Thursday, November 24, 2016

உழைப்பாளிகளுக்குமரியாதை

பணம் செல்லாது என்ற கவலையோ
பேங்க் வாசல்ல நிக்கணுமே என்ற கவலையோ இல்லாமல் தேனீக்களைப்போல் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் பத்திருபது பேரை இன்று எங்கள் வீட்டு முற்றத்தில் பார்த்தேன்.
அத்தனை பேரும் ராஜஸ்தானிகள்.
புதிய டிரான்ஸ்பார்மருக்கு புதிய மின் கம்பிகளை இணைக்கும் வேலையை அநாயசயமாக செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சோர்வில்லை.
முகத்தில் வருத்தமில்லை.
வேலையில் சுணக்கமில்லை.
பெரிய மின் கர்பிகளை வெறும் கைகளால் இழுத்து முறுக்கி இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பத்து நிமிஷம் அந்த வேலையை நாம் செய்தால் நம் கைகள் கிழிந்து
ரத்தம் கொட்டும்.

காலை முதல் மாலை வரை
மின் கம்பத்தில் ஏறி ஜம்பமடித்த அந்த தொழிலாளிகளின் கடின உழைப்பு அப்படியே கண்ணில் நிற்கிறது.
போஸ்டுகளிலும்
மரங்களிலும் எந்த ஆதாரமுமின்றி சரசரவென ஏறுகிறார்கள்.
கடி எறும்புகளின் கடியை பொருட்படுத்தாமல்
பெரிய பெரிய மரக்கிளைகளை ஆக்சா பிளேடு கொண்டு சுலபமாக வெட்டிச் சாய்க்கிறார்கள்.
நாம் ஏதாவது சொன்னால் அதையும் மதித்து செய்கிறார்கள்.
மதியம் அரச மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
என்ன சாப்பிடுகிறார்கள் என்பதையும் நான் பார்த்தேன். வெறும் சோற்றில் தண்ணீர் ஊற்றி
வெங்காயத்தைக் கடித்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
அவர்கள் செய்யும் வேலைக்கு
நாலு தட்டை மட்டன் பிரியானி தின்றாலும்
உடனே ஜீரணிக்கும்.
ஆனால் அவர்கள் உண்பது வெறும் சோறு.
ஒன்றுமே செய்யாமல் நாம் உண்பது
மூன்று நேர கறிச்சோறு.
எத்தனை பெரிய முரண் என்பதை உணர்ந்து கொஞ்சம் குறுகிப் போனேன்.
வேலையெல்லாம் முடிந்து மாலையில் மின் இணைப்பு வந்தவுடன் நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அதிகம்.
இன்றைய பொழுதெல்லாம் அவர்களுடனேயே கழிந்தது.
இடையிடையே தண்ணீர் கேட்டார்கள்.
கொடுத்துக் கொண்டேயிருந்தேன்.
அரைகுறை இந்தியில் கொஞ்சம் கொஞ்சம் பேசினேன்.
சினேகமாகவே முறுவலித்தார்கள்.
மிகக் குறைந்த ஊதியத்தில் சொந்த ஊரைவிட்டு இங்கே வந்து ஒழுங்கான உறைவிடமோ
உணவோ இன்றி இவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.
இவர்களைப்போன்ற குறைந்த ஊதியம் பெறும் கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி கான்ட்ராக்டர்கள் கொழுத்த லாபம் பார்க்கிறார்கள் என்பதும் இவர்களை எதற்கெல்லாம் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் இதில் மறைந்திருக்கும் மற்றொரு அரசியல் .
எப்படியோ ...
இன்றைய தினம் ஐந்து நிமிடம் கூட ஓய்வில்லாமல் உழைப்பாளிகளோடு செலவு செய்த்தில் எனக்கு ரொம்ப ரொம்ப மனதிருப்தி.
#உழைப்பாளிகளுக்குமரியாதை

Abu Haashima



No comments: