Sunday, October 4, 2020

786 என்றால் என்ன?

 ஆக்கம்: சத்தியமார்க்கம் -



மேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?  இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன?


பதில்:


786  என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை.  “நியூமராலஜி” என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் “நியூமராலஜி” அறிந்த  முஸ்லிம்களில் சிலர் அரபு எழுத்துக்களுக்கும் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அரபு எடுத்துக்களான அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு 4.


முஸ்லிம்கள் எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் பொழுது தன்னைப் படைத்த இறைவனின் பெயர் கொண்டு(“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”) ஆரம்பிக்க வேண்டும் என இஸ்லாம் கற்றுத்தருகிறது. இதனை தமிழில்  “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்” என்று பொருள் கொள்ளலாம். இதனை நியூமராலஜி முறைப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களைக் கொடுத்து அதனை கூட்டினால்  786 என்று வரும். இதனைத் தான் சில முஸ்லிம்கள் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று கூறுவதாக நினைத்துக் கொண்டு  786-ஐ  பயன்படுத்தலாயினர்.


இஸ்லாமிய அடிப்படையில் இது தவறான ஒரு செயலாகும். முஸ்லிம்கள் எந்த ஓர் செயலைச் செய்வதற்கும் முன்னுதாரணத்தை குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதே அடிப்படையில் இவ்வுலகத்திலுள்ள எல்லாப்பொருள்களுக்கும் எண்களை கொடுக்க முடியும். அது போலவே ஒவ்வொருவருடைய பெயரையும் இவ்வாறு எண்களாக மாற்ற முடியும். உதாரணமாக கண்ணதாசன் என்று பெயருள்ள ஒருவரை ஒரு பேச்சுக்காக 431 என்று அழைத்தால் எவ்வாறு இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


காவல் நிலையங்களில் காவலரை மேலதிகாரிகள் இவ்வாறு எண்களைக் கொண்டு அழைப்பதை காணலாம் (இது நியூமராலஜி முறைப்படி வைத்தல்லாது அவர்களின் பணியாளர் எண்களையே அடையாளத்திற்குப் பயன்படுத்துகின்றனர்). அதே எண்ணைக் கொண்டு மற்றவர்களும் அழைப்பதை எந்தக் காவலரும் விரும்ப மாட்டார். அதனை அவர் மரியாதைக் குறைவாகத் தான் கருதுவார்.


இஸ்லாம் தனி மனிதருடைய மரியாதையையும் கண்ணியத்தையும் மதிக்கும் விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகின்றது. எனவே இஸ்லாத்தைச் சரியாக அறிந்த எந்த முஸ்லிமும் மற்றவரை இது போன்று எண்களைக் கொண்டு அழைக்கத் துணிய மாட்டார் .


அதுபோலவே “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அவர் முகமன் கூறியதாகவோ,  ஒருவர் குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதில் வரும் வசனங்களின் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினாலோ அவர் குர்ஆனை ஓதியவர் என்றோ எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.  அது போல் தான் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற சொல்லும்.  786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் ஒவ்வொரு செயலுக்கும் முன்மாதிரி இஸ்லாத்தில் இருக்கும் போது இஸ்லாம் காட்டித் தந்த முறையில் முஸ்லிம்கள் வாழ்வது இன்றியமையாததாகும்.


முஸ்லிமல்லாத  ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று தான் எழுதியுள்ளார்கள். (பார்க்க அல்குர்ஆன் 27.30)


நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்றே எழுதியுள்ளனர். (பார்க்க புகாரி 7,2941,4553)


எனவே 786 என்ற அடையாளம் பயன் படுத்துவதற்கு இஸ்லாத்தில் எந்த ஓர் ஆதாரமும் இல்லை என்பதையும், அதனைப் பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு முரணான செயல் என்பதையும் இதிலிருந்து விளங்கலாம்.

satyamargam

No comments: