Wednesday, September 23, 2015

வாழ்த்துகள் சாதிக். தொடரட்டும் உன் நற்பணி.



                                        Sadhik Sarafath
அடுத்தவர்களுக்கு உதவுவதிலும், சமூக சேவைகளிலும் பெரிய ஈடுபாடு உடைய பையன். சமீபத்தில் தன் சொந்த சிலவில் குளத்தை தூர் வாரியதாகவும், சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டதாகவும் பதிவு செய்திருந்தேன் அல்லவா. அதில் இந்த பையனின் பங்களிப்பும் இருந்தது. சரி அதுக்கென்ன இப்ப என்று கேட்கறீங்களா? இருங்க விஷயத்திற்கு வருகிறேன்.

நேற்று இரவு பதினோறு மணிக்கு எங்க ஊரில் ஒரு விபத்து. ரயில்வேயில் வேலை செய்யும் இரு பசங்க பைக்கில் வேகமாக வந்து ஒரு பள்ளத்தில் தலை குப்புற விழுந்ததில் பயங்கரமான அடி. தலை உடைந்து, முகம் வீங்கி ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இரு பசங்களையும் காப்பாற்றி தன் வீட்டிற்கு தூக்கிபோய் வீட்டிலிருந்த தனது லுங்கியை எடுத்து ரத்தத்தை சுத்தம் செய்து முடித்து ஆம்புலன்சுற்கு காத்திராமல் இன்னும் ஒரு பையனின் உதவியோடு தனது காரிலேயே அறந்தாங்கி மருத்துவமனைக்கு தூக்கி சென்று 'நிலமை ரொம்ப சீரியஸ் இங்கே பார்க்க முடியாது. நேரா புதுக்கோட்டை சென்றால் காப்பாற்றலாம்' என்று அங்கிருந்த மருத்துவர் சொன்னதால் முதலுதவி மட்டும் செய்து, அப்படியே புதுக்கோட்டைக்கு ஒரு ஆம்புலன்சில் அனுப்பி அவர்கள் குடும்பத்தினருக்கும் அந்த நள்ளிரவு நேரத்தில் தகவல் சொல்லி... சான்சே இல்லை.

தனக்கு யாரென்று தெரியாத இரு நபர்களுக்காக இவ்வளவு தூரம் வேறு யாரும் உதவுவார்களா என்றே தெரியவில்லை. தனது உறவினர்களுக்கு ஒரு விபத்து என்றாலே தன் காரில் தூக்கினால் கார் கறைபட்டுவிடும் என்று நினைத்து 108 ஆம்புலன்ஸிற்காக காத்திருப்பவர்கள் மத்தியில் தன் காரிலேயே அவர்களை தூக்கிக்கொண்டு தானே கார் ஓட்டிய மனிதாபிமானத்தை என்னவென்று சொல்வது?!

இன்று மதியம் அடிபட்ட பையனின் உறவினர் ஒருவர் இந்த பையனுக்கு போன் செய்து 'பசங்க பிழைச்சுக்கிட்டாங்க. உங்க உதவிக்கு நன்றி' என்று சொன்னபோது இவன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. வாழ்த்துகள் சாதிக். தொடரட்டும் உன் நற்பணி.
(செய்தியை பகிர்வோம் என்ற நோக்கில் எழுதப்பட்டது. மற்ற நோக்கம் ஏதுமில்லை. உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பகிரலாம்)

#‎வாழ்த்துத்துவம்‬.‬.
 
ரஹீம் கஸாலி

No comments: