Saturday, October 17, 2020

அபூஹுரைரா

 அபூஹுரைரா

=============

இவர் அறிவித்த நபிமொழிகள் அனேகம்

அபார நினைவாற்றல் இவரது சினேகம்

தந்தை இறந்தபின் வறுமைப்பிணி

புஸ்ரா என்ற பெண்ணிடம் பணி

அவளது ஒட்டகைகளின் பின்னால் 

பாடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் செல்வார்

பின்னாளில் அந்த புஸ்ரா இவரது மனைவியானார்

வறுமையில் எஜமானியாய் இருந்தவர் செழுமையில் துணைவியானார்

கைபரில் பெருமானாரின் கைப்பிடித்த அபூஹுரைரா

இறுதிவரை அக்கையை விடவேயில்லை

ஆரம்பத்தில் அவர் அப்துர் ரஹ்மான் என்றும்

அப்துல்லாஹ் என்றும் அழைக்கப்பட்டார்

பூனைக்குட்டியொன்றை பாசத்துடன் மேலாடையில் மறைத்ததனால்

’பூனையின் தந்தையே’ என்று பெருமானார் அழைத்தார்கள்

பூனைக்குட்டியால் வந்தது அந்த புகழ்ப்பெயர்

அதுவே நிலைத்தது அபூ ஹுரைரா என

அவர் அன்னையார் இஸ்லாத்தை ஏற்கவில்லை ஆரம்பத்தில்

அண்ணலையும் தூஷித்தார் 

அவர் தன் ஆத்திரத்தில்

அழுது புலம்பினார் அபூ ஹுரைரா அண்ணலாரிடம்

அன்னைக்காக துஆ செய்தார்கள் அருமை அண்ணல் 

வீட்டுக்கு வந்த அபூஹுரைராவுக்கு 

வியப்பொன்று காத்திருந்தது

குளித்து முடித்த அவர் அன்னை

கதவைத்திறந்தவுடன் கலிமா சொன்னார்!

பெரும்பாலும் அபூஹுரைரா இருந்த இடம் இறைவனின் இல்லம்தான்

இரவெல்லாம் நபிமொழிகளை மனனம் செய்தது அவர் உள்ளம்தான்

இரவுகளை மூன்றாகப் பிரிப்பதில் அவருக்கு இணக்கம்

ஒரு பகுதியில் இறைவணக்கம்

மறு பகுதியில் உறக்கம் 

மறு பகுதியில் நபிமொழிகளை மனதில் இறக்கம்  

நபிகளாரோடு இணைந்திருந்தது நான்கு ஆண்டுகள்தான்

அறிவித்த நபிமொழிகளோ ஐயாயிரத்தைத் தாண்டும்தான்

அப்துல்லாஹ் இப்னு உமர் நபிமொழிகளைத் 

தாளில் எழுதி வைத்தார்

அபூ ஹுரைரா 

மனதில் எழுதி வைத்தார்

அவரது மேலாடையை ஒருநாள் பெருமானார் விரிக்கச் சொன்னார்கள்

அபுஹுரைரா விரித்தார், அண்ணலார் துஆ செய்தார்கள்

ஆடையை எடுத்து நெஞ்சோடு அணைக்கச் சொன்னார்கள்

அணைத்தார், அண்ணலார் சொன்ன அனைத்தையும் நினைத்தார்

அன்றிலிருந்து அவரை விட்டுச் சென்றது மறதி நிரந்தரமாக 

நபிகளாரின் பிரார்த்தனை செய்த 

அற்புதமாக

ஒருமுறை அபூஹுரைராவை அழைத்தார் 

மதீனாவின் ஆளுநர் மர்வான் இப்னு ஹகம்

நூறு நபிமொழிகளை சொல்லச் சொல்லி எழுதச் செய்தார்

ஓராண்டு கழித்து 

மீண்டும் அழைத்தார்

ஒப்புவிக்கச் சொன்னார் 

ஏற்கனவே சொன்னவற்றை

ஒரு எழுத்துகூட மாறாமல் 

அப்படியே சொன்னார் அபூஹுரைரா!

உண்ண எதுவும் இல்லாமல் வாடியவர்கள் திண்ணைத் தோழர்கள்

திண்ணைதோழர்களில் ஒருவரே 

அபூ ஹுரைரா

ஒருநாள் பெருமானார் கொடுத்த கோதுமை உணவை

திண்ணைத்தோழர்கள் உண்டார்கள்

இறுதியில் சென்ற அபூஹுரைராவுக்கு கிடைக்கவில்லை ரொட்டித்துண்டு

பாத்திரத்தின் ஓரம் கொஞ்சம் இருந்தது ஒட்டிக்கொண்டு

அதை வழித்து உண்ணுங்கள் – இது பெருமானாரின் அறிவுரை

அது பெருகிக்கொண்டே போனது அபூஹுரைராவின் பசி தீரும் வரை!

திருமறை வசனத்தைச் சொல்லி அபூஹுரைரா விளக்கம் கேட்டால் 

அவருக்குப் பசி என்று பொருள்!

பசிக்கிறது என்று சொல்லி தோழர்கள் இரப்பதில்லை

அவர்களது புகழ் என்றும் இறப்பதில்லை

பசியின் கடுமையால் ஒரு நாள்

அபூபக்கரிடம் திருமறை வசனம் சொன்னார் அபூஹுரைரா

அபூபக்கரும் விளக்கம் சொல்லி நகர்ந்துவிட்டார்

அவரும் பசியில் இருந்ததை சொல்லாமலே பகர்ந்துவிட்டார்!

அபூபக்கரைத் தொடர்ந்து அங்கு வந்தார் உமர்

அவரும் விளக்கம் சொல்லி நகர்ந்து சென்றார்!

பின்னர் அபூஹுரைராவை அழைத்தார்கள் பெருமானார்

ஒரு குவளைப் பால் மட்டுமே இருந்தது வீட்டில்

திண்ணைத்தோழர்கள் அனைவரையும் அழைக்கச் சொன்னார்கள்

தயங்கிக் கொண்டே அழைத்தார் அபூ ஹுரைரா

’பிஸ்மில்லாஹ்’ சொல்லி குடிக்கச் சொன்னார்கள் இறுதித்தூதர் இதமாக

பால் பெருகிக்கொண்டே போனது அற்புதமாக

அனைவரும் குடிக்கும்வரை வந்துகொண்டே இருந்தது பால் 

அபூஹுரைராவும் பசி தீர்ந்தார் அண்ணலின் அற்புதத்தால்

ஒரு நாள் அண்ணல் அளித்தார்கள் அபூஹுரைராவிடம் ஓர் அற்புதப்பை 

பசிக்கும்போதெல்லாம் உள்ளே விடுங்கள் 

உங்களின் கை

நீங்களும் உண்டு பசித்தவர்க்கும் கொடுங்கள்

ஆனால் பையைக் கவிழ்க்காமல் எடுங்கள்

சொல்லிக் கொடுத்தார்கள் சுந்தர நாயகம்

அபூஹுரைரா பசிக்காமலிருக்க 

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 

அபூஹுரைராவிடம் இருந்தது அந்த அற்புதப்பை

கலீஃபா உதுமான் கொல்லப்பட்ட கலவரத்தில்

காணாமல் போனது அது

ஒருமுறை அபூஹுரைரா வறுத்த இறைச்சியுடன் கூடிய விருந்தை மறுத்தார்

பெருமானாருக்கு வாய்க்காதது எனக்கும் வேண்டாம் 

என்று வெறுத்தார்

நிர்வாகத் திறமையும் அபூஹுரைராவிடம் இருந்தது

அவர் கொணர்ந்த ஐந்துலட்சம் திர்ஹம்களால் 

கஜானா நிறைந்தது

கலீஃபா உமரின் விழி வியப்பில் விரிந்தது

அபூஹுரைராவின் விழியில் கடமை தெரிந்தது

அண்ணல் சொன்னதெல்லாம் உள்ளன ஐந்து மூட்டைகளாக

இரண்டை மட்டுமே நான் இன்றுவரை அவிழ்த்துள்ளேன்

மூன்றாவதை நான் அவிழ்த்தால் 

முற்றிலுமாக என்னை அழித்துவிடுவீர்கள்

என்று சொன்னார் அருமைத்தோழர் அபூஹுரைரா

ஏன் அப்படிச் சொன்னார் என்று அவருக்குத்தான் தெரியும்

அவைகள் அகமிய ரகசியங்களின் ஒளியாகலாம்

அவைகளும் ஒருநாள் வெளியாகலாம்

முப்பதுகளில் முஸ்தஃபாவைக் கண்ட அபூஹுரைரா

எண்பத்திரண்டில் இறையடி சேர்ந்தார்

நன்றி; சமரசம் 16 -- 31 அக்டோபர் 2020

Nagore Rumi





No comments: