-----------------
(Sharing Varun Sagar's post and picture)
“அன்பே வா” படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தோம்.
எம்ஜிஆருடன் ஜானகி அம்மையாரும், உதவியாளர் சபாபதியும், நானும் (ரவீந்தரும்) காரில் ஒன்றாக பயணித்தோம்.
கார் குன்னூரை தாண்டியபோது வயோதிக முஸ்லீம் பெரியவர் ஒருவர் பாதையோரத்தில் நடந்து செல்வதை எம்ஜிஆர் கவனித்தார்.
காரை நிறுத்த சொன்னார் டிரைவரிடம். ”ராமசாமி, அந்த பெரியவர் எங்க போகணும்னு கேட்டு ஏத்திக்க. ரவீந்திரன், நீங்க என் பக்கத்துல வந்து உட்காருங்க” என்றார்.
பெரியவரை கூப்பிட்டதும் சற்று நேரம் உற்று பார்த்தார். பிறகு ஏறிக் கொண்டார். கார் புறப்பட்டது. பெரியவர் ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல் சிந்தனையில் இருந்தார்.
எம்ஜிஆர் கேட்டார். ”பெரியவரே எங்க போயிட்டு வரீங்க?”
“கீழே போய் விறகு வித்துட்டு வர்றேன்”
”இந்த வயசுல நீங்க வேலை செய்யனுமா... பிள்ளை குட்டிங்க கவனிக்க மாட்டாங்களா?”
”பிள்ளை குட்டிங்க இருக்காங்க. ஆனா அவங்களுக்கும் பிள்ளைங்க இருக்குதே…. ” என்றார் பெரியவர்.
எம்ஜிஆர் அதற்கு மேல் பேசவில்லை. மவுனம் நிலவியது. சற்று தூரம் வந்தவுடன் பெரியவர் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி போனார்.
எம்ஜிஆர் என்னிடம் கேட்டார். ”ரவீந்திரன், இந்த பெரியவர் பற்றி என்ன நினைக்கிறீங்க?”
”ரொம்ப பெரியவர்! ஏன்னா நீங்க கேட்ட கேள்விக்கு 'அவங்களுக்கும் பிள்ளைகள் இருக்குதே'ன்னு ஒரு பெரிய விஷயத்தை சுருக்கமா சொல்லிட்டாரு” என்று நான் சொல்ல…
அதற்கு எம்ஜிஆர், ”அட, அதை கேக்கலய்யா. அவருக்கு நான் யார்னே தெரியல! நீர் என்னமோ நாட்டுல என்னை தெரியாதவங்களே இருக்க மாட்டாங்கன்னு சொன்னீரே! தோத்து போயிட்டீர்ல, இப்ப..” என்று பலமாக சிரித்தார்.
இன்னமும் கார் நின்று கொண்டிருந்ததை கவனித்த எம்ஜிஆர், ”ராமசாமி ஏம்பா நிக்கிறே? போயேன்” என்றார்.
”அந்த பெரியவர் நில்லுங்கன்னு சைகை காட்டிட்டு போனாருங்க. அதோ வரார்..” என்றார் ராமசாமி.
பெரியவர் வந்தார். கையில் பழங்களுடன்.
”ஐயா, சாவுறதுக்கு முன்னால ஒரு தரம் உங்களை பாத்துரணும்னு இருந்தேன். உங்ககூட உங்க கார்ல வர்றதை நினைச்சதும் எனக்கு பேச்சு மூச்சு இல்ல! அல்லா கிட்ட உங்களை நல்லாக்கி வைக்கணும்னு வேண்டிகிட்டு இருந்தேன். என் பிள்ளைங்க தவறாம உங்க படம் பார்ப்பாங்க. நான் படம் பார்க்க மாட்டேன். உங்க படத்தை போஸ்டர்ல பாத்திருக்கேன். வெறுங்கையோட பாத்துட்டோமேனு கவலை. அதான் பழம் வாங்கியாந்தேன். மிஸ்கீன் (யாசகன்) தர்றேன், வாங்கிக்குங்கய்யா” என்றார் பெரியவர் வெளியே நின்றபடி.
புன்சிரிப்புடன் எம்ஜிஆர் பெற்றுக் கொண்டார். கார் கிளம்பியது. ஜானகி அம்மையார் கேட்டார்.
”பாவம்.... அவருக்கு எதாச்சும் குடுத்திருக்கலாம்ல? நான் கொடுக்கலாம்னு வந்தப்ப ஏன் தடுத்தீங்க?”
அதற்கு எம்ஜிஆர் சொன்னார்.…”இல்ல ஜானு, தன்மானத்துக்காக தன் பிள்ளைங்க கிட்டயே கை நீட்டாம, தானே விறகு வெட்டி வித்து சாப்பிடுற அவருக்கு நாம பணம் கொடுத்தா வருத்தப்படுவாரு. அவர் ரொம்ப பெரிய கேரக்டர்! சரி, அவர் கொடுத்த பழங்களை பத்திரமா வை. நானே சாப்பிடப் போறேன். யாருக்கும் கொடுக்க மாட்டேன்.” என்றார் குழந்தையை போல.
- (கலைமாமணி நாகூர் ரவீந்தர் படைப்பான “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்” என்ற நூலில் இருந்து)
நன்றி kathir vel
No comments:
Post a Comment