Sunday, July 21, 2019

ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு.....”


Hussain Amma



யோசிச்சுப் பாத்தா, சின்ன வயசிலல்லாம் நமக்கு தோட்டம் போடணும், செடி வளர்க்கணும்னு பெரிசா ஆசைலாம் இருந்ததில்லை. ஏன்னா, நம்மைச் சுற்றியும், வீடுகளிலும் முற்றத்துப் பகுதியில் நிறைய மரம்,செடி,கொடிகள் தாராளமாக இருந்தன. முக்கியமா, வயல்கள்!! நிறைய வீட்டில் விவசாயம் செய்து வந்தாங்க. அதனால், வயக்காடு, களத்து மேடு இதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதியாவே இருந்துச்சு.

பின்னர் கால ஓட்டத்தில், இவை குறைந்த போதுதான், தொட்டிகளில் செடி வளர்த்து வீட்டுத் தோட்டம் போடணும் அப்படிங்கிற கான்ஸெப்டே வந்துது போல. எனக்கும் நினைவு தெரிந்து, நான் வேலைக்குப் போகும்போதுதான், மாடியில் தொட்டிகளில் செடி வைத்து வளர்த்தேன். (அவையெல்லாம் நான் கல்யாணமாகிப் போனது யாரும் கண்டுக்கலை என்பதால் வாடி விட்டன... கேட்டால், ”இருக்க வேலையில மாடிக்குப் போயெல்லாம் தண்ணி ஊத்த நேரம் இல்லை” என்று பதில் வந்தது!!)


அந்த சோகத்தோடே அமீரகம் வந்து சேர்ந்தேன். சோகத்திற்கு மருந்தாக, தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் உறவினர் ஒருவரைக் கொண்டு உதவி செய்ய வைத்தான் இறைவன். ஆம், வீட்டிலேயே நிறைய்ய்ய்ய அலங்காரச் செடிகள் வைத்து அழகு பார்த்தேன். இப்படியே சில வருடங்கள் போக, அதன் பின்னர் கணவர் பணி நிமித்தம் ஒரு குக்கிராமத்தில் குடியேற நேர்ந்தது. அழகான வீடு. வீட்டின் முன் இருந்த காலி நிலத்தை “வளைத்துப் போட்டு” வேலி கட்டி, தோட்டம் போட்டோம்.

அதுவரை அலங்காரச் செடிகள் மட்டுமே வைத்திருந்த நான், முதன் முதலில் காய்கறித் தோட்டம் போட்டேன். முருங்கை, வெண்டை, கத்தரி போன்றவை விளைந்தது. உறவினர்களுக்கும் கொடுப்பேன். வாராவாரம் கொடுத்ததால், வெண்டைக்கா, கத்தரிக்காவை வெறுக்கும் நிலைக்குப் போய்விட்டார்கள்!!

தோட்டத்தோடு, முயல்கள், லவ் பேர்ட்ஸ் முதலியவையும் வளர்த்து, ஒரு “ஒருங்கிணைந்த பண்ணையம்” அமைத்துத் தந்து, என் கணவர் என்னை (ஆளில்லா ஊரில்) ஒரு பண்ணையாரம்மாவாக வலம் வர வைத்த இனிய காலம் அது. இந்த அனுபவத்தில்தான் கணவரிடம் இந்தியாவில் ஒரு தோப்பு வாங்கித் தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தேன். அவரும் பொண்டாட்டி ஆசைப்பட்டுட்டாளேன்னு விசாரிச்சுப் பார்த்ததில், நிலாவில் நிலம் வாங்குவது இதவிட சீப்பா இருக்கும்னு தெரிய வந்ததால், நிலாவைக் கையில் பிடிச்சுக்கலாம் என்று முடிவு செய்து இந்த ஆசையை விட்டோம்.

பிறகு அங்கிருந்து மறுபடியும், அபார்ட்மெண்ட்டில் ஐந்து வருடம். பால்கனியில் தோட்டம் வளர்த்தேன். ஒரு கட்டத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக பால்கனியை மூட வேண்டி வர (எட்டி குதிச்சா, புதிதாகக் கட்டப்பட்ட அடுத்த பில்டிங்கின் பால்கனியில் லேண்ட் ஆகிடலாம்), செடிகள் வாடின, நான் கருகினேன். அத்துடன், தோட்டத்துடன் கூடிய தனி வீட்டில்தான் வாழ்வேன் என்று அடம்பிடித்துக் குடியேறினேன்.

வீட்டைச் சுற்றி நிறைய இடம் இருந்தாலும், இம்முறை காய்கறி ஒன்று கூட விளையவில்லை. (பூச்சிகள் படையெடுப்பு) முயற்சி செய்தே சோர்ந்து விட்டேன். சரியென்று, மரங்கள், பூச்செடிகள் வளர்த்தோம். தோட்டம் போடக்கூடிய தனி வீடுகளில் பல வருடங்களாக இருக்கக் கிடைத்தது இறைவன் அருளிய பாக்கியம்.

இப்போது, போதுமென்ற பொன்மனதுடன் (ஹி.. ஹி... செலவு சுருக்கத்தான்), அபார்ட்மெண்டில் குடி வந்துள்ளோம். இங்கே பால்கனியில், துளசி, ஓமவல்லி, புதினா, கற்றாழை தவிர எனக்கே பேர் தெரியாத சில அழகு செடிகளை வச்சிருக்கேன். இன்ஷா அல்லாஹ் காய்கறிச் செடிகள் போட்டுப் பார்க்கணும்.

இப்போதைக்கு இதுதான் என் “தோட்ட வரலாறு”!!

இவையெல்லாம் ”தோட்டம்” குறித்து என் வலைப்பூவில் எழுதிய பதிவுகள். சோகமா இருக்கும்போது வாசிங்க. :-P

Hussain Amma


https://hussainamma.blogspot.com/2011/01/blog-post.html
https://hussainamma.blogspot.com/2012/02/blog-post_16.html
https://hussainamma.blogspot.com/2013/10/blog-post_31.html
https://hussainamma.blogspot.com/2011/06/blog-post.html

https://hussainamma.blogspot.com/2013/11/blog-post.html

No comments: