Wednesday, September 26, 2018

தமிழகமும் நம் தலைவர்களும்


தமிழ் நாடு என் தாயகம் என்பதால்
என் அரசியல் பார்வை இப்போது
அதைச் சுற்றியே நகர்கிறது.
நாட்டுக்காக தலைவர்கள் என்ற
நிலை மாறி இப்போது ஓட்டுக்காக
தலைவர்கள் உருவாகி விட்டார்கள்.

தமிழக அரசியலை
1947 க்கு முன்
1947 க்கு பின்
என்று பிரித்து கொண்டால்
47 க்கு முன் தமிழகத்தை
ஆண்டவர்கள் எவரும் ராஜாஜி
உட்பட ராஜ தந்திரியாக இருந்தும்
மக்கள் தலைவர்களாக இல்லை.


காமராஜர்,அண்ணா,கலைஞர்,
எம்ஜிஆர், ஜெயலலிதா என
இவர்கள் அனைவருமே
மக்கள் தலைவர்களாக உலா
வந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
பெரியார் இன்றும் அரசியலை
விட்டு சற்று விலகியே, மக்கள்
மனதில் நிற்கிறார்.

காமராஜர் தவிர்த்து மற்றவர்
எல்லாம் சினிமாத்துறையை
சார்ந்தவர்கள் என்பதால் சினிமா
இமேஜை காட்டி அரசியலில் கால்
பதிக்க முடியும் என்ற ஆசையே
எல்லா நடிகர்களையும் தமிழக
அரசியல் களத்தில் விளையாடி
பார்க்க தூண்டியிருக்கிறது.
இந்த நடிகர்கள் எல்லாம்
நாடாள்வார்களா என்பதை
காலம் தான் சொல்ல வேண்டும்.

மாற்றான் வீட்டு மல்லிகைக்கும்
மணம் உண்டு, என்று சொன்ன
அண்ணாவின் தம்பிகள் தான்
இன்று நாம் காணும் பல
கழகங்களில் கலந்து “இப்படை
தோற்கின் எப்படை வெல்லும்”
என வீர வசனம் பேசுகிறார்கள்.

காமராஜர் இல்லாத காங்கிரஸ்..
கலைஞர் இல்லாத திமுக
அம்மா இல்லாத அதிமுக
அண்ணனுக்காக, சேர இளவல்
இளங்கோவடிகள் துறவரம்
பூண்டது போல் இங்கு எவரும் அரசியலில் துறவரம் பூண தயார் நிலையில் இல்லை.

தமிழக முதல்வர் கனவுகளில்...
பெரிய தலைவர்களின்
செல்லப் பிள்ளைகளாக சில
சின்ன தலைவர்கள்,தந்தை
சொல் கேட்காத சில முரட்டு
பிள்ளைகள், படித்த தொழிலில்
கவனம் செலுத்தாத டாக்டர்கள்
சூப்பர் ஸ்டார்கள்,உலக நாயகன்
கள் என தமிழக அரசியல் மேடை
சினிமா.. மீடியா... மாயா ஜால
வர்ணங்களில் மூழ்கி பகட்டாக
ஜொலிக்கிறது, பாமர மக்களை
மயக்குகிறது.

ஓட்டு போடும் உரிமையை மட்டும்
மக்களுக்கு வழங்கிய ஜனநாயகம்
ஓட்டு எண்ணும் உரிமையை மட்டும்
அரசின் கைகளில் ஒப்படைத்து
தூர நின்று வேடிக்கை பார்க்கிறது.

இனி இந்த பணிகள் கூட கூகுளின்
கரங்களில் போகலாம்.வளர்ந்த
வல்லரசுகளே இனி வளரும் நாடுகளின் தலைவர்களை தேர்வு செய்யலாம்.
புரட்சி,போராட்டம்
என்பதெல்லாம் இனி வாட்ஸ்
அப்பில் முடிந்து விடலாம்.
எந்திரத் தலைவனின் நிரந்தர
அடிமைகளாக மனித இனமும் மாறலாம்.

அது வரை...
எல்லோரும் இந்நாட்டு
மன்னர்களாக இல்லை....
முதல்வர்களாக வாழ கனவு
காண்போம்.
வாழ்க தமிழினம்

Vavar F Habibullah

No comments: