நான்கு ஆண்டுகளுக்கு முன் மகள் 4ம் வகுப்பு படிக்கும் போது, ஒருநாள், தமிழாசிரியை தன்னுடன் மிகவும் கடினமாக நடந்து கொள்வதாக புகாருடன் வந்தாள். சரி நான் வந்து பேசுகிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்திவிட்டு மறந்துவிட்டேன்.
அடுத்த ஓரிரு நாள்களில் சில குழந்தையிலக்கியம் புத்தகங்கள் வாங்குவதற்காக பாரதி புத்தகாலயம் (தேனாம்பேட்டை) போயிருந்தேன்.
அப்போது நிலையத்தின் மேலாளர் Mohammed Sirajudeen 'ஆயிஷா’ என்ற புத்தகத்தைக் கொடுத்து படித்துப் பாருங்கள் என்றார். அங்கேயே அந்தப் புத்தகத்தை படித்து முடித்தேன். என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே என் நினைவுக்கு வந்தவர் என் மகளின் ஆசிரியை. அவருக்கு இந்தப் புத்தகத்தை படிக்கக் கொடுக்கவேண்டும் என்று தோன்ற, இரண்டு புத்தகங்களாக வாங்கினேன்.
அவரிடம் படிக்கக் கொடுத்து, பின் அடுத்த வாரம் சந்திக்கச் சென்ற போது, “ஆயிஷா” படித்தீர்களா? என்று கேட்ட நொடியில் அழ ஆரம்பித்துவிட்டார். மி்கவும் கண்டிப்பான / கடுமையான ஆசிரியை என்று அறியப்பட்டவர் அழுவதைப் பார்த்த கூடி இருந்த சக ஆசிரியைகளுக்கு ஆச்சரியம், "என்னாச்சு?” என்னிடம் கேட்க ஆரம்பித்தனர்.
ஆனால், அவரே அனைவருக்கும் விளக்கினார். ”இனி என் வாழ்வில் மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்ளமாட்டேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை அவர்கள் திறனறிந்து செய்வேன், இந்தப் புத்தகத்தை நானே வைத்துக் கொள்ளட்டுமா?”. என்று கேட்டார்.
அது உங்களுக்காக வாங்கியதுதான். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். கூடியிருந்த மற்ற ஆசிரியைகளுக்கும் அந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் 10 புத்தகங்கள் பாரதி புத்தகாலயத்தில் வாங்கி வந்து மற்ற ஆசிரியைகளுக்கும் கொடுத்தேன்.
அப்போது மேலாளரிடம், புத்தக ஆசிரியரின் தொடர்பு எண் கேட்டேன். ஆசிரியரின் அனுமதியுடன் இரண்டு நாள்கள் கழித்து கிடைத்தது. உடனே ஆசிரியருக்கு அழைத்தேன்.
அறிமுகப்படுத்திக் கொண்டேன். “ஆயிஷா” புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், ஆசிரியைக்கு ஏற்படுத்திய மாற்றம், மற்ற ஆசிரியைகளுக்கு அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென ஏற்பட்ட ஏக்கம், இனிமேல் சந்திக்கப் போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுக்கப் போகிறேன் என்ற எனது தீர்க்கம் என அனைத்தையும் சொன்னவுடன்.
“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ரஃபீக்” என்றார்.
என் மகள் பெயர் ஆயிஷா என்று சொன்ன மாத்திரத்தில்,...
“ஓ... நீங்கள் தான் அந்த ஆயிஷாவின் அப்பாவா? உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லி சிரித்தார்.
(”ஆயிஷா” புத்தகத்தில் வரும் ஆயிஷாவின் அப்பா பிரிந்து போயிருப்பார். )
உங்களை சந்திக்க வேண்டும் அய்யா.. என்று கேட்டேன்.
கோவையில், குழந்தைகளைக் கொண்டு புத்தகங்களை வெளியிட இருக்கும் விழாவிற்கு அழைத்தார்.
பணிச்சூழல் காரணமாக விழாவிற்குப் போக முடியவில்லை. தொடர்பிலும் இருக்க முடியவில்லை.
பத்து இலட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்த்த
”ஆயிஷா” தந்த புகழினால் ஆசிரியர் இரா.நடராசன்,
‘ஆயிஷா’ நடராசன் என்று அழைக்கப்பட்டார்.
அவரை சந்திக்க முடியாமல் போனாலும் அவரின் புத்தகங்களான ‘மலர் அல்ஜீப்ரா’ , கலீலியோ, செய்துபார் விஞ்ஞானி ஆகலாம், இது யாருடைய வகுப்பறை? போன்ற ஏராளமான புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.
இன்று (23-08-2014) மாலை தினமணி இணையதளத்தில், அவருக்கு ‘பால சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட செய்தியறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உடனே அழைத்து வாழ்த்து தெரிவிக்க வேண்டுமென மாலை 04:00 (இந்திய நேரப்படி மாலை 05:30) மணிக்கு அழைத்தேன்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அழைக்கிறோம்,
எண் உபயோகத்தில் இருக்கிறதா?
என்னை ஞாபத்தில் இருக்கிறதா? என சந்தேகங்களுடன் கடந்தன விநாடிகள்,
”ஹலோ..... வணக்கம்...... சொல்லுங்க”
அய்யா.... ஆசிரியர் நடராசன்ங்களா?
“ஆமா .. சொல்லுங்க....”
அய்யா, நான் ரஃபீக் பேசுகிறேன்...துபையிலிருந்து...
“ஆங்.... ரஃபீக், சொல்லுங்க, எப்படி இருக்கீங்க, ..”
அவர் பேசிய உற்சாகம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்த,
அய்யா என்னை ஞாபகம் இருக்கா? நான்...... முடிப்பதற்கள்,
“நீங்க ஆயிஷாவின் அப்பாதானே, எப்படி உங்களை மறக்க முடியும்.......” என்று சொன்னவுடன்,
அவரின் அபார நினைவாற்றலைக் கண்டு வியந்து, உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள...
பத்து நிமிடங்களுக்கு மேல் சுவையான உரையாடல்.
அவருக்கு கிடைத்த விருதிற்காக, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ் சிறுவர் இலக்கியத்தில் முத்திரை பதிக்கும் ஆசிரியர். ‘ஆயிஷா’ நடராசன் அவர்கள் மென்மேலும் பல விருதுகள் பெற வேண்டுமாய் வாழ்த்துவோம்!
( எழுத்தாளர் 'ஆயிஷா' இரா.நடராசன் பால சாகித்ய விருது பெற்றவர் )
-ஆயிஷாவின் அப்பா ரஃபீக்.
கட்டுரை ஆக்கம் Rafeeq Friend
தயவு செய்து அவசியம் ஆயிஷா வை சொடுக்கி படியுங்கள்
-------------------------------------------------
இரா.நடராசன் எழுதிய ஆயிஷா கதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே உணர்வு படம் பார்க்கும்போதும் ஏற்படும் விதத்தில் அருமையாக குறும்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.அனைவரின் பாராட்டினையும் பெற்ற ஆயிஷா குறும்படத்தினைத் தயவுசெய்து பொறுமையாகப் பாருங்கள்.
1 comment:
திரு. 'ஆயிஷா' நடராஜன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
Post a Comment