Tuesday, July 30, 2019

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி


இன்று (ஜூலை 30-ந் தேதி) இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த அவர், திண்ணை பள்ளியில் படித்தார். பெண் கல்விக்கு எதிரான அந்த காலத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்தார். இதனை நேரில் பார்த்ததால் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும். நம்முடைய தாயை போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே அவருக்குள் ஆணிவேராக வளர்ந்தது.


1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இவர், படிப்பில் சிறந்து விளங்கியதால் பல்வேறு சான்றிதழ்களையும், தங்க பதக்கங்களையும் பெற்றார்.

கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை உட்கார அனுமதிப்பது இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை பாடத்தில் முத்துலட்சுமி தங்கப்பதக்கம் பெற்ற பிறகு, மனம் மாறிய பேராசிரியர், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் தனது வகுப்பில் பெண்களும் உட்காரலாம் என்று கூறினார்.

1912-ம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு. பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும் புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.

1926-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், 1933-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவிலும் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடுகளில் இந்திய பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் பணியாற்றி, அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் 1925-ம் ஆண்டு சட்டசபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் சில புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். அவற்றில் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாக தடைச்சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆணாதிக்கமிக்க அந்த காலத்தில் தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்காக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். பின்னர் 1947-ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அந்த சட்டம் அமலுக்கு வந்தது.

அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை தொடங்கினார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கென நிதி திரட்டி 1952-ம் ஆண்டு அடையாறில் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பெற்று 1954-ல் தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும். 1956-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 1968-ம் ஆண்டு தனது 81-வது வயதில் காலமானார்.

இவரது நினைவை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசால் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம்’ ஏழை கர்ப்பிணிகளுக்காக தொடங்கப்பட்டது. தற்போது, 2018-ம் ஆண்டு முதல் பேறுகால உதவியாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி பிறந்தநாளான ஜூலை 30-ந் தேதியை அரசு மருத்துவமனைகளில் ‘மருத்துவமனை தினமாக’ கொண்டாட தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் பல்வேறு மருத்துவ சேவைகள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!’

என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார். வாழ்க்கையில் எத்திசையில் திரும்பினாலும் கஷ்டமும், பிரச்சினையும் உங்களுக்கு வந்தாலும் டாக்டர் முத்துலட்சுமியை நினைத்து கொள்ளுங்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு தானாக வரும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை கவுரவப்படுத்தும் வகையில் 🇮🇳கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.🇨🇦.
அன்புடன் ரஹ்மான்

No comments: