Thursday, January 23, 2020

இளமை.

********""
காலையில் எழுந்தபோதே மிகச்சோர்வாக இருந்தது.இன்னும் சிறிது நேரம் தூங்கவேண்டும்போல் தோன்றியது. கை கால்களில் வலி வேறு.இருப்பினும் வேண்டா வெறுப்பாக படுக்கையிலிருந்து எழுந்தேன்

இப்போதே மணிஏழைத்தாண்டிவிட்டது.
இப்போது எழுந்து தயாரானால்தான் ஒன்பதைரைக்குள் நாகர் கோவில் பஸ்ஸைபிடிக்கமுடியும். அப்போதுதான் பணிரண்டுமணிக்குள் நாகர்கோவில் ஒய்.ஆர் கல்யாணமண்டபத்தை அடையமுடியும்.

சிறியவயது நண்பன் நிஜாம் வீட்டு திருமணம். வீடுதேடிவந்து மிக விரும்பி அழைத்திருந்தான்.தவிர்க்கமுடியாது.சென்றே ஆகவேண்டும்.

சோர்வைப்பொருட்படுத்தாது படுக்கையிலிருந்து எழுந்து வேலைகளைப்பார்க்க தொடங்கினேன். காலை வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அன்றைய செய்தி தாளையும் படித்துவிட்டு எழுந்தேன்.

பஸ்நிலையத்தை அடைந்தபோது நாகர்கோவில் பஸ் பாதி நிரம்பிய நிலையில் நின்றிருந்தது. பஸ்ஸில் மத்திய பகுதியில் ஏதுவான ஒருஸீட்டில் உட்கார்ந்தேன்.எனது அருகே இருந்த இருக்கை காலியாக இருந்தது.சிறிது நேரத்தில் பஸ் நிரம்பத்தொடங்கியது. பஸ்டிறைவர் மிகுந்த சத்தத்தோடு சீட்டின் கதவை சாத்திய பின் இருக்கையில் அமர்ந்தார்.

பஸ் புறப்பட்டது.


பயணம் தொடங்கியசிறிது நேரத்திற்குள் அதிக சூட்டை உணர்ந்தேன்.இப்பெல்லாம் பஸ்ஸில் பிரயாணம் செய்வது மிகக்கஸ்டமாகவே இருக்கிறது.

பஸ் பாலராமபுரம் அருகே ஒரு வளைவில் திரும்பியபோதுதான் எதேச்சையாக கவனித்தேன்.

அவள் என்னையே துருதுருவென்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் அப்போதுதான் அவளை சரியாகப்பார்த்தேன்

சுமார் இருபத்தைந்து வயதிருக்கும்.காதில் அணிந்திருந்த வளையத்துக்கு அருகில் அதைவிட பெரிய சைசில் வளைந்து கிடந்த முடிக்கற்றை.நிமிர்ந்த நேர்த்தியானமூக்கு. வட்ட முகம். துருதுருவெனும் கண்கள்.

அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு திக்கென்றது.நான் அவள் பார்வையை தவிர்க்க முயன்றேன்.
சிறிது நேரத்துக்குமேல் என்னால் அவளை மீண்டும் பார்க்காமலிருக்கமுடியவில்லை.நான் சற்று தயங்கியபடி மீண்டும் அவளைப்பார்த்தேன்.

அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சே! என்ன இது சிறியவயது பெண்! இப்படி பார்க்கிறாளே! பார்வையே சரியில்லை என நினைத்துக்கொண்டேன்.இருப்பினும் மனதில் ஒரு ஆர்வம். மீண்டும் அவளைப்பார்த்தேன்.

அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன நினைத்துக்கொண்டாளோ அவள் திடீரென்று என்னை நோக்கியே வருகிறாள்.என்ன இது என்று சற்று ஆர்வத்தோடு அவளை நோக்கினேன்.

அவள் திடீரென என் அருகிலிருந்த காலி இருக்கையில்வந்து உட்கார்ந்து கொண்டாள்.

எனக்கு மனதில் குறுகுறு வென்றிருந்தது. என்ன இது இந்த காலத்து பெண்களுக்கு வெட்கம், தயக்கம் எல்லாம் ரொம்ப குறைந்திருக்கிறது.ஒரு ஆண் அருகில் எந்த தயக்கமும் இல்லாமல் வந்து உட்காருகிறாள்.நான் மனத்தில் ஒரு சிறு பரபரப்பை உணர்ந்தேன்.

அவள் என்னை இடித்துக்கொண்டுஇருக்கையில் சரியாக உட்கார்ந்து கொண்டாள்.

திரும்பி சரியாக என்னை பார்த்தாள்.

சே! என்ன இது! ஒரு ஆணின் அருகில் எந்த தயக்கமும் இல்லாமல் உட்காருகிறாள்.போதாதென்று சரிரத்தோடு சேர்ந்து இடித்துக்கொண்டு உட்காருகிறாள். தயக்கமில்லாமல் பார்க்கிறாள்.

என் மனத்தில் மீண்டும் ஆர்வத்தோடு கூடிய ஒரு பரபரப்பு.

அப்போது அவள் என்னைப்பார்த்து சொன்னாள்.

'தாத்தா! கொஞ்சம் ஏறி உட்காருங்கோ! சீட்டில் உட்கார சற்று சிரமமாக இருக்கிறது.'

(ஆகஸ்ட் 21 ந்தியதி World senior citizen's Day என அறிவித்திருக்கிறார்கள். அதைப்படித்தபோது மனதில் தோன்றியது.பேஸ்புக்கில்தான் ஏராளம் இளமை மாறாத சீனியர் சிட்டிசன்கள் உள்ளார்களே! அவர்களுக்கு சமர்ப்பணம்.
இன்னும் இளமையாக நினைத்துக்கொண்டிருக்கும் சீனியர் சிட்டிசன்களுக்காய்..)

Sirajudeen Nainarmohamed

No comments: