Tuesday, August 19, 2014

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கும் துபாய் ஷேக் படத்திற்கும் என்ன சம்பந்தம்?


Image credit WAM / GN
 அண்ணா நாமம் வாழ்க!
----------------------------------
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில்,
24 முறை சுவரில் ஒட்டப்பட்டிருந்த ‘டைல்ஸ்’ விழுந்து, 25வது முறைக்குக் காத்திருக்கிறோம்; வெள்ளிவிழா கொண்டாட, என்று நமது தமிழ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

பிறகு முகநூலில் ஒரு நண்பர், “சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறி விட்டேன், தலை தப்பியது” என்று கிண்டலாக ஒரு நிலைத்தகவலைப் பதிந்திருந்தார்.
விளையாட்டாய் படித்துவிட்டுப் போனாலும், வேதனயாய் இருந்தது.

ஒரு காலத்தில் (சென்னை) பன்னாட்டு விமான நிலையம் என்பது நமது (தமிழ்) நாட்டு மக்கள் வெளிநாடுகளிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கும், தாய்நாட்டிலிருந்து வெளிநாடு செல்வதற்கும் உள்ள இடமாக / முனையமாக இருந்தது.
ஆனால் இன்று சென்னை தொழில் நகரமாகவும், தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் துறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாகவும் திகழ்கிறது. இப்போது நம்நாட்டினர் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களும் சென்னைக்கு வந்துபோக வாசலாய் இருக்கிறது சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம்.

அதன் தேவையினைக் கருத்தில் கொண்டு விரிவாக்கப்பட்ட / புதுப்பிக்கப்பட்ட முனையத்தில் இதுபோன்ற ‘டைல்ஸ்’ விழும் சம்பவங்கள் மட்டுமே செய்திகளாக வெளிவருகிறது. இதுதவிர, பயணிகளின் அசௌகரியங்களோ, குடியுரிமை அதிகாரிகள் பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியோ,அங்குள்ள ஊழியர்கள் எப்படி அலட்சியப் போக்கில் நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியோ, சுங்கம் பற்றியோ, எந்தப் பத்திரிகையும் எழுதுவதில்லை. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து போகும் அனேகருக்கு மேற்சொன்னவைகளின் நிலையினை அறிந்திருக்க வாய்ப்பு அதிகம்.

சரி, இதற்கும் துபாய் ஷேக் படத்திற்கும் என்ன சம்பந்தம்?

துபாய் பன்னாட்டு விமான நிலையம் முனையம் - மூன்று
(Terminal 3) பற்றி கேள்விப்பட்டோ அல்லது அதன் வழியாக பயணம் மேற்கொண்டோருக்கு அதன் வசதிகள், சேவை, Automatic Passport Control, Auto Scanning எனப்படும் தானியங்கிச் சேவை, உபசரிப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நிச்சயமாக, இதை ஒப்பிடுவதற்காக எழுதப்பட்டதல்ல இந்தப் பதிவு.

பிறகு??

முனையம் - மூன்று ( Terminal - 3 ) என்பது, துபையின் எமிரேட்ஸ், மற்றும் ஆஸ்திரேலியாவின் க்வாண்டஸ் விமானங்களின் போக்குவரத்திற்கு மட்டும் உள்ளது.
(மற்ற நாட்டு விமானங்களின் சேவை முனையம் - ஒன்று, முனையம் - இரண்டு வழியே நடைபெறுகிறது )

இந்தியர்கள் உட்பட அனேக வெளிநாட்டினரும் வந்து போகும் இடமான முனையம் -மூன்றில், சேவைகள் முறையாக நடக்கிறதா? PASSPORT CONTROL அதிகாரிகள் பயணிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்கிறார்களா? பயணிகளின் சுமைகளை கொண்டு வரும் தானியங்கி கொணர்வியான (carousel) இயந்திரம் சரியாக இயங்குகிறதா? பயணிகளின் சௌகரியம் பற்றி அவர்களிடமே நேரடியாக ஆய்வு என்று நாட்டின் அதிபரே களத்தில் இறங்கிய அதிரடிச் செய்திதான் எழுதவைத்தது.

இதுபோன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியாளர்கள் கிடக்கவேண்டுமென்ற ஆதங்கம் எழுத வைத்தது.

அண்ணா பெயரில் முனையம் அமைத்துவிட்டு ஆபத்து காத்திருக்கிறது என்ற அவப்பெயர் துடைக்க வேண்டும் என்று எழுத வைத்தது.

அண்ணா நாமம் போற்றி அறுபதுகளிலிருந்து ஆட்சி நடத்தும் நமது அரசாங்கங்கள், மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகத்தை முடுக்கி்விட்டு, அண்ணா நாமம் வாழச்செய்ய வேண்டும்.

by Rafeeq Frien
-Rafeeq Friend
---------------------------------------------------------------

No comments: