Saturday, August 9, 2014

நட்வர் சிங் உண்மைகளின் பலம் என்ன?




”இந்தியாவுக்கு என்று தனி பாரம்பரியம் உண்டு. நம்முடைய பண்பாடு, கலாசாரம், மதிப்பீடுகள் உன்னதமானவை. ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் பிறந்து வளர்ந்த எவரும் வயதில் பெரியவர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். உதவி செய்தவர்களை எட்டி உதைக்க மாட்டார்கள். நெருக்கடியில் கூட இருந்தவர்களை ஒதுக்கி வைக்க மாட்டார்கள்.


”ஆனால் சோனியா காந்தி இது அனைத்தையும் செய்தார். இந்தியாவுக்கு வந்து இங்கே குடியேறி, மிக உயர்ந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பிறகும்கூட எந்த ஒரு இந்திய பெண்ணும் செய்ய துணியாத காரியங்களை அவர் செய்தார். இதற்கு காரணம், அவர் இன்னமும் உண்மையில் ஓர் இந்தியனாக மாறவில்லை என்பதாகவே இருக்க முடியும்”.

இப்படி சொல்லி இருக்கிறார் நட்வர் சிங். முன்னாள் அதிகாரி. அரசியல்வாதி. அமைச்சர். 40 ஆண்டுகளாக நேரு குடும்பத்தின் விசுவாசியாக தன்னை காட்டிக் கொண்டதில் பெருமை அடைந்தவர். ஒரு ஜென்ம்ம் போதாது என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்கள் என்று பல விஷயங்களை அள்ளி தெளித்து இருக்கிறார்.
உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களுடன் அலுவல் ரீதியாக அல்லது நட்பு ரீதியாக சிலருக்கு நெருக்கம் இருக்கும். அவரை பற்றியும் அவரது செயல்பாடுகள் பற்றியும் வெளியே தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும். அதையெல்லாம் பிற்காலத்தில் அம்பலப்படுத்துவது சரியா என்று ஒரு விவாதம் தொடர்ந்து நடக்கிறது. இது ஒருவகையில் நம்பிக்கை துரோகமாக கருதப் படுகிறது. அதே சமயம் அரசில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் முக்கியமான பிரச்னைகளில் எவ்வாறு முடிவு எடுத்தார்கள் என்பதை அறிந்து கொள்வது வரலாற்றை சரியாக புரிந்து கொள்ள உதவும். இதில் உண்மையே பிரதானம்.

நட்வர் சிங் சொன்னது போல இந்தியர்களுக்கு தனி குணம் உண்டு. ஒரு பொறுப்பில் இருக்கும்வரை அடக்கி வாசிப்பவர்கள், அதிலிருந்து விலகிய அல்லது ஓய்வு பெற்ற பிறகு தனது மேலதிகாரி மீது கடுமையான தாக்குதல் நடத்துவார்கள். களைத்து போன நிலையில், வேறு எவராவது அந்த பணியை செய்ய முன்வந்தால் அவருக்கு கைதட்டுவார்கள்.

அதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது.

சோனியா காந்திக்கு வக்காலத்து வாங்க வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் நமக்கு இல்லை. காங்கிரசை தூக்கி பிடிக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது. ஆனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என்பது வேறு, அந்த கட்சியிலேயே வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்து விட்டு, கடைசி காலத்தில் திடீரென ஞானோதயம் வந்த குழந்தையை போல கூக்குரல் எழுப்பி அனைவரையும் தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைக்கும் முயற்சி என்பது வேறு.

’இலங்கை தமிழர்கள் அந்த நாட்டு அரசால் புறக்கணிக்கப்பட்டு உணவுகூட கிடைக்காமல் பழி வாங்கப்படுவதாக தகவல் கிடைத்தபோது இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் தமிழர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவு பிறப்பித்தார். இவ்வாறு ஒரு ஏற்பாடு செய்யப் போகிறோம் என்று இலங்கை அரசுக்கு அவர் முன் தகவல் கொடுக்க வில்லை. இலங்கை அரசுக்கே தெரியாமல் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நாம் உணவு வழங்குவது சர்வதேச சட்டப்படி தப்பு என்று நான் எடுத்து சொன்னேன். அதற்கு ராஜீவ், ‘அந்த அரசு செய்ய தவறியதை மனிதாபிமான அடிப்படையில் நாம் செய்கிறோம். இதற்கு ஏன் அவர்களிடம் நான் அனுமதி கேட்க வேண்டும்?’ என்று கோபமாக திருப்பி கேட்டார். ‘அப்படி இல்லை. இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு உறுப்பு நாடு. தனது வான் எல்லைக்குள் தனது அனுமதி இல்லாமல் இன்னொரு நாட்டின் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக இலங்கை புகார் செய்தால், அதனால் நமக்குதான் பிரச்னை ஏற்படும்’ என்று அவருக்கு எடுத்து சொன்னேன். அதன் பிறகுதான் அவர் இலங்கை தூதரை வரவழைத்து, இன்ன காரணத்துக்காக உங்கள் மக்களுக்கு நாங்கள் உணவு கொடுக்கிறோம் என்று சொன்னார்.’

இது நட்வர் சிங் அம்பலப்படுத்தும் உண்மை. இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன? ராஜீவ் காந்தி சர்வதேச விதிமுறைகளை அறியாத பாமரன் என்கிறாரா? அல்லது, இலங்கை தமிழர்களுக்கு தேவையில்லாமல் உதவி செய்த முட்டாள் என்கிறாரா?

’இலங்கை தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரமும் உரிமைகளும் கிடைப்பதற்கான சட்ட திருத்தம் கொண்டுவர இலங்கை அரசுடன் ராஜீவ் ஒரு ஒப்பந்தம் போட்டார். அந்த ஒப்பந்தம் சிங்களர்களுக்கு எதிரானது என கருதப்பட்டது. அதனால், ராணுவத்தில் உள்ள சிங்கள தீவிரவாத தளபதிகள் ஆத்திரம் அடைந்து தனது அரசை கவிழ்த்து, ராணுவ ஆட்சியை ஏற்படுத்துவார்கள் என்று அதிபர் ஜெயவர்தன பயந்தார். ’அப்படி எதுவும் நடக்க விடமாட்டேன்; இந்தியா உங்களுக்கு துணை நிற்கும்’ என்று ராஜீவ் சொன்னார். ’அப்படியானால், உடனே உங்கள் ராணுவத்தின் ஒரு பிரிவை இங்கே அனுப்ப உத்தரவு போடுங்கள். உங்கள் படை உடனே இங்கு வராவிட்டால் இன்று ராத்திரியே இங்கே ராணுவ புரட்சி நடக்கும். நான் சிறை வைக்கப்படுவேன் அல்லது கொல்லப்படுவேன். அதன் பிறகு தமிழர்களுக்கு எவரும் கை கொடுக்க மாட்டார்கள்’ என்று ஜெயவர்தன பயமுறுத்தினார். ராஜீவ் உடனே அதை ஏற்று, இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப உத்தரவு போட்டார். இன்னொரு நாட்டுக்கு இந்திய படையை அனுப்புவது போன்ற முக்கியமான முடிவை, மத்திய அமைச்சரவையில் விவாதித்து அதன் ஒப்புதல் பெற்றே எடுக்க வேண்டும் என்று நான் எடுத்துச் சொன்னேன். அதை ராஜீவ் கேட்கவில்லை’.

இது நட்வர் சிங்கின் அடுத்த அம்பலம். இதன் மூலம் அவர் என்ன சொல்ல முயல்கிறார்? ராஜீவ் காந்தியை ஜெயவர்தன ஏமாற்றி விட்டார் என்றா? மத்திய அமைச்சரவையை ராஜீவ் ஓரங்கட்டி விட்டார், அதன் மூலம் இந்திய அரசியல் சாசனத்தை அவமதித்து விட்டார் என்றா? இருக்க முடியாது. ஏனென்றால், ஜெயவர்தன பயந்த மாதிரியே, இலங்கை ராணுவத்தில் இருந்த சிங்கள தீவிரவாதியான ஒரு சிப்பாய் அங்கு நடந்த அணிவகுப்பில் ராஜீவை கொல்ல முயன்றான். உலகில் ஒரு பெரிய நாட்டின் தலைவருக்கு இதுபோன்ற ஆபத்தோ அவமானமோ நிகழ்ந்தது இல்லை. அப்படியானால் நட்வர் என்ன சொல்ல வருகிறார்?

ஜெயவர்தன சொன்னதை மட்டுமல்ல, அவரது பரம எதிரியான பிரபாகரன் சொன்னதையும் ராஜீவ் முழுமையாக நம்பியதாக நட்வர் சொல்கிறார்.

‘இந்திய – இலங்கை ஒப்பந்தம் இந்தியாவிடம் இலங்கை அடைந்த சரணாகதி என சிங்கள தீவிரவாதிகள் நினைப்பார்கள். அதனால் எனக்கு ஆபத்து என்று ராஜீவிடம் ஜெயவர்தன சொன்னார். அதை ராஜீவ் நம்பினார். அதே போல, அந்த ஒப்பந்தத்தை விடுதலை புலிகள் ஏற்றால், அவர்கள் அதுவரை போராடிய தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டதாக ஆகிவிடும்; அவ்வாறு நடந்தால் தமிழ் மக்களின் அபிமானம் உள்ளிட்ட பெரும் இழப்புகளை புலிகள் எதிர்கொள்ள நேரிடும் என்று பிரபாகரன் வாதிட்டார். ராஜீவை பிரபாகரன் சந்தித்து இதை வலியுறுத்திய போது, அதுபோன்ற இழப்புகளை இந்தியா சமன் செய்யும் என்று ராஜீவ் வாக்குறுதி அளித்தார். பொருளாதார ரீதியில் விடுதலை புலிகளுக்கு தாராளமாக உதவி செய்வதாக அவர் பிரபாகரனிடம் உறுதி அளித்து இருந்தார். அதை அவரே என்னிடம் சொன்னார். அப்போது, நாம் நஷ்ட ஈடு கொடுத்தால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக பிரபாகரன் எழுத்து மூலமாக வாக்குறுதி அளித்தாரா என்று ராஜீவிடம் கேட்டேன். உடனே அவருக்கு கோபம் வந்து விட்டது. ’பிர்பாகரன் ஒரு இயக்கத்தின் தலைவர். நேருக்கு நேராக என்னிடம் ஒரு விஷயத்தை சொல்கிறார். அதெல்லாம் முடியாது, உன்னை நம்ப மாட்டேன், எழுதிக் கொடு என்றா அவரை கேட்க முடியும்? நான் பிரபாகரனை நம்புகிறேன். அவர் சொன்ன வாக்கை காப்பாற்றுவார்’ என்று ராஜீவ் கோபமாக பதில் அளித்தார். அந்த வெகுளித்தனமே பிரபாகரனால் அவர் தீர்த்து கட்டப்படும் அளவுக்கு சென்றுவிட்டது. யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்ற அடிப்படை தெரியாத ராஜீவ் பிரதமராக இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் குறைவு’.

இலங்கை பிரச்னையில் ராஜீவ் எடுத்த முயற்சிகள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைந்ததாக நட்வர் ஒப்புக் கொள்கிறார். ஆனால், ‘ஒரு பிரதமராக இருப்பவர் யாரையும் எளிதில் நம்பிவிட கூடாது. பிரச்னையின் ஆழம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டக் கூடாது. அதற்குத்தானே அதிகாரிகளும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்? அவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும். இலங்கை பிரச்னை வெளியில் தெரியும் அளவுக்கு சுலபமான விவகாரம் அல்ல. அதில் நிறைய கண்ணுக்கு தெரியாத நீரோட்டங்கள் இருந்தன. உதாரணமாக, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு இலங்கை கொள்கையை உருவாக்கி இருந்தார். அது இந்திய அரசின் இலங்கை கொளகையோடு ஒத்து போகிறதா என்பதை அறிய ராஜீவ் ஆர்வம் காட்டவே இல்லை. வெளி தோற்றத்தை பார்த்து யாரையும் எளிதில் நம்பி விடும் குணம் ராஜீவுக்கு இருந்தது. அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழி வகுத்தது’ என்கிறார் நட்வர்.

தமிழர்களான நம்மைவிட இலங்கை பிரச்னையின் சூழல்களையும் சிக்கல்களையும் அறிந்தவர்கள் எவரும் இல்லை. நம்மிடமே இப்படி காதில் பூ சுற்ற நட்வர் துணிகிறார் என்றால், அதற்கு ஒரு பின்னணி இருந்தாக வேண்டும்தானே?

இது அது:

நட்வர் சிங்குக்கு இப்போது 83 வயது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாட் இனத்தை சேர்ந்தவர். 22 வயதில் இந்திய வெளிநாட்டு பணி துறையில் சேர்ந்தார். அந்த கவுரவத்துடன் பட்டியாலா மகாராஜாவின் மகளை மணந்தார். 31 ஆண்டுகள் ஐ.எஃப்.எஸ் பணிக்குமுடிஉ கட்டி, 1984ல் அரசியலில் நுழைந்தார். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றவரை இணை அமைச்சர் ஆக்கினார் இந்திரா காந்தி. வெளிநாட்டு பணியில் கிடைத்த அனுபவம், ராஜ குடும்ப தொடர்பு ஆகியவற்றால் சர்வதேச தலைவர்களுடன் சரளமாக பேசும் திறனை வளர்த்துக் கொண்டதால் நேரு குடும்பத்துக்கு பயனுள்ள கருவி ஆனார்.

சந்தடி சாக்கில் வெளிநாட்டு தலைவர்களுடன் தனிப்பட்ட உறவையும் பலப்படுத்திக் கொள்ள நட்வர் தவறவில்லை. சதாம் உசேனின் இராக் மீது மேலைநாடுகள் பொருளாதார தடை விதித்த நேரத்தில் அங்கு தவிக்கும் மக்களுக்கு அடிப்படை உணவாவது கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் சில நாடுகள் இராக் ஏண்ணெயை வாங்க ஐ.நா அனுமதித்தது. அதில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா அனுமதித்ததற்கு மேலாக எண்ணெய் இறக்குமதி செய்து, சதாமுக்கு சில நாடுகள் உதவின. அதை விசாரிக்க வாக்கர் கமிஷனை ஐ.நா நியமித்தது. கூடுதல் வருமானம் கிடைக்க உதவியவர்களுக்கு பிரதி உபகாரமாக சதாம் பெரும் தொகை அளித்த்தை கமிஷன் கண்டு பிடித்தது. அப்படி அன்பளிப்பு பெற்றவர்களில் ஒருவர் நட்வர் சிங் என கமிஷன் அறிவித்தது.

நட்வர் இவ்வாறு சதாமிடம் பெற்ற அன்பளிப்பு இறுதியாக நேரு குடும்பத்தின் கணக்கில் சேர்ந்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. அப்போது நட்வர் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். தகவல் வெளியானபோது வெளிநாட்டு சுற்று பயணத்தில் இருந்தார். உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்து, கட்சியில் இருந்தும் விலக்கி வைக்க சோனியா உத்தரவிட்டார். டெல்லி வந்து இறங்கும்போது நட்வர் அமைச்சராகவும் இல்லை. காங்கிரஸ்காரராகவும் இல்லை.

நாற்பது ஆண்டுகளாக இனித்த உறவு கசப்பாக மாறியது அப்போதுதான்.

இப்படிப்பட்ட சூழலில் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களை குறித்து நட்வர் சிங் அம்பலப்படுத்தும் ”உண்மைகளுக்கு” என்ன பலம் இருக்க போகிறது?

(இழு தள்ளு 47/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 10.08.2014)

நன்றி:  Kathir Vel

:
                                                   கட்டுரை: Kathir Vel

No comments: