அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ்
உளத்தூய்மை
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
(உள்ளத்தை) தூய்மைப்படுத்தி கொண்டவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார். ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். (அல் குர்ஆன் 92:9,10)
.
இமாம் கஸ்ஸாலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
தெளிந்த உள்ளம் கொண்ட மெய்ஞ்ஞானிக்கு எதிரில் அமர்ந்து அவரது சைக்கினையின் படிச் செயலாற்ற வேண்டும். இது ஒரு மனிதனுக்கும் அவன் பின்பற்றி நடக்கும் பெரியாருக்கும் இடையில் நடைபெறும் முறை: ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவில் உருப்பெறும் முறை!
கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
தங்களை சூபிகளென்றும், தரீக்காக்காரர்களென்றும் அழைத்து கொள்ளும் வேஷதாரிகளே. உங்களின் “ஸுப்” எனும் கம்பளி போர்வையாலோ, பச்சை போர்வையாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை. முதலில் உங்களின் உள்ளத்தை, இதயத்தை, சுபாவத்தை தூய்மைப்படுத்துங்கள்.
.
ஆத்ம சுத்தமில்லாத உடற் சுத்தமும், ஆத்ம ஜோதியற்ற உடை அலங்காரமும் காரியத்திற்கு உதவப்போவதில்லை. முதலில் வீட்டை கட்டி அதனைச் செம்மைப்படுத்தி கொண்டல்லவா கதவை அலங்கரிக்க வேண்டும். வீடு ஓட்டையாய் இருந்து கதவு மட்டும் கம்பீரமாக இருந்தென்ன பயன்? ஆகையால், முதலில் உள்ளே சீர் பெறச் செய்யுங்கள். கதவை அப்புறம் கவனித்துக் கொள்ளலாம். அகம் அற்ற புறத்தைக்கொண்டு ஆவதொன்றுமில்லை.
.
உங்களுக்கு உண்மையான கல்பு வேண்டுமாயின், அகக்கண் திறந்த நாதாக்களின் சகவாசத்தில் அண்டிப் பழகுங்கள். சம்பூர்ணத் தன்மை பெற்ற ஒரு ஞான குருவை (ஷைகை) தேடி கண்டு கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் தன்மை உடைய அப்பெரியார் உங்களை பரிசுத்தப்படுத்தி, ஞான போதங்களை அருளி, உங்களுக்கு நல்வழி காட்டுவார்.
.
ஹழ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் ரழியல்லாஹு அன்ஹுயல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
.
ஞானம் என்பது உங்கள் நீண்ட அங்கியிலோ ஜபமாலையிலோ இல்லை. இதயத்தை பரிசுத்தப்படுத்துவதில் ஏற்படும் தெய்வீக உதிப்பு. இதுவே ஞானமாகும்.
No comments:
Post a Comment