உகண்டாவில் எனது வீட்டு வாத்தியார் ....!
கற்றுத்தருபவர் அனைவரும் ஆசிரியரே.
எனக்கு சொகிலி மற்றும் லுவோ எனும் கிழக்கு ஆப்ரிக்க மொழிககளை கற்றுத்தவர் கொமகேச் என்பவர்.
அவர் நாங்கள் எண்பதுகளில் கம்பாலாவில் வசித்துவந்த வீட்டின் காவல்காரராக வேலைசெய்து வந்தார்.
அப்போது உகாண்டாவில் உள்நாட்டு போர் நடந்து வந்ததால் மாலை 5 மணியிலிருந்து காலைவரை ஊரடங்கு சட்டமும் கண்டதும் சுடவும் உத்தரவு அமலில் இருந்தது.
வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும் காவல்காரர் கொமகேச் (இனி ஆசிரியர் என்று குறிபிடுகிறேன்) வீட்டை சுற்றி பார்த்துவிட்டு வாயிற்கதவை தாளிட்டு பூட்டி சாவியை தந்துவிட்டு வராந்தாவிலும் வெளியிலுமாக இரவு முழுவதும் காவல் வேலையில் இருப்பார்.
நல்ல உயரமும் வாட்டசாட்டமாகவும் சிரித்த முகமும் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறனும் கொண்டிருந்தார்.
சிலநாட்களிலேயே அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
இரவு உணவுக்கு பின்னர் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிவிட, நான் அவருக்காக எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்த உணவை அவருக்கு (தட்சணையாக) கொடுத்து மெதுவாக பேச்சுக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தினமும் உரையாடல் வழியாக அவரிடமிருந்து மொழிககளை கற்றுக் கொண்டேன்.
மூன்ரே மாதங்களில் ஓரளவு சரளமாகப் பேச ஆரம்பித்தேன். இளவயதும் ஆர்வமும் இணைந்து பெற்றுத் தந்த வெற்றியின் வழியானது மொழி.
சொகிலி மொழி சர்வதேச மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும். இது அரபு வணிகர்கள் ஆப்ரிகாவிற்கு வந்தபோது அவர்களுக்கிடையே இணைப்பு மொழியாக தொடங்கி இப்போது ஆப்ரிக்காவில் பல நாடுகளிலும் பேசப்படுகிறது. அரபி மொழியை அடிப்படையாக கொண்டிருந்தாலும் பிரஞ்ச் மற்றும் குஜராத்தியும் சொற்களும் கலந்துள்ளது. எழுத்துக்கு ஆங்கில எழுத்தையே பயன் படுத்துகிறார்கள்.
தன்சானியா நாட்டில் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. சிறு சிறு ஊர்களிலும் தனித்தனி மொழிகள் வழக்கில் உள்ள ஆப்ரிக்காவில் பல பிரிவினரையும் இணைக்கும் மொழியாக திகழ்கிறது.
ஆசிரியப் பெருந்தகை கொமகேச் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துக் கூறி பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன்.
No comments:
Post a Comment