Friday, August 8, 2014

முதுமை தீபத்தின் கால்களில்


முதுமையின்
ஓய்வுப் படுக்கையை...
குழந்தையாகவே ஆகிப்போகும்
இயற்கை மாற்றத்தை...
மரணப்படுக்கையாக
மாற்றிக் கண்டு
பதறுகிறது
பாசம்

அது
பாசத்தின் இயல்புதான்
பிழையில்லை என்றாலும்...


அந்தப் பாசத்துக்கு
யார் சொல்லித்தருவார்

கண்களில்
காட்சிகளைக் கோத்துவைத்து
பொழுதுக்கும்
பழைய நினைவுகளையே
கனவுகளாய்ப் பார்த்துக்கொண்டு
படுத்துக்கிடக்கும்...

இயற்கையின் நியதியில்
இளைப்பாறிக்கொண்டிருக்கும்

அந்த அழகிய
முதுமையைக் கண்டு...

அஞ்சி
அறற்றி

அமைதி பாடும் முதுமைக்கு
அன்பு தேடும் முதுமைக்கு
பரிவு நாடும் முதுமைக்கு

அச்சம் தந்து
பதட்டம் தந்து
தன்னிரக்கம் தந்து

இருந்து
சங்கடப் படுத்துகிறோமோ
என்ற குற்ற உணர்வு தந்து

அலையலையாய் தவழ்ந்து
அழகுகாட்டும்
அந்த முதிய தீபத்தை
அற்பாயுளில் அணைத்துவிடாதே
என்று

நரம்பு நதிகளோடும்
கைகளைப் பற்றிக்கொண்டு
நாவின் தமிழ்க் கரங்களால்

உயர் நம்பிக்கையை
உறவு நட்பை
உள்ள நனைப்பை
தந்து தந்து
இனியும் பல்லாண்டு
வாழட்டும்
வாழவிடு
என்று

No comments: