கையில் ஒரு குச்சியையும் எடுத்துக் கொண்டு சிறுமி ஹவ்வா வழமையாக அவளுடன் விளையாடும் ஹசனைத் தேடி அவனது வீட்டுக்குச் செல்கிறாள். அவன் வீட்டுப்பாடங்களை முழுமையாகச் செய்து முடித்த பிறகுதான் அவனை வீட்டை விட்டும் வெளியே விளையாட அனுப்புவதாகக் கூறி அவனது மூத்த சகோதரி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்கிறாள். வெளியே வர வழியில்லையாதலால் சிறுவன் ஜன்னலினூடாக அவளுடன் கதைக்கிறான். ஹவ்வாவின் நேரமோ போய்க் கொண்டிருக்கிறது. தான் கடற்கரைக்குச் செல்வதாகவும் ஹசனை அங்கே வரும்படியும் கூறிவிட்டு ஹவ்வா அங்கே செல்கிறாள்.
அங்கு சிறுவர்கள் தகர பீப்பாய்களை இணைத்து, சிறு பாய்க்கப்பல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவள் அங்கும் குச்சியை நட்டு நிழலை அளந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். நிழல் சிறிதாகிக் கொண்டே வருகிறது. பாய்மரக்கப்பலை கட்டிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு, தம் சிறு கப்பலில் கட்டுவதற்காக துணி தேவைப்படுகிறது. எனவே அச் சிறுமிக்கு ஒரு விளையாட்டுப் பொருளைக் கொடுத்துவிட்டு, அவளது தலையை மூடியிருந்த துணியை வாங்கிக் கொள்கிறார்கள்.
அவள் மீண்டும் ஹசனிடம் வருகிறாள். ஹசனுக்கும் இன்னும் வெளியே வந்துகொள்ள வழியில்லை. கையிலிருந்த குச்சியை அங்கு நடுகிறாள். நிழல் குறுகிக் கொண்டே வருகிறது. இன்னும் சில கணங்களில் அவள், அவனிடமிருந்து நிரந்தரமாக பிரியாவிடை பெற்றுச் செல்ல வேண்டியிருக்கிறது. அவனுக்கு அவனது தோழியின் முகத்தை இனி என்றென்றைக்கும் பார்க்க முடியாது. எனவே அவன் அவளிடம் பணம் கொடுத்து தமக்கு ஐஸ்கிறீம் வாங்கி வரும்படி கேட்கிறான். அவள் சென்று ஐஸ்கிறீம் இல்லையெனக் கூறி தான் வாங்கி வந்த புளிப்பு மிட்டாயையும், லொலிபப்பையும் அவனுக்கு ஊட்டி விடுகிறாள். இருவரும் மாறி மாறி ஒரு லொலிபப்பைச் சுவைக்கிறார்கள். குச்சியின் நிழல் காணாமல் போகிறது. ஹவ்வாவைத் தேடிக் கொண்டு அவளது தாய் வந்து நீண்ட ஃபர்தாவை அவள் மீது போர்த்தி, அவளை அழைத்துச் செல்கிறாள். சொற்ப நேரத்துக்கு வீட்டுச் சிறையில் அவன். வாழ்நாள் முழுவதற்குமான நிரந்தரமான முக்காட்டுச் சிறையில் இனி அவள்.
*********
அஹூ -
கடற்கரையை ஒட்டிச் செல்லும் ஒரு பாதையில் பெங்குயின்களைப் போன்ற கறுப்பு உருவங்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லோருமே கறுப்பு நிற முக்காடிட்டுப் போர்த்திய இளம் பெண்கள். சைக்கிள்களின் மீதமர்ந்து மிக வேகமாக மிதித்தபடி சென்றுகொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே சைக்கிள் போட்டியொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களுள் ஒருத்தியாக அஹூவும் இருக்கிறாள். அவள் சக பெண்களை விடவும் சைக்கிளோடுவதில் முன்னணியில் இருக்கிறாள். திடீரென குதிரையொன்றில் ஏறி அங்கு வரும் அஹூவின் கணவன், பெண்கள் சைக்கிளோட்டுவது கூடாதெனவும், அவள் உடனடியாக அதை நிறுத்திவிட்டு அவனுடன் வர வேண்டுமெனவும் பணிக்கிறான். அவள் சைக்கிளை நிறுத்துவதுமில்லை. இறங்குவதுமில்லை. தன்பாட்டில் வேகமாகப் பயணித்துக் கொண்டேயிருக்கிறாள்.
கணவன் சென்று இன்னுமொரு குதிரையில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்த முல்லாவை அழைத்து வந்து அவளுக்கு போதிக்கச் செய்கிறான். அவரும் அவளை சைக்கிளை நிறுத்திவிட்டு, அவர்களுடன் வருமாறு அழைக்கிறார். நீ கணவன் பேச்சைக் கேட்காவிட்டால் அவன் உன்னை விவாகரத்து செய்துவிடுவான் என அவர் அச்சுறுத்துகிறார். எனினும் அவள் கேட்பதாயில்லை. தொடர்ந்தும் பயணித்துக் கொண்டேயிருக்கிறாள். அவர்கள் போய் விடுகிறார்கள். அவர்களின் குறுக்கீடால் தோழிகளை விடவும் சைக்கிளோட்டத்தில் பின் தங்கி விட்ட அவள், மீண்டும் வேகமாக மிதித்து முதலாவதாக பயணித்துக் கொண்டேயிருக்கிறாள்.
திரும்பவும் குதிரைகளின் குழம்படிச் சத்தம். அவளின் இருபுறத்திலும் அவளது தந்தையும், உறவினர்களான முதிய ஆண்களும் அவளை சைக்கிளை விட்டும் இறங்கி கணவனிடம் உடனே செல்லும்படி கூறுகிறார்கள். அவள் நிற்பதாயில்லை. அவளது கணவன் அவளை விவாகரத்து செய்து விட்டானெனக் கூறுகிறார்கள். அவள் அவர்களது குடும்பத்துக்கு இழுக்கைத் தேடித் தந்துவிட்டதாகவும், இனி அவளது அண்ணன்கள் வந்தால் அவளை உயிருடன் விட மாட்டார்கள் எனவும் கூறி அவளை எச்சரிக்கிறார்கள். அவள் சலனமுறுவதாயில்லை. அவளது பயணம் தொடர்கிறது. மீண்டும் வேகமாக சைக்கிள் மிதித்து எல்லோருக்கும் முன்பதாகப் பயணிக்கிறாள்.
தூரத்தே வழியில் குறுக்காக நின்று கொண்டிருக்கும் இரண்டு குதிரைகளையும், அவளது சகோதரர்களையும் கண்டதும் சைக்கிளின் வேகத்தை மட்டுப்படுத்துகிறாள். அவளைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பெண் அவளைத் தாண்டிச் செல்கிறாள். அந்தப் பெண் திரும்பிப் பார்க்கும்போது தூரத்தே அஹூவையும் அவளது சைக்கிளையும் அந்த ஆண்கள் தாக்குவதும், சேதப்படுத்துவதும் தெரிகிறது.
*********
ஹூரா -
விமான நிலையத்தில் ஏழைச் சிறுவர்கள் தள்ளுவண்டிகளோடு அமர்ந்திருக்கிறார்கள். விமானங்களில் வரும் பயணிகளது பொதிகளை அவர்கள் கூறும் இடங்களுக்குக் கொண்டு சென்று கொடுப்பது அவர்களது வேலை. ஒரு விமானம் வருகிறது. எல்லாச் சிறுவர்களும் வாயிலுக்குப் பயணிக்கிறார்கள். ஒரு சிறுவன் ஒரு மூதாட்டியைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளி வருகிறான். ஹூரா எனப் பெயர் கொண்ட அம் மூதாட்டியின் கைவிரல்கள் ஒவ்வொன்றிலும் வித விதமான வர்ணங்களில் துணித் துண்டுகள் மோதிரங்கள் போல அணிவிக்கப்பட்டிருக்கின்றன.
அவளை எங்கே கூட்டிச் செல்ல வேண்டுமெனச் சிறுவன் கேட்டதும் தனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டியிருப்பதாகக் கூறி கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்கிறாள். தான் வாங்க வேண்டிய பொருட்கள் ஒவ்வொன்றையும் நினைவில் வைத்துக் கொள்வதற்காக தான் ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு நிறத் துணியை அணிந்திருப்பதாகவும், பொருட்களை வாங்கிய பிற்பாடு அவற்றை அகற்றி விடுவதாகவும் கூறுகிறாள். அவனைக் கூட்டிக் கொண்டு சென்று குளிர்சாதனப்பெட்டி, தளபாடங்கள், சமையலறைப் பொருட்கள், மணப் பெண் ஆடை, ஒப்பனை சாதனங்கள், குளியலறைப் பொருட்கள், துணி கழுவும் இயந்திரம், மேசை, கதிரைகள் என எல்லாமும் வாங்குகிறாள். இவ்வளவு பொருட்களும் வாங்க மூதாட்டிக்குப் பணம் ஏது எனக் கேட்கும் சிறுவர்களுக்கு அவள் பதிலளிப்பதில்லை.
அந்தச் சிறுவன் அவளைத் தன் தள்ளுவண்டியில் அமர்த்தித் தள்ளிக் கொண்டு வர, ஏனைய சிறுவர்கள் அவளை அப் பொருட்களை ஏற்றிய தம் தள்ளுவண்டிகளோடு பின் தொடர்கிறார்கள். அவளுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கியாகிவிட்டது. அவளது சுண்டு விரலில் மட்டும் ஒரு துணி மிஞ்சுகிறது. அது எந்தப் பொருளை ஞாபகப்படுத்த வேண்டிக் கட்டியது என அவளுக்கு மறந்துவிட்டிருக்கிறது. சிறுவர்களிடம் கேட்கிறாள். அவர்களுக்கும் தெரியவில்லை. கடற்கரைக்கு அப்பாலுள்ள பிரதேசத்துக்கு தான் செல்லவேண்டுமெனக் கூறும் மூதாட்டியை சிறுவர்கள் கடற்கரைக்குக் கூட்டி வருகிறார்கள். அங்கு அவளது பொருட்கள் எல்லாம் பரத்தி வைக்கப்படுகின்றன.
மூதாட்டி ஹூரா தனக்கு தேநீர் ஊற்றித் தரும்படி ஒரு சிறுவனைக் கோருகிறாள். அவன் தேநீர் ஊற்ற முற்படும்போது, அப் பாத்திரத்தைக் கண்டு அது சரியில்லை எனவும், அதனை மாற்றி வர வேண்டுமெனவும் கூறும் மூதாட்டி திரும்பவும் அவனை அழைத்துக் கொண்டு கடைக்கு வருகிறாள். மூதாட்டி கடற்கரையை விட்டு அகன்றதும், சிறுவர்கள் கூத்தாடுகிறார்கள். சத்தமாக வானொலியை ஒலிக்கச் செய்து, சலவை இயந்திரத்தில் துணிகளைக் கழுவி உலர்த்தியெடுத்து, கட்டிலில் உருண்டு, ஒப்பனை சாதனங்களைப் பூசி அழகுபடுத்திப் பார்த்து, மணப்பெண் உடையை உடுத்திப் பார்த்து விளையாடி என இஷ்டம் போல அப் பொருட்களை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கடைக்குச் செல்லும் மூதாட்டி திரும்பி வரும் வழியில், இந்தப் பொருட்களையெல்லாம் அனுபவிக்க தனக்குப் பிள்ளைகள் இல்லையெனவும், அவனை மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளட்டுமா எனவும் கேட்கிறாள். அவனுக்குப் பெற்றோர்கள் இருப்பதாகக் கூறி அவன் மறுத்துவிடுகிறான். அவள் திரும்பவும் கடற்கரைக்கு வருவதைக் கண்ட சிறுவர்கள், சாமான்களையெல்லாம் மீண்டும் ஒழுங்காக வைத்து விடுகிறார்கள். மூதாட்டி வந்து புதிய தேநீர்ப் பாத்திரத்தில் தேநீர் ஊற்றித் தரும்படி இன்னுமொரு சிறுவனைப் பணிக்கிறாள். அவனிடமும் தனது மகனாக அவனைத் தத்தெடுத்துக் கொள்ளட்டுமா எனக் கேட்கிறாள். தனக்குப் பெற்றோர்கள் இருப்பதாகக் கூறி அவனும் மறுத்து விடுகிறான்.
வீட்டுப்பாவனைப் பொருட்கள் எல்லாம் கடற்கரையில் பரத்தப்பட்டிருப்பதைக் காணும் இளம்பெண்கள் இருவர், மூதாட்டியிடம் வந்து விசாரிக்கிறார்கள். ஒரு பெண்ணாக, தான் சிறு வயது முதல் அனுபவிக்க வேண்டுமென ஆசைப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும், தான் இவ்வளவு காலமும் சேமித்த பணத்திலிருந்து இன்று வாங்கியிருப்பதாகக் கூறும் மூதாட்டியிடம், இவ்வாறான பொருட்கள் தமக்கு இருந்தால், தாமும் மணம் முடித்து குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்திருப்போம் என அந்த இளம்பெண்கள் கூறுகிறார்கள். மூதாட்டி அவர்களுக்கு தேநீர்ப் பாத்திரங்களைப் பரிசளிக்கிறாள்.
பின்னர் பல சிறு பாய்மரக்கப்பல்களில் அப் பொருட்களையும் மூதாட்டியையும் சிறுவர்கள் ஏற்றிவிடுகிறார்கள். மூதாட்டியோடு, அப் பொருட்களும் கடலின் ஆழத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டேயிருக்கின்றன.
*********
மேற்சொன்ன மூன்று கதைகளும் ஒரு ஈரான் திரைப்படத்திலுள்ளவை. மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு முழுத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அவ்வாறு உருவாக்கியவர் பெண் இயக்குனர் மர்ஸியா மெக்மல்பஃப். ஹவா, அஹூ, ஹூரா என ஒன்றோடொன்று தொடர்புபட்ட பெயர்களுடைய மூன்று வெவ்வேறான வயதுகளுடைய பெண்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு இந் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளிவந்து பல உலக விருதுகளை வென்ற திரைப்படம் இது. ஈரானிய சட்ட திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் அடங்கிப் போக நிர்ப்பந்திக்கப்படும் ஒரு பெண்ணின் மூன்று முக்கியமான கால கட்டங்களைச் சித்தரிக்கும் இத் திரைப்படத்தின் பெயர் The Day I Became a Woman (நான் பெண்ணான நாள்).
பெண்ணானவள் சிறு பிராயத்திலிருந்து பழி பாவங்களுக்கு அஞ்சப்பட வேண்டியவளாகிறாள். அவளது பார்வை தாழ்த்தப்பட வேண்டியிருக்கிறது. அழகும், அலங்காரங்களும் மறைக்கப்பட வேண்டியன. பெண்ணாகப் பிறந்த கணம் முதல் அவளுக்குள் இருக்கும் இயல்பான திறமை முதற்கொண்டு சடப் பொருட்களின் மீதான ஆசைகள் கூட பூர்த்தி செய்யப்படுவதில்லை. அவள் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டியவளாகிறாள். அவற்றை மீறினால் தண்டிக்கப்பட வேண்டிவள். சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையோ, தானாக எதையும் செய்யும் உரிமையோ அவளுக்கு இல்லை. தேவையான போது அலங்கரித்துப் பார்க்கப்படும் பொம்மை அவள். அவளைத் தீண்டினால் தீட்டு. அவள் வாழ்நாள் முழுவதற்குமான அடிமை.
இந்தக் கோட்பாடுகள் ஈரானுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எல்லா நாடுகளிலும், எல்லாச் சமூகப் பெண்களினதும் நிலைப்பாடு இதுதான். எழுத்தாளர் அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', 'வெளிப்பாடு' ஆகிய சிறுகதைகள் இந் நிலைமையைத் தெளிவாக விளக்குகின்றன.
பதினான்கு வயது ஜீஜிக்கு திருமணம் செய்து வைக்கப்படும்போது அவளது தாயாரால் இவ்வாறு அவளுக்கு போதிக்கப்படுகிறது.
'சமையலறையை ஆக்கிரமித்துக் கொள். அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே... இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம்...'
ஒரு பெரிய குடும்பத்துக்கு மருமகளாகி பல தசாப்தங்களாக சமையலறையை ஆண்ட இந்த ஜீஜி, முதியவளாகி படுக்கையில் கிடக்கும்போது அவளது காதில் 'அதிகாரம் அதிலிருந்து வருவதில்லை' என மருமகள் மீனாட்சி விளக்குகிறாள். அங்கிருந்து தொடங்கி பல தலைமுறைகள், பல வருடங்கள் கடந்து 'வெளிப்பாடு' சிறுகதையில் வரும் இளம்பெண் சந்திராவுக்கும் இதே சமையலறை அடிமை நிலைமைதான் எனும்போது இந் நிலைப்பாடு இன்றும் கூட மாறவில்லை என்பதே புலனாகிறது.
பெண்கள் எங்கு பயணப்பட்டாலும், வீட்டின் மூலையிலுள்ள சமையலறையைப் பற்றியும், செய்யப்பட வேண்டிய சமையல் பற்றியுமே அவர்களது சிந்தனைகள் சுழன்றபடியிருக்கும். அவர்கள் வெங்காயத்தையும், பூண்டு வாசனையையும், மசாலாக்களையும் சுவாசித்துக் கொண்டே இருக்கக் கடமைப்பட்டவர்கள். இன்னும் குழந்தைகளைப் பிரசவிப்பதிலும், அவர்களது அழுக்கு கழுவி வளர்த்து ஆளாக்குவதிலும் பாடுபட்டு உழைக்க வேண்டியவர்கள். சுய சிந்தனையற்றவர்கள். அவர்கள் பெண்கள். இவ்வாறாக அவர்கள் மீது வலிந்து போர்த்தப்பட்டுள்ள இந் நிலைமையானது ஈரானிலும் ஒன்றுதான். நம் நாடுகளிலும் ஒன்றுதான்.
நம் நாடுகளிலாவது பரவாயில்லை எனும்படியாக, ஈரான் மற்றும் அறபு நாடுகளில் பெண்களின் மீது ஒழுக்கத்தின் பெயரால் திணிக்கப்படும் வன்முறைகள் அதிகமானவை. திரைப்படங்கள் என்று வரும்போது ஈரானை இங்கு குறிப்பாக எடுத்துக் காட்டவேண்டியது ஏனெனில், அங்கு பெண்களும் தரமான படங்களையெடுத்து உலகத்துக்கு வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். தாம் சார்ந்திருக்கும் சமூகம் தரும் அழுத்தங்களும், தமக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், தம் திரைப்படங்களின் மீதான தணிக்கைகளும் அவர்களது முயற்சிகளை நிறுத்துவதாக இல்லை.
திரைப்படத்துக்கு அவசியமாயினும் கூட ஆண்-பெண் ஒருவரையொருவர் தொட்டு நடிக்கக் கூடாது. திரையில் வரும் பெண்கள் தமது முகம், கைகள் தவிர்த்து, தம்மை முழுமையாகப் போர்த்தியவாறு நடிக்க வேண்டும். அரசாங்கத்தையோ, மதத்தையோ நிந்தனை செய்யும் வசனங்களை எவரும் பேசக் கூடாது. திரைப்படங்களில் வரும் மனிதர்களோ, காட்சிகளோ வன்முறைகளைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் ஈரானியத் திரைப்படங்களுக்கு பொதுவாக விதிக்கப்பட்டுள்ளவை. இக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, யதார்த்தமான படங்களையெடுத்து உலக விருதுகளை வென்றெடுப்பதென்பது சாதாரணமான ஒரு விடயமல்ல.
இவ்வாறாக அடக்குமுறைக்கும், தணிக்கைக்கும் ஆளாகிக் கொண்டேயிருக்கும் மண்ணிலிருந்து கொண்டு, தொடர்ச்சியாகத் தமக்கு இழைக்கப்படும் அநீதங்களை திரைப்படங்கள் மூலமாக உலகுக்குச் சொல்வது மிகவும் பாராட்டத்தக்கது. The Day I Became a Woman (நான் பெண்ணான நாள்) எனும் இத் திரைப்படமும் கூட வழமை போலவே ஈரானில் தடை செய்யப்பட்டது. ஈரானைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மூன்று முக்கியமான பருவங்களிலும், அவள் எப்படி அடுத்தவருக்குக் கட்டுப்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளாள் என்பதைச் சித்தரிப்பதாக இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே ஈரானியத் திரைப்படங்கள் மென்மையானவை. ஆனால் மனிதனுக்குள் உறங்கும் மனிதாபிமான உணர்வுகளை வெளிக் கொண்டு வருபவை. அங்குள்ள மனிதர்கள் படும் வேதனையை மனித நேய உணர்வுகள் மூலமாக முழு உலகுக்குமே சொல்பவை. The Day I Became a Woman (நான் பெண்ணான நாள்) எனும் இத் திரைப்படத்தின் இயக்குனர் மர்ஸியா மெக்மல்பஃப்பின் முதல் திரைப்படம் இது. அதற்கு முன்பதாக ஒளிப்பதிவாளராகவும், எழுத்தாளராகவும் ஈரானியத் திரையுலகில் அறியப்பட்டவர். இத் திரைப்படத்துக்கான திரைக்கதையை இவரது கணவரான இயக்குனர் மூஸின் மெக்மல்பஃப் எழுதிக் கொடுத்தார்.
மர்ஸியா மெக்மல்பஃப்பின் திரைப்படங்களைப் போலவே கணவரும், இயக்குனருமான மூஸின் மெக்மல்பஃப்பின் அனைத்துத் திரைப்படங்களும், இவர்களது புதல்விகளான ஸமீரா மெக்மல்பஃப், ஹனா மெக்மல்பஃப் ஆகியோரது திரைப்படங்களும் கூட பெண்கள் மீதான வன்முறைகளையும், அவர்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளையும் பற்றியே அதிகம் பேசுகின்றன. தாலிபானின் அடிப்படைவாதக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் முழு சமூகத்தையும் அடிமைப்படுத்திய அண்மைய காலத்தைக் குறித்து அந் நிலத்திலிருந்தே இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருவதானது பாராட்டத்தக்க அதேவேளை சம்பந்தப்பட்ட படைப்பாளிகளுக்கு ஆபத்தானவை.
The Day I Became a Woman (நான் பெண்ணான நாள்) எனும் இத் திரைப்படமானது, உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான அனைத்துத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, பல உலக விருதுகளை வென்ற திரைப்படம் ஆகும். இவ்வாறாக உலக மக்கள் அனைவருக்குமே, அடிப்படைவாத அமைப்புக்குள் சிக்குண்டுள்ள ஒரு சமூகம் படும் அவதிகளை வெளிப்படையாகச் சொன்ன, குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படமாக இதனைக் கோடிட்டுக் காட்டலாம். எனினும், இதனை வெளிப்படுத்திய பெண் இயக்குனரும், அவரது புதல்விகளும், இன்றும் கூட அம் மண்ணில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இத் திரைப்படம் கூட ஈரானில் திரையிட அனுமதிக்கப்படவேயில்லை. இதன் மூலமாகத் தெரியவருவது ஒன்றே ஒன்றுதான். தாலிபான்களும், பெண்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைகளும் முற்றிலும் ஓய்ந்துவிடவில்லை. இம் மண்ணில் அவர்கள் தம் அடிப்படைவாதக் கொள்கைகளோடு இன்னும் உலவிக் கொண்டேயிருக்கிறார்கள்.
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - படச்சுருள் இதழ், பெண்ணியம், ஊடறு, பதிவுகள், வல்லமை
by M.RISHAN SHAREEF
http://mrishans.blogspot.in
No comments:
Post a Comment