Tuesday, July 9, 2019

உகாண்டாவில் நுழைந்திட பாதைகள் அமைத்த பெரியவர்

உகாண்டாவில் நுழைந்திட
பாதைகள் அமைத்த பெரியவர்
மர்ஹூம் தையுபு சாகிபு ....

அன்பிற்குரிய நட்புகளே சில நிமிடங்கள் என்னோடு அமருங்கள் ....

இறைவன் நல்கிய அருள்தனை சுமந்து குடும்ப கஷ்டங்களின் இருள்தனை போக்கிட நமது சமுதாயத்தின் முந்தைய இன்றைய தலைமுறைகள் பயணித்து வாழ்ந்த வாழுகிற 'பர்மா ரங்கூன் மலேஷியா சிங்கப்பூர் வளைகுடா உகாண்டா' போன்ற தேசங்கள் நம் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டை கைகள் கொடுத்து உயர்த்தியது என்பது காலத்தால் அழியாத வரலாறுகள் ....


எழுபதுகளின் இறுதியில் கோட்டாறு இடலாக்குடியை சார்ந்த ஒருவர் துபாயில் பணியாற்றுகையில் தமது கம்பெனி முதலாளிக்கு வியாபார வர்த்தகத்தில் நெருக்கமுள்ள உகாண்டா தொழிலக நிறுவனர் 'முக்வானோ' என்கிற மனிதர் அவருடனான உரையாடலில் 'நன்றாக கணக்கு எழுத தெரிந்த ஒரு நபர் எனக்கு வேண்டும்' என்று துபாய் முதலாளிக்கு வேண்டுகோள் வைத்ததும் நேர்மையான விசுவாசமான திறமையான ஒரு கணக்காளர் உடனடியாக தேர்வு செய்யப்படுகிறார் ....

ஆம் அவர்
ஆப்பிரிக்க கண்டத்தின் உகாண்டா நாட்டின் ஆட்சியமைப்பின் சூழல்களும் நில அமைப்புகளும் கருப்பின மக்களின் குணங்களும் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்திடாத நிலையில் 1980 ஜனவரியில் துபாயிலிருந்து பயணிக்க தயாராகிறார் ....

அச்சத்தை பஞ்சு போல் அமுக்கி நெஞ்சு நிமிர்த்தி உகாண்டாவுக்கு பயணித்த குஞ்சு தையுபு சாகிபு அவர்கள் இந்த தேசத்து மண்ணில் தமது கால்களை துணிச்சலாக ஊன்றி இறைவன் மீது பாரத்தை இறக்கி வைக்கிறார் ....

தனது வணிகத்தில் பணியமர்த்திய 'முக்வானோ' தொழில் அதிபர் இவரது கணக்கியல் நுணுக்கத்தை கண்டு வியந்த வேளையில் இந்த நிறுவனத்தில் நிலையாக பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள் ஆனந்தமாய் தள்ளப்படுகிறார் ....

உழைப்புக்குரிய நம்பிக்கை என்கிற விதைகளை பலமாக விதைத்து பல சந்ததிகளின் வாழ்க்கை தரங்கள் முன்னேற பாலமாக அமைந்திட தாம் முதல் செங்கலை எடுத்து வைப்போம் என்றும்

பாட்டாறு பாயும் கோட்டாறு மக்கள் காட்டாறு போல் பின்னாளில் இந்நாடு நோக்கி படையெடுப்பார்கள் என்றும் தமக்கே தெரியாமல் உகாண்டா நாட்டில் உறுதியாக உளமார ஐக்கியமாகிறார் ....

இந்த கால கட்டத்தில் நமதூரில் பெரும்பாலான குடும்பமெனும் கோட்டைகளில் உருண்ட வறுமையான சூழல் கருப்பின மக்கள் வாழுகிற இருண்ட கண்டத்தின் கிழக்கு தேசமான உகாண்டா வாயிலாக தத்தமது வாழ்க்கையில் வருமானம் துளிர்ந்து பிரகாசமாய் ஒளிர்ந்து நுழைவு வாசல் திறக்கப்படும் என்பதை அன்றைக்கு யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை ....

ராணுவ ஆட்சி நடந்தேறும் உகாண்டாவுக்கு தமது ஊரார்களை அழைக்கும் திட்டங்களை தைரியமாக வகுத்து தம்முடைய குடும்ப வாரிசுகள் இரத்த பந்தங்கள் நட்புகள் உறவுகள் போன்றோர்களை மர்ஹூம் தையுபு சாகிபு பாகுபாடின்றி அழைப்பதற்காக பெயர்கள் அடங்கிய பட்டியலை உருவாக்குகிறார் ....

நெருங்கிய உறவுகளான பாவா காஸீம் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் சாகிபு ஆகியோர் ஏப்ரல் மாதமும் அடுத்து தனது மகன் தாரிக் மருமகன் மஹ்மூத் மற்றும் தமது உறவான வாவுபிள்ளை சங்கம் ஆகியோர் செப்டம்பர் மாதமும் அவரால் 1980 வது ஆண்டு அழைக்கப்பட்டு அவர்களுக்கேற்ற பணிகளில் ஆங்காங்கே அமர்த்தப்படுகிறார்கள் ....

நாட்கள் நகர்ந்து மாதங்களை தொட்டு வருடங்களும் கழிந்து செல்லுகையில் ஏற்கனவே வந்திறங்கி வேலைகளில் மூழ்கியோரின் எண்ணங்கள் விரிந்த வேளைகளில் அவரவர் பந்தங்களையும் உறவுகளையும் நட்புகளையும் உகாண்டாவுக்கு அழைத்து பணிகளை துவங்கி முதலில் விதைக்கப்பட்ட விதைகளின் வேர்களிலிந்து முளைத்து மெதுவாக வளர்ந்த மரம் கிளைகளாக விரிந்தோங்கி படருகிறது ....

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொருவராக வந்திறங்கி இன்றைய நிலவரப்படி ஆயிரத்தை நெருங்குகிற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக உகாண்டா முழுவதும் வியாபித்து கல்வியாலும் திறமைகளாலும் சோபித்து சுகமாக ஜீவித்து பணியாற்றியும் தொழில் செய்தும் குடும்பங்களை முன்னேற்ற கடுமையாக உழைத்து கம்பாலா ஒரு மினி குமரி மாவட்டம் என்று சொல்லுகிற நிலைக்கு அடர்த்தியாக வாழுகிறோம் ....

அல்ஹம்துலில்லாஹ் ....

ஆல மரமாய் வளர்ந்தோங்கி விழுதுகளாய் நீளும் இந்த மாபெரும் காற்றலை சுழற்சிகளுக்காக வித்திட்டவரையும் உழுதோரையும் நீரூற்றியோரையும் பயிரிட்டோரையும் இன்றைக்கு உகாண்டா சம்பாத்தியத்தால் வருமானத்தை கூடுதலாகவோ (அ) குறைவாகவோ அறுவடை செய்து வாழுகிற பெரும்பாலான மக்களுக்கு இந்த சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ....

பசுமையில் தழைக்கிற இப்படிப்பட்ட ஒரு நாடு உண்டா என்கிற ஆச்சரியத்தை தம்முள் அடக்கிய உகாண்டா நாட்டுக்குள் நுழைந்திட பாதைகள் திறந்து அடித்தளம் அமைத்த மர்ஹூம் தையுபு சாகிபு மற்றும் அவருக்கு அடுத்தடுத்து ஏராளமாக உதவியோருக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் பெரும் பாக்கியங்களை தாராளமாக வழங்குவானாக ....

கல்கத்தா பம்பாய் மாநிலங்களிலும்
துபாய் உகாண்டா தேசங்களிலும்
பணியாற்றி வாழ்ந்து சில வருடங்களுக்கு முன்பு மறைந்த 'உகாண்டாவின் தந்தை' மர்ஹூம் தையுபு சாகிபு அவர்களின் மறுமை வாழ்க்கையை இறைவன் சுவர்க்கத்தில் நல்லடியார்களோடு வாழச் செய்வானாக ....

வாழுமை தருகிற வாழ்க்கைக்கு
செழுமை தருகிற வல்லோன் இறைவனுக்கே புகழனைத்தும் உரித்தாகுக ....

'விரும்பி வாழ்ந்த மண்ணை திரும்பி பார்க்கிறேன்' என்று நான் எழுதவிருக்கும் நீண்ட தொடர் கட்டுரையில் இன்னும் பல்வேறு விவரங்களும் விஷயங்களும் உள்ளடங்கும் ....

இன் ஷா அல்லாஹ் ....

அப்துல் கபூர்
Abdul Gafoor
09.07.2019 ....

தகவல்கள் சேகரிப்பு
வாவுபிள்ளை ராஜா
Mohamed Hussain

படம் உதவியளித்தவர்
அன்னாரின் இளைய மகன்
Mohamed Turab

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails