எனக்குத் தெரிந்து, பல வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து திரவியம் தேடி உகாண்டாவுக்கு வந்தனர் இரு சகோதரர்கள். இருவரில் ஒருவர் பணிசெய்துவந்தார் மற்றொருவர் வியாபாரம் செய்யவேண்டுமென முனைப்பாக இருந்து முட்டிமோதி எப்படியோ ஒரு சிறு வியாபாரத்தை ஒரு சிறு நகரத்தில் தொடங்கி மிகவும் கண்ணும் கருத்துமாக நடத்தி முன்னேற்றமும் கண்டுவந்த தருணத்தில் இடிபோல ஒரு சம்பவம் அவர் தலைமேல் விழுந்தது.
விற்பனை விநியோகத்திற்கு சென்ற அவரது வாகனம் பொருள்களோடு கொள்ளையடிக்கப்பட்டு அத்தனையும் இழந்து சரக்கு வாங்கிய நிறுவனங்களின் கடனாளியாகிப்போனார்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருள் திரும்பக் கிடைப்பது உலகின் எந்த மூலையிலும் குதிரைக் கொம்புதான் உகாண்டாவில் கேட்கவே வேண்டாம்.
இந்நிலையில் வியாபாரத்தை மேற்கொண்டு நடத்த நிதி இல்லாததால் அவரும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்து அதில் வந்ததைக் கொண்டு நிறுவனங்களில் பட்டிருந்த கடன்களை கொஞ்சம்கொஞ்சமாக அடைத்து தீர்த்து விட்டுத்தான் மனுஷன் மூச்சேவிட்டார். ஏமாற்றுவதே தொழிலாக கொண்டவர்கள் நிறைந்திருக்கும் இந்நாட்களில் இவரைபோன்றவர்களை காண்பது மிகவும் அரிது.
அவருக்கு கால அவதிகள் கொடுத்து அழுத்தம் கொடுக்காத பொருட்களை கடன் கொடுத்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் நானிருந்தேன்.
நேற்று தற்செயலாக அவரை கம்பாலா நகரின் முக்கிய வணிக சாலையில் காண நேர்ந்தது. கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்வு கொண்டோம். வற்புறுத்தி பக்கத்திலிருந்த அவரது வியாபார ஸ்தலத்திற்கு அழைத்துச்சென்றார். இறையருளால் நல்ல முன்னேற்றம் என்பது அவர் சரக்கு அரங்குகளை திறந்து காண்பித்ததும் தெரியவந்தது.
நல்ல பழக்கம் அவருடன் இருந்ததால் தேநீர் அருந்திக்கொண்டே கேட்டேன் எப்படி இப்படி என்று நேரடியாகவே கேட்டேன் .
அவர் சொன்னது பல சமூகத்தினராலும் சில ஊர்காரர்களாலும் செய்யப்படுவதுதான். அதாவது அவர்களது சமூக அமைப்பால் வட்டியோ எந்தவிதமான காப்பீடோ இல்லாமல் கொடுக்கப்பட்ட கடனைக்கொண்டு வியாபாரத்தை இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்து ம் இறக்குமதி செய்த பொருட்களை விருத்தியாக வியாபாரம் செய்து நல்ல முன்னேற்றம்கண்டு வளமாக்க வாழ்கிறார்.
படிப்பினை:
நம்பிக்கையுடன் நாணயமாக கடின உழைப்பும் சார்ந்தோர் ஆதரவும் சேரும்போது கஷ்டநஷ்டங்கள் நீண்டகாலம் நீடிப்பதில்லை.
பாகம் 4.
தொடரலாம்.
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment