Sunday, September 2, 2018

நபிமொழிக் கவிதைகள் — 08 by நாகூர் ரூமி


வாஞ்சை நபி சொன்னார்கள்:

வசதியோடிருக்கும்போது

விருப்பத்துடன் கொடுப்பது

வாழ்த்தத் தகுந்த தருமமாகும்

எனினும்

சார்ந்திருப்பவர்க்குக் கொடுத்து

சந்தோஷமாய்த் தொடங்குவது

தலையாய கருமமாகும்

(புகாரி, அ:ஹகீம் இப்னு ஹிஷாம். 02 – 1427)


30

மதினாவுக்கு வந்தபின்னர்

முத்திரைநபியின் குடும்பத்தினர்

மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து

வயிறாற உண்டதில்லை

வாழ்நாளில் ஒருமுறைகூட

காசிம் நபி காலமாகும்வரை

(புகாரி, அ: அபூஹுரைரா: 07 – 5374, ஆயிஷா: 07 – 5416,)

31

அடுப்பை நாங்கள் பற்ற வைக்காமலே

அந்த மாதம் முழுவதும் போயிருக்கும்

உணவு எங்கள் கனவு என்று

உண்ணாமலே இருந்துள்ளோம் பல நாட்கள்



பட்டினி கிடக்காமல் இருப்பதற்கு

பேரீச்சம் பழங்களும் தண்ணீரும்

உண்டு கொஞ்சம் கண்ணீரும்



மாமிசத் துண்டுகளை யாராவது

முஸ்தஃபா வீட்டுக்கு அன்பாக

அனுப்பினால் மட்டும் அடுப்பெரியும்

(புகாரி, அ: ஆயிஷா. 08 – 6458)

32

பாரசீக ஆட்சியாளர் கிஸ்ரா

பைசாந்திய சக்கரவர்த்தி கைசர் — போன்ற

பாராண்ட மன்னர்களுக்கும் கிடைக்காத மரியாதை

ஈருலக நாயகனாம் எம்பெருமான் முஹம்மதுக்கு

எப்போதும் இருந்து வந்தது

ஆனாலும்

கொஞ்சம் பார்லி உணவுக்காக

காருண்ய நபியின் கேடயம் ஒன்று

அடமானத்தில் இருந்தது யூதர் ஒருவரிடம்

பெருமானார் உலகைப் பிரிந்தபோதும்

அடமானத்தில்தான் இருந்தது

அவர்களின் கேடயம்



வறுமையையும் பொறுமையையும்

விரும்பி வாழ்வில் ஏற்ற பெருமை

இறுதிநபி ஒருவருக்கே

என்றென்றும் உண்டிங்கே

(புகாரி, அ: ஆயிஷா. 03 – 2068)

33

உத்தம நபிகள் சொன்னது

உள்ளத்தில் தொடங்கி

உடலில் முடிகிறது உபவாசம்

விருப்பத்தோடு விட்டு விலகும் மாண்பு

பட்டினியல்ல, அது உயர் நோன்பு

நிய்யத் இல்லா நோன்பு

மய்யத் ஆகிவிடும்

(நஸாயீ, அ: ஹஃப்ஸா. 03 – 2333)

நன்றி: மக்கள் உரிமை ஜூன் 15 — 21, 2018

கவிதைகளின் எண்களில் தவறு உள்ளது.
https://nagoorumi.wordpress.com/

No comments: