முகனூலில் முதன்முதலில் அங்கீகாரம் தேடித்தந்த பதிவு. 2014 இதே நாள்.
சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலைந்தேன். சராசரியாக தேடல் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. அனைத்து ஏரியா புரோக்கர்களும் எனக்கு அத்துப்பிடி ஆகி விட்டது.
கழுத்தை நெரிக்கும் வேலை இருந்தாலும், "நீங்க கேட்ட மாதிரி 2,3 வீடு வந்திருக்குது,இப்போ வந்தா பார்க்கலாம் சார்" னு புரோக்கர் குரல் போனில் ஒலித்த உடன், அரை மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பே அவர் சொன்ன இடத்தில் நிற்பேன்.
அவர், தன் சைக்கிளையோ,பைக்கையோ நிறுத்தி விட்டு என் பைக்கில் ஏறி அண்ணா சாலையில் நிற்கும் அறிஞர் அண்ணா விரல் காட்டுவது போல "லெஃப்ட் சார்,ரைட் சார்" என்று எனக்கு வழி சொல்லி கடைசியாக ஏதாவது வீட்டின் முன் நிறுத்த சொல்லுவார்.
இதில் பல பேர் மிக்சிங்கே இல்லாமல் ராவாக சாத்தி விட்டு வந்து வண்டியின் பின்னால் அமர்ந்து கொண்டு எனது முகத்தில் எச்சில் தெறிக்க "போன வாரம் வந்திருக்க வேண்டியது தானே சார். சூப்பர் வீடு,டபுள் பெட் ரூம்,கார் பார்க்கிங்கோட, பதினாலுக்கு தான் முடிச்சேன்" னு சுயசாதனை விளக்கங்களை சொல்லும் பொழுது, அந்த மதுவின் நெடி மூக்கின் இரு துவாரங்களிலும் அனுமதி இன்றி நுழைந்து மூச்சுக்குழாய் மூலமாக இதயத்தை சென்றடைந்து,இரத்ததில் உள்ள ஆக்ஸிசனுடன் கலந்து , லப்பு டப்பு என பம்ப் அடித்து அசுர வேகத்தில் மூளையை சென்று "சுளிர்" என்று தாக்கும்.
அடுத்த வினாடியே சிறு குடல், பெரு குடல் என்று பாராபட்சம் பாராமால் சப்த ஸ்வரங்களுடன் சகலமும் புரட்டிக்கொண்டு வாய் வழியாக வெளி உலகை பார்க்க எத்தனிக்கும் பொழுது, தொண்டையை கடக்கும் முன்பே உடம்பில் இருக்கும் அனைத்து சக்தியையும் திரட்டி வெளி வராமல் தடுத்து சாகசம் புரிந்து செல்ல வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி வீடை சுற்றி பார்த்து நிறை குறைகளை அளந்து, டிவி எங்கே வைப்பது, ஃப்ரிஜ் எங்கே வைப்பது, வாஷிங் மெஷின் எங்கே வைப்பது என மனதிற்குள்ளேயே இன்டிரியர் டெகரேஷன் செய்து , "வாடகை எவ்வளவுங்க" என்று கேட்கும் பொழுது, நம் பட்ஜெட்டை விட கண்டிப்பாக இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் அதிகமாக சொல்லி 16வயதினிலே கமல் முகத்தை போல ஆக்கி விடுவார்கள் நமக்கு. ஆறுதலாக, "பேசி பார்க்கலாம் சார், பேசி 1000,2000 குறைக்கலாம்" என்று சொல்லும் பொழுது நம்பிக்கை மீண்டும் நங்கூரமிடும்.
கீழ்வீட்டிலோ,மேல்வீட்டிலோ இருக்கும் ஹவுஸ் ஓனரை பார்க்க அழைத்து செல்வார்கள். பெரிய கம்பனிக்கு இண்டர்வ்யூ போவது போல் டென்சன் இருக்கும். அவிழ்ந்து கிடக்கும் சட்டையின் மேல் பொத்தானை போட்டு கொள்வேன். புரோக்கர் அழைப்பு மணியை அடித்து விட்டு உள்ளிருந்து வரும் "யாரு" என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு பின்னால் நிற்கும் என்னை பார்த்து "இந்தா வராங்க சார்" என்று ஆசுவாச படுத்துவார். எனக்கு சற்று படபடப்பாய் தான் இருக்கும்.
கதவு திறக்கப்பட்டு கதவிற்கும் , உள்ளுக்கும் இடையில் நின்று கொண்டு(நம்மையும் உள்ளே அழைக்க மாட்டார்கள்,அவர்களும் வெளியே வர மாட்டார்கள்) "சொல்லுங்க" என்று புரோக்கரை வினவ, அவர் என்னை காட்டி "சார், ஃபோன் கம்பனில வேலை செய்யிறாரு, ரெண்டு பேரு தான், ஹஸ்பண்டும் வொய்ஃபும்" என்று என்னை அறிமுகப்படுத்த ஹவுஸ் ஓனரின் பார்வை என் பக்கம் திரும்பும்.
அப்பொழுது நான் ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் சந்திரன் ரேஞ்சிற்கு பவ்யமாக "வணக்கம் சார்" என்பேன். அதற்கு சில பேர் தலை அசைப்பதோடு சரி. மற்றும் சில பேரின் "வண" மட்டும் தான் காதில் விழும்.
அவர்கள் என்னை ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் இந்திரனை பார்ப்பது போல் மேலிருந்து கீழ் வரை ஏற இறங்க பார்த்து விட்டு தொடுக்கும் முதல் கேள்வி,
" என்ன ஆளுங்க சார் நீங்க, தமிழ் ஆளுங்களா?"
"ஆமாம்,நான் தமிழ் தான்" என்று நான் பதிலளிப்பதற்குள், புரோக்கர் "இல்லங்க, முஸ்லீம் ஆளுங்க" என்று பதிலளிப்பார்.
அதற்கு ஹவுஸ் ஓனர், "சாரிங்க, நாங்க தமிழ் ஆளுங்களுக்கு தான் வீடு தருவோம்" என்று சட்டென்று சொல்லும் பொழுது அழுகை மடை திறந்த வெள்ளம் போல் குபீரென பீறிட்டு பொங்கும். அதை அடக்கி கொண்டு "சரிங்க சார், பரவாயில்லை" என்று சொல்லி உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்.
அவர்கள் வீடு தரவில்லை என்று சொல்வதில் வருத்தம் இல்லை. இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுப்பதில்லை என்ற அவர்கள் கொள்கையிலும் பெரிய கோபமில்லை. நான் தமிழன் என்ற பெருமையை, அடையாளத்தை என்னிடம் இருந்து பறிக்கிறார்கள் என்பதை என்னால் சத்தியமாக தாங்கி கொள்ள முடியவில்லை.
எங்களை தீவிரவாதி என்று கூறும் பொழுது கூட கோபம் தான் வந்தது. ஆனால், தமிழனில்லை என்று சொல்லும் பொழுது அழுகை தான் வருகிறது.
என்னுடைய வலி நியாயமானது. குரான் படிக்கும் பொழுதே பாரதியின் கவிதைகளையும் படித்தவன் நான்.
முகமது நபி(ஸல்)யை பற்றி அறிந்து கொண்டே ஒளவையாரின் ஆத்திச்சூடியை என் வீட்டின் சுவற்றில் கிறுக்கியவன் நான்.
பாரதியின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே , இன்ப தேன் வந்து பாயுது காதினிலே" என்று பாடி பள்ளியில் பரிசு வாங்கிய போது ஒரு முண்டாசு கட்டிய தமிழனாய் உணர்ந்து அகமகிழ்ந்தவன் நான்.
ஆனால், இன்று நான் தமிழனில்லை என்கிறார்கள். எப்பொழுது பிரித்தார்கள் இவர்கள் எங்களை இந்த தமிழ் சமூகத்திலிருந்து?
நான் பேசிய முதல் வார்த்தை "அம்மா"வில் இருந்தே தமிழன் என்ற அந்தஸ்தை பெற்று விட்டேன். அது ஆறடி குழியில் அடங்கும் வரை மாறாது. தயவு செய்து மாற்ற நினைக்காதீர்கள்.
மற்றும் பலர் இஸ்லாமியர்களை "அரேபிய வந்தேரிகள்" என்கிறார்கள்.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.
மதுரை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பெரியகுளம் என்ற தமிழ் கலாச்சாரம் நிறைந்த ஊரில் ஆடி மாதம் அதிகாலை பொழுதில் மொட்டை மாடியில் படிக்கும் பொழுது, அருகிலுள்ள மாரியம்மன் கோவிலின் "செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா" பாடலையும், மசூதியிலிருந்து வரும் "அல்லாஹ் அக்பர்" என்ற தொழுகை அழைப்பையும் இரண்டெற கலந்து படித்து வளர்ந்த எனக்கும் அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம் என எனக்கு புரியவில்லை.
என்னை போல் எத்தனை முகமதுகள், அப்துல்லாக்கள், இபுறாகீம்கள் இந்த தாய் மண்ணிலிருந்து உணர்வு ரீதியாக ஒதுக்கப்படுகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான இறுதி நிமிடங்களில் "இறைவா, இந்தியா எப்படியாவது ஜெயிச்சிடனும்" என்று வேண்டிக்கொண்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு உக்கார்ந்திருந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்களில் நானும் ஒருவன்.
என் நெருங்கிய நண்பனிடமே சில சமயங்கள் சூடான தர்க்கங்கள் நடக்கும் பொழுது "முதல்ல நீங்கலாம் நாட்டை விட்டு போங்கடா" என்று விளையாட்டாக அவன் சொல்லும் பொழுது உயிரை சடக்கென்று பிடிங்கியது போல வலிக்கும்.
தண்ணீரிலிருந்து பிரித்து தரையில் எரியப்பட்ட மீனை போல மனம் கிடந்து துடிக்கும்.
தாயின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை பிரித்தது போல் மனம் பதபதைக்கும்.
எங்களை இந்த மண்ணிலிருந்தும் , கலாச்சாரத்திலிருந்தும் பிரித்து எடுத்து வைத்து விட நினைக்காதீர்கள்.
அது சாத்தியமும் இல்லை. அதற்கான உரிமையும் யாருக்குமில்லை.
"என் நாடு. என் தேசம். என் மக்கள்"
#வலிகள்
ராஜா முகமது சீன தேசத்திலிருந்து
No comments:
Post a Comment