சகோதரா,
உன் தலையில் கொம்பு இல்லையா?
உன் மண்டைக்குப் பின்னால் ஒளிவட்டம் வீசவில்லையா?
”திருமண வீடுகளில் மணமகனாகவும் இழவு வீடுகளில் பிணமாகவும்”
இருந்து முக்கியத்துவம் தேடுவதிலேயே முனைப்பாக இருப்பவர்கள் போல இல்லாத, பிழைக்கத் தெரியாதவன் நீ என்று பேசுகிறார்களா?
உன் யதார்த்தத்தை எளிதாக எண்ணி ஏளனம் பேசுகிறார்களா?
உன் முயற்சிகள் வெற்றி பெறாதவை போலச் சில நேரங்களில் தோன்றுகின்றனவா?
இந்தச் சமூகமும் நாடும் உலகமும் யாரோ சிலருக்கு எழுதிவைக்கப்பட்டு அவர்கள் விருப்பங்கள் மட்டுமே அரங்கேறுவன போல் தோன்றுகிறதா?
சகோதரா,
எதைப் பற்றியும் கவலைப் படாதே!
உன்னுடைய முக்கியத்துவத்தை நீ உணராதிருக்கிறாய் என்பதை முதலில் உணர்வாயாக!
எல்லா உலகங்களையும் படைத்த அல்லாஹ்தான் உன்னையும் படைத்தான்!
`எறும்பும் தன் கையால் எட்டுசாண்’ என்பதை நீ அறியாயா?
இயன்றதைச் செய்!
முயன்றுகொண்டிரு!
இறைவன் எல்லாம் அறிந்தவன்!
அல்லாஹ்வை நம்பியவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
`நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’போல உள்ள ஒருசிலர் உன்னுடன் இருந்தால் போதும்.உன் படைப்பின் நோக்கத்தை இறைவன் நிறைவேற்றிவிடுவான்.
அவர்களையும் அவனே கொண்டுவந்து சேர்ப்பான்...!
உனக்கொன்று தெரியுமா?
இறைநம்பிக்கையாளன் பிறந்ததிலிருந்தே அவனை வெற்றிகள் தொடர்கின்றன!அவன் வெற்றிகளை நோக்கி மட்டுமே நடத்தப் படுகிறான்!
உள்நோக்கம் நிறைந்தது உலகம்.அதில் உன் நோக்கம் தூயது என்றால் தோல்விபோலப் பிறருக்குத் தோன்றுவதிலிருந்தும் வெற்றியே வெளிப்படும் என்பது அனுபவ ரகசியம்.சிந்திக்கும் அனைவரும் உணரக் கூடிய செய்தியே இது.
அலெக்ஸாண்டரைப் போல அனைவருமே உலகை வெல்லப் புறப்பட வேண்டிய அவசியமில்லை.அவன் அதில் வெற்றிபெறவுமில்லை.
உலகில் உனக்குரிய இடம்,உனக்குரிய வெற்றிகள் எவை என எண்ணிப்பார்...இறைவன் உன்னோடு ரகசியம் பேசுவதை உணர்வாய்....
இயன்றதைச் செய்!
முயன்றுகொண்டிரு!
`
எறும்பும் தன் கையால் எட்டுசாண்’
நீ இறைநம்பிக்கை என்னும் வில்லில் இருக்கும் நாண்.
உன்னில் ஏற்றப்பட்டு வெளிப்பட இருக்கும் அம்புகளுக்காக
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் காத்திருக்கின்றன....!
Yembal Thajammul Mohammad
ஏம்பல் தஜம்முல் முகம்மது
No comments:
Post a Comment