றெல்லாம் சொன்னார். என் தாய் கற்பனையா என்று கேட்டு, பரமஹம்சர் தன் முகத்தை மண்ணில் கோழியைப் போலத் தேய்த்தெல்லாம் அழுதுள்ளார்! 
ஆனால் சந்தேகத்தில் அல்ல. அன்பினால். 
சரி விவேகானந்தரின் சந்தேகத்தை பரமஹம்சர் எப்படிப் போக்கினார்? 
ஒன்றும் செய்யவில்லை. ரொம்ப அதிகமாக கேள்விகள் கேட்டுத் துளைக்கும்போது பரமஹம்சர் மெதுவாக விவேகானந்தரைத் தொடுவார். அவ்வளவுதான்.  விவேகாந்தர் மயக்கமடைந்துவிடுவார்! 
மயக்கம் தெளிந்த பிறகு, ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்? எனக்கு அப்பா, அம்மாவெல்லாம் உண்டு’ என்றுதான் கூறுவார்!
நிசர்கதத்தாவுக்கு அதிவிரைவாக ஞானம் சித்தித்ததற்கு ஒரு முக்கிய காரணம் அவர் படிக்காதவராக இருந்ததுதான்! 
ஆமாம்! கற்றறிந்தவர்களுக்கு அவர்களுடைய அறிவே ஒரு பெரும் தடையாக அமைந்துவிடுகிறது. மிகப்பெரும் ஞானிகள் பலர் படிக்காதவர்களே. இயேசுவிலிருந்து, பரமஹம்சர் வரை இந்த ஒற்றுமையைப் பார்க்கலாம். 
நிசர்கதத்தாவின் உலகம் ரொம்பச் சின்னது. ஜுனியர் க்ளார்க்காக இருந்த அவர் பிறகு ஒரு சின்ன பீடிக்கடை வைத்தார். பின்னாளில் அவர் எட்டு கடைகளுக்குச் சொந்தக்காரரானது வேறு விஷயம். 
நிசர்கதத்தாவுக்கு ஞானம் கிடைத்த பிறகு, அவரைச் சுற்றி பல அற்புதங்கள் நடக்க ஆரம்பித்தன. அதன் இயற்கையான விளைவாக பல மேற்கத்தியர்கள் வந்து சூழ ஆரம்பித்தனர். அவரது சின்ன வீட்டில் இவ்விதமான சந்திப்புகள், கேள்வி பதில்களுக்காக ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டது.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அவர் மராத்தியில் சொன்ன பதில்கள், அவற்றின் மொழிபெயர்ப்பு எல்லாவற்றையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டனர். மௌரிஸ் ஃப்ரைட்மேன் என்ற போலந்து நாட்டு யூதர்தான் அதற்கு முக்கிய காரணம். பின்னாளில் அவர் ஹிந்து மதத்துக்கு மாறி தன் பெயரை ஸ்வாமி பரதாநந்தா என்று வைத்துக் கொண்டார்.
நிசர்கதத்தாவிடம் கேட்கப்பட்ட அந்த கேள்வி பதில்களின் தொகுப்பு நூலுக்கு ஆங்கிலத்தில் I am That என்று பெயர். இக்கட்டுரையின் தலைப்பும் அதுதான்.
அந்த நூலில் இருந்து கொஞ்சம் உங்களுக்குக் கொடுத்துள்ளேன். சுவைத்துப் பார்க்க. 
ஆன்மிக உணவை எங்கிருந்து உண்டாலும் ஒரே சுவையுடன்தானே இருக்கும்!


=======

No comments: