Saturday, March 18, 2017
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தந்த பேட்டி ....
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தந்த பேட்டி தன்னுடைய வாழ்க்கையை தலைகீழாக திருப்பிப்போடும் என்று லிஸி வெலாஸ்குவெஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பிரபல விடியோ வளையமான யூட்யூப் இணையத்தளத்தில் ”உலகின் குரூரமான பெண்” என்ற தலைப்பின் கீழ் அவருடைய பேட்டி வெளியிடப்பட்டிருந்தது மட்டுமல்லாமல், மிருகம் போன்ற அவதூறான வார்த்தைகள் கொண்டு லிஸியை வர்ணித்தும் இருந்தனர். கிட்டத்தட்ட 4 கோடி மக்களால் பார்க்கப்பட்டிருந்த வீடியோவின் கீழ் சிலர், ”உலகத்திற்கு நீ செய்யக்கூடிய ஒரே உதவி இது தான், ஒரு துப்பாக்கியை கொண்டு உன்னை நீயே சுட்டுக்கொள்.” என்றும் கமெண்ட்களை தெளித்திருந்தனர்.
ஒரு கொடிய மற்றும் அரிய வகையான நோயின் காரணமாக லிஸியின் உடல் எடை சாதாரண நபரை போல இருக்காது. இவரைத் தவிர, உலகத்தில் இன்னும் இரண்டே பேருக்கு மட்டுமே இத்தகைய அரிய நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. லிஸியின் உடம்பில் கொழுப்பு இல்லாதது மட்டுமல்லாமல், உடலில் தேவையான கொழுப்பும் சேராது என்பது குறிப்பிடத்தக்கது. லிஸி தன் உடலில் இதுவரை அதிகப்படியாக, 29 கிலோ எடை மட்டுமே பெற்றுள்ளார். தன்னுடைய உடலில் போதியளவு சக்தி இருக்க 15 நிமிடங்களுக்கு ஒருமுறை லிஸி உண்பது அவசியமாகிறது. அதுமட்டுமல்லாமல், வலது கண்ணில் பார்வை குறைப்பாடும் இவருக்கு உண்டு. மற்றவர்கள் இதை ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்வார்கள், ஆனால் லிஸி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சிரிப்புடன், “என்னால் எடை கூடாமல் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட முடியும்.” என்று ஜோக் அடித்துக்கொள்வார். இது தனக்கு ஒரு விதத்தில், ஆசிர்வாதம் கூட என்று லிஸி கருதுவதுண்டு.
லிஸி பிறந்தவுடனேயே அவரால், தானாக தவழவோ, நடக்கவோ, மற்ற எந்த காரியங்களையும் செய்யவோ இயலாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால், அவருடைய பெற்றோர்கள் சோர்வடையாமல் லிஸியின் நல்ல குணங்களை போற்றி வளர்த்தனர். இந்த விடா முயற்சியையும், போராடும் குணத்தையும் வளர்த்தது தன்னுடைய அம்மா தான் என்று லிஸி சொல்லுவதுமுண்டு. முதல் முறையாக பள்ளிக்கு சென்றபோது, பெரிய புத்தகப்பையோடு தன்னை பார்க்க ஒரு ஆமை போல இருந்தது என்று லிஸி நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். தவிர, தன்னோடு யாரும் பேசாமல் அப்போது தனிமைப்படுத்தியதையும் நினைவுக்கூர்ந்தார் லிஸி.
மற்ற குழந்தைகளை விட வித்தியாசமாக தன்னிடம் என்ன இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள லிஸி ஒருமுறை அவரது பெற்றோர்களிடம் கேட்டார். அதற்கு, “நீ மற்றவர்களை விட சிறியதாகவும், வித்தியாசமான நோயுடன் இருப்பது உண்மையே. ஆனால், நீ யார் என்பதை விளக்குவது அந்த உடல் உபாதை அல்ல. பள்ளிக்குச் சென்று தலை நிமிர்ந்து நீ நீயாக இருப்பதே உன்னுடைய சிறப்பு.” என்று தன்னம்பிக்கை விதையை விதைத்தனர்.
என்னுடைய வெளிப்புற தோற்றம் தான் எனக்கான அடையாளம் என்று நான் எண்ணியதுண்டு. நான் அழகில்லை என்பதையும் பல முறை சிந்தித்திருக்கிறேன். அந்த சமயத்தின் போது, தினமும் காலை எழுந்து கண்ணாடியில் என்னுடைய முகத்தை பார்ப்பதற்கே பிடிக்காமல் போனதும் உண்டு. ஆனால், என்னுடைய உண்மையான ஸ்வரூபம் எதுவென்று மெதுவாகத் தான் புலப்பட்டது. என்னுடைய வாழ்க்கையை என் கையில் எடுத்து நல்லதாகவும் சரி, கெட்டதாகவும் சரி மாற்றிக்கொள்வது என்னிடம் மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்தேன். என்னுடைய குறிக்கோள், வெற்றி மற்றும் சாதனைகளே என்னைப்பற்றி விளக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ள லிஸி, இப்போது ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. லிஸியின் முதல் புத்தகமான ‘லிஸி ப்யூட்டிஃபுல்’ லில் வெளிப்புற தோற்றத்திற்கு சமூகம் தரும் முக்கியத்துவமும் அதனால், தான் சந்தித்த இன்னல்களையும் விவரிக்கிறார். தவிர, லிஸி குழந்தையாக இருந்தபோது அவருடைய தாயார் தந்த அறிவுரைகளும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தன்னம்பிக்கையை பலருக்கும் வளர்க்கும் விதத்தில் இருக்கும் லிஸியின் முதல் புத்தகம் அதிகளவில் வரவேற்கப்பட்டுள்ளது. லிஸியின் இரண்டாவது புத்தகம் ‘பீ ப்யூட்டிஃபுல் பீ யூ’ தன்னம்பிக்கையும் சுய மரியாதையும் இழந்திருப்பவர்களுக்கு தேவையான ஆலோசனை மட்டுமல்லாமல், குறிக்கோள்களை அமைத்துக்கொள்வது, தீய எண்ண அலைகள், கேலி கிண்டல்கள் போன்றவற்றை பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
இவருடைய புத்தகத்தில் இருக்கும் முன்வாசகம் தான் இது,
“செயற்கை முறையில் அழகு மிளிரும் பிரபலமானவர்கள் மத்தியில், லிஸி வெலாஸ்குவெஸ் இயற்கையாக மாறுபட்டு இருப்பதோடு, அவரின் கதை தனிமைப்படுத்தப்பட்டவர்கள், நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஒரு புது வித ஊக்கத்தை தரும்.“
தற்போது லிஸி, கிண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு எதிராக போராடும் வகையில் ஒரு பிரத்யேக டாக்குமென்ட்ரி படத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கு சோர்வடையும் மக்களுக்கு இடையே, லிஸியின் கதை பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
யுவர்ஸ்டோரி குழு சார்பாக அவருக்கு வாழ்த்து மற்றும் அவரது இலக்கை நோக்கிய பயணத்திற்கு ஆல் தி பெஸ்ட்!
கட்டுரை ஆதித்யா பூஷன் த்வேதி | தமிழில் நித்யா
நன்றி - ஊடறு
M.rishan Shareef
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment