Sunday, September 2, 2018

நபிமொழிக் கவிதைகள் — 7

 by நாகூர் ரூமி


ஜோதி நபி சொன்னார்கள்:

பாதி பேரீச்சம் பழத்தையாவது

தர்மம் கொடுப்பதன் மூலம்

தகிக்கும் தீயிலிருந்து

தற்காத்துக் கொள்ளுங்கள்



அதுவும் இல்லையெனில்

நல்ல சொற்கள் தர்மமாகும்

இனிய சொற்கள் ஈகையாகும்

நட்பான சொற்கள்

நல்லறமாகும்

(புகாரி, அ: அபூஹுரைரா. 08 – 6023)




25

அசர் தொழுதுவிட்டு

அவசரமாய் வீட்டுக்குள்

விரைந்து திரும்பினார்கள்

விந்தை நபி

தாஹா நபியின் வேகம் பார்த்து

திகைத்தார்கள் தோழர்கள்



தங்கத்தால் ஆன பொருள் ஒன்று

தங்கிவிட்டது என் வீட்டில்

நினைவில் அது உறுத்திடவே

நிலைகுலைந்து போய்விட்டேன்

இன்றிரவு முழுக்க அது என்

இல்லத்தில் இருப்பதிலே

இஷ்டமில்லை எனக்கு

தகுதி உள்ள யாருக்காவது

தர்மமாகக் கொடுங்கள் என

கட்டளையிட்டு வந்தேன் என்று

காசிம் நபி கூறினார்கள்



தங்கிவிட்டது தங்கமே ஆனாலும்

தாஹா நபி விரும்புவதில்லை

பொன்னால் ஆன பொருளே எனினும்

பொன்மனச் செம்மல் பொருப்பதில்லை



சேர்த்து வைப்பதெல்லாம் செல்வமில்லை

வாங்கி வைப்பதெல்லாம் வசதியில்லை

எடுக்கின்ற கைகள் ஏழைக்குரியவை

கொடுக்கின்ற கைகளே கொடுத்துவைத்தவை



உஹது மலை முழுவதும் தங்கமாக இருந்தாலும்

உடனே கொடுத்துவிடுவதே உசிதம் என்றார்கள்

தர்மம் செய்வதே தன்வழி என்று

தயாள நபி காட்டினார்கள்

(புகாரி, அ: உக்பா இப்னு ஹாரித். 02 — 1221/1430)



26

விதை விதைத்தது நீங்கள்

மரம் வளர்த்தது நீங்கள்

பழம் உண்டது பறவை — ஆனால்

உங்களுக்குக் கொடுக்கிறது

அந்த தர்மத்தின் வரவை!

மனிதனோ மிருகமோ பறவையோ

உண்டது கருமம்

அது உங்களுக்கான மறைமுக தர்மம் என்று

தாஹா நபி சொன்னார்கள்

(புகாரி, அ: அனஸ். 03 – 2320)

27

வேண்டாப் பொருளையும்

தீண்டா உணவையும்

தருவதன் பெயர் தர்மமல்ல

பிடித்ததில் இருந்து எடுத்துக் கொடுங்கள்

கடித்ததில் இருந்து கொஞ்சம் கொடுங்கள்

நல்லவற்றிலிருந்து நாடியவருக்குக் கொடுங்கள்

வல்ல நாயன் விரும்புவது அதுதான்

(திர்மிதி, அ: அபூஹுரைரா. 02 – 661)



28

வாங்கத் தாழும் கையைவிட

கொடுக்க உயர்ந்த கையே சிறந்தது

அடுத்தவனிடம் கேட்காமல் இருந்தால்

ஆண்டவனே கொடுத்தருள்வான்

எண்ணி எண்ணி சேர்த்து வைக்காதே பொருளை

இறைவன் கொடுக்கமாட்டான் அருளை

(புகாரி, அ: ஹகீம் இப்னு ஹிஷாம். 02 – 1427)

சென்ற மக்கள் உரிமை இதழில் ஏற்கனவே வந்த கவிதைகள் மீண்டும் பதிவாகிவிட்டன. 6-ல் வந்தவை 5ல் வந்தவைதான்.எனவே இப்போது 6க்கு பதிலாக 7.

நன்றி மக்கள் உரிமை.
https://nagoorumi.wordpress.com/

No comments: