Monday, March 13, 2017

விடைபெறுதல் #நிஷாமன்சூர்

என் வலிகள் வீர்யமிக்கவை;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.
என் காயங்களின் தழும்புகள் மறைக்கமுடியாதவை;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.
என் வழித்தடம் கரடுமுரடானது;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.
உங்கள் இரக்கப்பார்வை பொறாமைப்பார்வையாக
மாற்றம்கொள்ளும் தருணம் கொடுமையானது;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

அகற்றவே இயலாதது என் சுய இரக்கத்தின் முட்போர்வை.
சுருக்கவே முடியாதது என் தனிமை இரவுகளின் நீளம்.
தவிர்க்கவே இயலாதது என் இருப்பின் உறுத்தல்.
எனினும் அடைக்கலமாகிறேன்,
என் நேசமிக்க உறவுகளின் அண்மையின் பாசக்கரங்களுக்குள்.
வறுமை நெரித்ததென் பால்யத்தின் குரல்வளையை.
செழிப்பும் நேசமும் அங்கீகாரமும் மலர்ந்ததென்
இளமையின் வசந்தகாலத்தில்.
பிணியின் நெருக்கடிகள் இறுக்கியதென்
இளமையின் உச்சத்தை.
உங்கள் பொறாமைப்பார்வை இரக்கப்பார்வையாக
மாற்றம் கொள்ளும் தருணத்தை
என்னால் எதிர்கொள்ளவே இயலாதென்பதால்
விடைபெறுகிறேன்,
யாரைக்குறித்தும் எந்த பழிவாங்குதல்களுமில்லை
யாரைக்குறித்தும் எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.
யாரைக்குறித்தும் எந்த மனஸ்தாபங்களுமில்லை.!

#நிழலில்  படரும் இருள் தொகுப்பின் கடைசிக்கவிதை

நிஷா மன்சூர்

No comments: