Sunday, January 1, 2017

மோடியும், கேஷ்லெஸ் எக்கனாமியும், பின்னே ஞானும்..

Priya Thambi
இந்தியப் பிரதமர் மோடி ‘Cashless economy' அறிவித்த நாளில் இருந்தே, அதை சின்சியராக பின்பற்றி வருகிறேன்.. பணம் கொடுத்தால் தான் பொருள் தருவேன் என அடம்பிடிக்கும் பால்கடைக்காரர், பேப்பர்காரர், மின்னுவின் பள்ளி வாசலில் பலூன் விற்பவர் போன்ற தேச விரோதிகளுக்கு கொடுப்பதற்கு மாத்திரம் அவ்வப்போது பெரும்பாலும் இரவு பலகிலோமீட்டர் பயணித்து ஏடிஎம்மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வேன்..
கடந்த திங்கட்கிழமையன்று வர்தா புயல் வரப்போவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு வெதர்மேன் மூலம் அறிந்தேன். அத்தியாவசியப் பொருட்களான மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்துவிட்டேன். கையில் பணம் வைத்திருப்பது அத்தியாவசியம் இல்லை என்கிற முடிவை நவம்பர் எட்டு முதல் எடுத்திருப்பதால், அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை.

புயலுக்கு பிந்தையதினம் அதாவது செவ்வாய்க்கிழமை காலை, நானும் மின்னுவும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றோம், உடன் ஒரு குட்டி பர்ஸும், அதில் டெபிட் கார்டும்... காலை உணவுக்காக கோடம்பாக்கம் சரவண பவனில் சாப்பிட்டோம்.. பில்லுக்கு பதில் காடை நீட்டினால், ஸ்வைப்பிங் மெஷின் வேலை செய்யவில்லை என பதில் கிடைத்தது. என்னைப் போலவே, அங்கே சாப்பிட வந்திருந்த பலரும், அதே ‘’அய்யய்யோ’’வை சொன்னார்கள். நாங்கள் அங்கே ரெகுலர் கஸ்டமர்கள் என்பதால், ‘’பரவாயில்ல, அப்புறம் தாங்க’’ என அவர் தயங்கியபடி சொன்னார். நல்லவேளையாக அங்கே தெரிந்த நண்பர் வர, எங்கள் பில்லை அவர் கட்டிக் காப்பாற்றினார்.
அன்றைக்கு என் கையில் நூறு ரூபாய்க்கும் குறைவாகவே பணம் இருந்தது.. எங்கும், எங்கும் கார்டு வேலை செய்யவில்லை.. மிலாடி நபி விடுமுறை என்பதால், வங்கிக்கும் செல்ல முடியவில்லை... மின்சாரம் இல்லாததால் என் வீட்டு சமையலறை மையிருட்டாக இருந்தது... அகல்விளக்கு வைத்து சமைக்கத் தொடங்கினேன்... குழம்பின் நிலை என்னவென்று விளக்கை வைத்து எட்டிப் பார்க்க, எண்ணெய் அப்படியே குழம்பில் கலந்து ஸ்வாகா... (இது மோடியின் பிரச்னை அல்ல.. என் பிரச்னை)..
மறுநாள் காலை முதல்வேலையாக கோடம்பாக்கம் ஐசிஐசிஐ வங்கிக்கு சென்றால், என் வங்கிக்கணக்கு இருக்கும் கிளைக்கு சென்றால் பணம் எடுக்கலாம் என்றார்கள். வழக்கமாக வரும் ஆட்டோ டிரைவரிடம், பணம் இல்லை, பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள் என சொல்லி, ஏறிக் கொண்டேன். சாந்தோம் ஐசிஐசிஐ வங்கிக்கு சென்றால், ‘’அய்யய்யோ கொஞ்சம் முன்னாடி வந்திருக்க கூடாதா, இப்பதான் பணம் காலியாச்சு’’ என கைவிரித்தார்கள். அடுத்தடுத்த நாட்களிலும் ஏடிஎம் களோ, ஸ்வைப்பிங் மெஷினோ வேலை செய்யவே இல்லை... எப்படி சமாளித்தேன் என்பதை கேட்டால், பாரதப் பிரதமரை என் சார்பாக நீங்களே நான்கு... சரி விடுங்கள்...
வியாழக்கிழமை காலை தான் மின்சாரம் வந்தது.. வோடஃபோன் நெட் ஒர்க் வெள்ளிக்கிழமை தான் சரியானது.. அதிலும் மொபைல் நெட் ஞாயிற்றுக்கிழமை காலை தான் வந்தது.. வந்ததில் இருந்தே, 2 ஜிக்கும். 3 ஜிக்குமாக நொண்டியடிக்கிறது.. புயலன்று படுத்த ஏசிடி நெட்வொர்க் இன்னும் எழுந்திருக்கவே இல்லை.. அலுவலக மெயில் அனுப்புவதற்காக நேற்று மாலை என்னுடைய எம்.டி.எஸ் டேட்டாகார்டை ரீசார்ஜ் செய்ய மொபைல் நெட் ஒர்க் மூலம் முயற்சித்தேன்.. சுழன்று, சுழன்று முடிக்க சரியான பதினான்கு நிமிடங்கள் ஆனது..
எம்.டி.எஸ் நெட் ஒர்க் மூலம் தான் காலையில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன்.. இது மோடியை விட படுத்துகிறது... ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் எழுந்து போய் டிவைசை அடாப்டரில் இருந்து கழட்டி மாட்டி வேலை செய்கிறேன்... இதுதான் எனக்குத்தெரிந்த ஒரே சரிசெய்யும் முறை... இதற்கிடையில் முந்தாநாள் காலையில் விஜயா வங்கி ஏடிஎம் கிளையில் இரண்டாயிரம் ரூபாய் எடுத்தேன்.. கேஸ்காரரும், அபார்ட்மெண்ட் மெயிண்டனன்ஸ் வசூலிப்பவர்களும் பிடுங்கிப் போய்விட்டார்கள்.. மறுபடியும் கேஸ்லெஸ்ஸாக உட்கார்ந்திருக்கிறேன்..
புயலுக்கு மூன்று நாட்களுக்கு பின்புதான் என் அம்மாவோடு பேச முடிந்தது.. ‘’ரெண்டு நாளா கூப்பிட்டுட்டே இருந்தேன்.. நீ ஏன் எடுக்கலை?’’
‘’அம்மா நெட் ஒர்க்கே இல்லை’’
‘’தம்பி மட்டும் எடுத்தான்ல.. ’’
‘’அம்மா அவன் தர்மபுரி போயிருந்தான்’’
‘’புயல்னு நியூஸ் பார்த்து பயந்து போயிருந்தேன்.. ஒரு ஃபோன் கூட பண்ணி சொல்ல முடியலையா உனக்கு?.. எப்ப பண்ணாலும் பிஸி, பிஸின்னே வருது’’
மலையாள இலக்கியம் எல்லாம் வாசிக்கக் கூடிய என் அம்மாவின் கதியே இப்படி எனில்... அடிப்படையாக எதையும் சொல்லிக் கொடுக்காமல், டபாரென கேஷ்லெஸ் எக்கனாமி என மெயின் ஃபியூஸை பிடுங்கினால்.. விளங்குகிற மாதிரிதான்..
புயல் எப்போது வரும் என்று சொல்லும் சரியான தொழில்நுட்பம் கிடையாது.. புயல் வந்தால் பிய்த்துக் கொண்டு போகும் எல்லா வயர்களும் எப்போது சரியாகும் எனத் தெரியாது... வேகமான இண்டர்நெட் கிடையாது... ஒருநாள் புயலுக்கு ஒருமாதம் படுத்துக் கொள்ளும் இண்டர்நெட் கனெக்‌ஷனை வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில், ஆன்லைன் டிரான்சாக்‌ஷன், காஷ்லெஷ் எக்கனாமி பற்றி பேசுகிறோம்?


Priya Thambi

No comments: