Tuesday, January 31, 2017

உம்மா ....(அம்மா)

உம்மா ....
மனம் இசைய
நாடி அசைய
கோடி வார்த்தைகள்
உதட்டோரம் தவழ்ந்தாலும்
இதய நிலத்தில்
பயிரூட்டும் விதைகளாய்
உம்மாவென்று உச்சரித்து
உயிரூட்டும் சொல்லுக்கு
ஒப்பானது உலகிலில்லை ....

பிஞ்சு தோலில்
இறைவன் வார்த்த
பஞ்சு முகத்தை
ஆசையாய் வருடி
அகத்தை மகிழ்வூட்டி
ஈன்ற அன்னை
சுகத்தை தந்திடுவாள் ....
அன்பால் முத்தமிட்டு
தன்பால் அரவணைத்து
வாகாய் மடியமர்த்தி
இறை அதிசயத்தின்
வாய்ப்பால் சுரக்கும்
தாய்ப்பால் ஊட்டுவாள் ....
அஞ்சில் நுழைந்ததும்
நெஞ்சில் பதிந்திடும்
மாக்கமறியும் உலகமறியும்
கல்வியறிவு பெற்றிட
பள்ளிகளுக்கு அனுப்புவாள் ....
முந்தானை தலைப்பை
விரலில் சுருட்டி
இனிக்கும் குரலில்
ராகமாய் தாலாட்டி
உறங்க வைப்பாள் ....
சுவையினை குழைத்து
உணவதை சமைத்து
நிலாவை அழைத்து
உணர்வோடு ஊட்டுவாள் ....
தவிப்பால் நின்றால்
செவிப்பால் அறிவுரைத்து
புவிப்பால் முன்னேற
நேர்வழி காட்டுவாள் ....
இன்பமும் துன்பமும்
கலந்து நிரப்பிய
கனமான பொதியினை
முதுகினில் சுமந்து
குடும்பமெனும் சாலைகளில்
துணிவுடன் பயணிப்பாள் ....
மின்னும் வரிகளோடு
இன்னும் எழுதலாம்
மனசு போதுமென்கிறது ....
எனதன்புத் தாய்
மறைந்த நாளின்று
எம்மனசு சங்கடத்தில்
உறைந்த நாளின்று
31.01.2009 ....
யா அல்லாஹ் ....
எனதருமை தாய்க்கு
சுவர்க்கத்தில் இடமளிப்பாயாக ....
அப்துல் கபூர்




Abdul Gafoor in Kampala, Uganda.

No comments: