வளைகுடா தேசங்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்ட கடலும் மலையும் சூழ்ந்த நாடு மஸ்கட் ....
நபிமார்களின் காலத்தில் இஸ்லாத்தை பரப்பிய முன்னோர்கள் சிலரின் வரலாற்று தலங்கள் சிலவற்றை தமக்குள் போர்த்திய தேசம் ....
சரியாக ஐம்பது ஆண்டுகள் (1970 - 2020) மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டின் நீண்ட கால மன்னராக மக்கள் செல்வாக்கோடு ஆட்சியில் அமர்ந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் (79) அவர்கள் ....
தமது தகப்பனார் சையத் பின் தைமூர் அவர்களிடமிருந்து வாலிப வயதான இருப்பத்தி ஒன்பதில் சுல்தான் காபூஸ் ஆட்சியை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது .....
தமது ஆட்சி காலத்தில் வறுமையை ஒழித்து 'சுல்தானேட் ஆஃப் ஓமான்' என்று பெயர் சூட்டி வளரும் உலக நாடுகளுக்கு ஈடாக தமது தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட்டவர் மட்டுமல்ல மன்னரென்ற பகட்டும் தோரணையும் இல்லாத எளிமையான மனிதர் ....
செல்வம் கொழிக்கும் எண்ணெய் வளமிக்க பூமியான ஓமானை படிப்படியாக முன்னேற்றி வளர்ச்சிப் பாதைகளில் அழைத்துச் சென்று தன்னிறைவு பெற்றிட வியூகங்கள் வகுத்து தொலை நோக்கு பார்வையோடு செயல்பட்டு நவீனமயமான செழுமை மிகுந்த நாடாக மாற்றிய பெருமைக்குரியவர் ....
இந்திய துணைக் கண்டத்தில் பல்கலைக்கழக படிப்பை பயின்ற இவருக்கு ஆசிரியரான பாரத முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் மஸ்கட் நாட்டில் வந்திறங்கிய வேளையில் மரபுகளை மீறி நேரடியாக விமான நிலையம் சென்று அவரை சிறப்பாக வரவேற்று தாமே அரச வாகனத்தில் அழைத்து வந்து உபசரித்து தமது ஆசிரியருக்கு உரிய மரியாதை செலுத்தியவர் என்றும் பேசப்பட்டவர் ....
தமது தேசத்து குடிமக்களின் குடும்பங்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை கையாண்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களில் பணிகள் செய்திடவும் சிறிய கடைகள் துவங்கவும் வாகன ஓட்டுநர்களாக பயிற்சி பெறவும் மக்களை ஊக்குவித்து வெற்றியும் கண்டவர் ....
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்ட மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டை கேட்டுக் கொண்டவர் ....
ஈரான் மஸ்கட் நாடுகளுக்கிடையே வகுத்த அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக வித்திட்டவர் ....
கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தீவிர சிகிட்சை பெற்று இறை நம்பிக்கையோடு வாழ்ந்தவர் ....
திருமணம் செய்து கொள்ளாத மன்னராக வாழ்ந்த இவர் தமக்கு பின்னர் ஓமான் தேசத்தை ஆள்பவர் இன்னார் என்று விரல் நீட்டாமலே மரணித்ததால் புதிய மன்னர் யாரென்று உலக தேசங்கள் இன்று ஆவலோடு சில மணித்துளிகள் உற்று நோக்கியது ....
ஓமான் வழக்கப்படி அரச பரம்பரையை சார்ந்த ஐம்பது பேர்கள் உடனடியாக ஒன்று கூடி அடுத்த மன்னரை தேர்வு செய்ய ஆயத்தமாகும் செய்திகள் வெளியான நிலையில் புதிய ஓமன் மன்னராக அறுபத்தைந்து வயதான 'சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் பின் தைமூர்' தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளார் ....
ஆயிரக்கணக்கான இந்தியர்களும் குமரி மாவட்ட நமது சமுதாயங்களின் நூற்றுக்கணக்கான மக்களும் ஓமானில் பணிகளாற்றி தொழில்கள் துவங்கி வாழ்ந்திட வழியமைத்தவர் சுல்தான் காபூஸ் என்பதை அங்கு வாழ்ந்து ஓய்வு பெற்ற மற்றும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர்கள் நன்கறிவர் ....
அன்னாரின் பிழைகளையும் பாவங்களையும் மன்னித்து இறைவன் அவரை பொருந்திக் கொள்வானாக ....
அப்துல் கபூர்
No comments:
Post a Comment