Wednesday, October 21, 2020

சாபி மதமும் அனபி மதமும்

 சாபி மதமும் அனபி மதமும்


இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முஸ்லீம்களின் 1800 முதல் 1950 வரையிலான நில ஆவனங்களில் கிடைத்த தகவல்


1800லிருந்து 1920 வரை ஆவனங்களில் இங்கு வாழ்ந்த ராவுத்தர்கள் தங்களை முகம்மதிய மதம் இஸ்லாமிய மதம் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை

துலுக்கசாதி என்றே பதிவு செய்துள்ளார்கள்

தங்கள் பெயருக்குப் பின்னால் ராவுத்தர் லெப்பை, மரைக்காயர் என்ற பதிவு செய்துள்ளார்

சிலர் பெயருக்கு முன்னால் அம்பலம் இனாம்தார் என்ற பட்டங்களையும் பதிவு செய்துள்ளனர்

1930க்கு முன்புவரை உள்ள ஆவனங்களில் அனைவரின் பெயருக்கு முன்னாலும் கூனுங்கான் நயினுங்கான் கோரைங்கான் இளந்தரிக்கான் ரெகுநாதக்கான் கூலையன் ஆரரைபட்டரையான் அகுல்தார் மொச்சிகுளத்தான் பொதிகுளத்தான் சேக்காதி என்ற வகையறா பெயர்கள் கண்டிப்பாக இடம் பெறுகின்றன


1930களுக்கு பின்புள்ள ஆவனங்களில் வகையறா பாட்டனார் தகப்பனார் மூன்றையும் இன்சியலாக சுருக்கமாக பதிவு செய்துள்ளனர்


1888ம் ஆண்டைய நில ஆவனம் ஒன்று மதுரை டிஸ்டிரிக்டு முதுகுளத்தூர் சப் டிஸ்டிரிக்ட்டு முதுகுளத்தூர் கஸ்பா முதுகுளத்தூரிலிருக்கும் கூனுங்கான் அம்பலம் பெரிய மீரா ராவுத்தன் மகன் துலுக்கசாதி பயிர் கூனுங்கான் அம்பலம் சையது முகமது ராவுத்தன் என்று தொடங்குகிறது


1890லிருந்து 1920 வரை உள்ள ஒரு சில ஆவனங்களில் சாபி மதம் அனபி மதம் என்றும் பதிவு செய்துள்ளார்கள்

ஒரே ஆவனத்தில் நிலத்தை வாங்கும்

கீழக்கரை மரைக்காயர் தன்னை துலுக்கசாதி வியாபாரம் சாபி மதம் என்றும் நிலத்தை விற்கும் முதுகுளத்தூர் ராவுத்தர் தன்னை துலுக்கசாதி பயிர் அனபி மதம் என்றும் பதிவு செய்துள்ளனர்


1920 க்கு பின்னுள்ள நில ஆவணங்கள் நீதிமன்ற ஆவனங்களில் மட்டுமே முகமதிய மதம் என்ற சொல்லை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெரிய நிலவுடைமையாளர்கள் மட்டுமே பயன்படுத்த தொடங்குகிறார்கள்


இது முஸ்லீம்கள் பக்கம் என்றால் மற்ற சமூகங்களும் தங்களை சாதியாகவே பதிவு செய்துள்ளார்கள்

மறவசாதி

வெள்ளாளசாதி

இடையர்சாதி

பள்ளர்சாதி

சானார்சாதி

கம்மாளசாதி

செட்டியார் சாதி

சக்கிலியசாதி

என்று சாதி மக்களாகவே இருந்திருக்கின்றனர்

இந்து மதம் என்ற வார்த்தையை யாருமே அடையாளப்படுத்தவில்லை தங்களை சாதியாகத்தான் அடையாளப்படுத்துகிறார்கள் மதமாக அல்ல

ஆனால் இரு சமூகத்தினர் மட்டுமே 1880 வாக்கிலேயே தங்கள் மதங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்

கோயில் குருக்கள் ஒருவர் தன்னை பிராமணசாதி குருக்கள் சிவமதம் என்றும்

மற்றொருவர் தன்னை நாயக்கசாதி பயிர் விஷ்னுமதம் என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர்

1900 முன்புவரை இந்த மக்கள் எந்த மதச்சிமிழுக்குள்ளும் அடைபட்டதாகவே தெரியவில்லை

அதற்குப்பின்னான பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கும் அதற்கு எதிராக கிளர்ந்ந்து எழுந்த சுதந்திர இயக்கங்களுக்கும் மதரீதியான அணிதிரட்டல்கள் அவசியப்பட்டிருக்கிறது


இருக்கின்ற சாதிகளில் துலுக்கசாதியும் ஒன்றாக இருந்திருக்கிறது


அன்றைய வரலாற்றாசிரியர்களும் அரசு நிர்வாகம் இந்த சமூகங்களை எப்படி வேண்டுமானாலும் என்ன பேரிலும் அடையாளப்படுத்தி இருந்திருக்கலாம் ஆனால் அந்த மக்கள் தங்களை அன்று எவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பதுதானே வரலாறு

அதிகாரத்தின் பின்புலத்துடன் எழுதிவைக்கப்பட்ட வரலாறுகளும் எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை ஆவனங்களும் வேறு வேறு வரலாற்றுப் பார்வைகளைத் தருகின்றன

http://mudukulathur.com


No comments: