எல்.கே.ஜி வகுப்பில் குழந்தையை சேர்க்க இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை கேட்கின்றன சில பள்ளிகள். என்னதான் வசதி இருந்தாலும், இந்த அளவுக்கு யார் கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம். ’எத்தனை லட்சம் என்று நாங்கள் கேட்கவே மாட்டோம். இதோ பிடியுங்கள், பிளாங்க் செக். நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்’ என்று அம்மா அப்பாக்கள் சொல்கிறார்களாம்.
பணக்காரத் திமிர் என்று நீங்கள் சுலபமாக சொல்லி விடுவீர்கள். உற்றுப் பார்த்தால் தெரியும், அவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் அல்ல என்பது. பணம் புரட்டக் கூடிய நிலையில் இருப்பவர்கள். அநியாய வட்டிக்கு கடன் வாங்கியோ, கிரெடிட் கார்டை தேய்த்தோ, ஈசியாரில் அல்லது ஓயெம்மாரில் வாங்கிப் போட்ட ஃபிளாட்டை அடமானம் வைத்தோ தேவையான பணத்தை தயார் செய்யக் கூடியவர்கள். மிடில் கிளாஸ் மாதவ மாதவிகள்.
மெடிக்கல் சீட் வாங்க லட்சங்களை கொட்டிக் கொடுப்பதிலாவது ஒரு லாஜிக் இருக்கிறது. புனிதமான டாக்டர் தொழிலுக்கு மகனை தயார் செய்யலாம். வெளியே வந்த்தும் ஏதேனும் கார்ப்பரேட் ஆஸ்பிடலில் சம்பளத்துக்கு சேர்த்து விடலாம். அங்கே நோயாளிகளின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்வதன் மூலம் கொட்டும் செல்வத்தில் பங்கு பெறலாம். எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்க லட்சங்கள் செலவிடுவது தண்டமல்லவா?
பிரபலமான ஒரு பள்ளியின் நிர்வாகியிடம் கேட்டேன். ‘தண்டம் என்று நீங்கள் நினைப்பதை அந்த பெற்றோர்கள் முதலீடு என குறிப்பிடுகிறார்கள். எலைட் ஸ்கூல் என்று சமூகத்தால் முத்திரை குத்தப்பட்ட பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதுதான் அவர்களுடைய வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்று நம்புகின்றனர். முன்பெல்லாம் 9 அல்லது 10ம் வகுப்பு வரும்போதுதான் அந்த மாதிரி பள்ளிகளை தேடினார்கள். ஆரம்பத்தில் இருந்தே எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று நிர்வாகங்கள் முடிவு எடுத்து விட்டதால், எல்.கே.ஜி.யிலேயே யுத்தம் தொடங்கி விடுகிறது’ என்று விளக்கினார்.
பரம்பரை செல்வந்தர்கள் இத்தகைய பள்ளிகளை தேடி அலைவதில்லை என்ற தகவலையும் அவர் ஊர்ஜிதம் செய்தார். இப்படியெல்லாம் அவர்கள் செலவு செய்திருந்தால் எப்போதோ ஏழையாகி இருப்பார்கள். தவிரவும், மிடில் கிளாஸ் பெற்றோருக்கு இருக்கும் குற்ற உணர்வுகள் எதுவும் அவர்களுக்கு கிடையாது. கணவனும் மனைவியும் வேலைக்கு செல்லும் வீடுகளை கவனித்தால் தெரியும். குழந்தையை அருகிலிருந்து கவனித்து வளர்க்கும் கடமையில் இருந்து தவறி விட்டதாக மனசாட்சி உறுத்துகிறது. அந்த இழப்பை ஈடு கட்டுவதாக நினைத்துக் கொண்டு, குழந்தைக்கு தாராளமாக செலவு செய்கிறார்கள். ‘எலைட் ஸ்கூலில் படித்தால் பிரைட் ஃபியூச்சர் கன்ஃபர்ம்டு’ என்று விளம்பரத்தில் பார்த்த வாசகத்தை வேதவாக்காக நம்பும் கூட்டம்.
சென்னையில் பள்ளிகளை மூன்று விதமாக பிரித்து கட்டணம் நிர்ணயம் செய்திருக்கிறது அரசு. எல்.கே.ஜி வகுப்புக்கு 2,500 ரூபாயில் இருந்து 12,000 வரை கட்டணம் வசூலிப்பவை பட்ஜெட் பள்ளிகள். 15 முதல் 24 ஆயிரம் வசூல் செய்யும் பள்ளிகள் ஸ்பெஷல் ரகம். உயர் ரக பள்ளிகளில் இதே வகுப்புக்கு 38 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். விளையாடுவதற்கு போதுமான இடம், விளையாட்டுடன் எண்ணும் எழுத்தும் கற்றுத்தர பொம்மைகள் கருவிகள், ஏர்கண்டிஷன், உணவு ஆகியவை கட்டணத்துக்கு ஏற்ப கிடைக்கும் கூடுதல் வசதிகள்.
கும்பகோணம் பள்ளியில் தீப்பிடித்த துயரமான சம்பவத்துக்கு பிறகுதான் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு விஷயத்தில் விதிகளை கண்டிப்புடன் அமுல்படுத்த அதிகார வர்க்கம் வரிந்து கட்டியது. இவ்வளவு நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி, ஒவ்வொரு வகுப்பிலும் இத்தனை பிரிவுகள்தான் அனுமதிக்கப்படும் என்பது வரை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டனர். விதிகளுக்கு கட்டுப்பட்டு கட்டமைப்பை சீரமைக்காத பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை உருவானபோது, மாணவர்களின் நலன் கருதி கோர்ட் தலையிட்டு பள்ளிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரத்தையும் உறுதிப்படுத்த அரசு முயன்றபோது புதிய சிக்கல்கள் முளைத்தன. உரிய தகுதிகள் கொண்ட ஆசிரியரைத்தான் நியமிக்கலாம் என்ற விதியால் நிர்வாகங்கள் தடுமாறின. அத்தகைய ஆசிரியர்களை நியமிப்பது என்றால் கணிசமான ஊதியம் வழங்க வேண்டும். இதுவரை பெரும்பாலான பள்ளிகள் இந்த விதியை கண்டு கொள்ளவே இல்லை. படிப்பில் குறைந்தபட்ச தகுதி பெறாதவர்களைக்கூட ஆசிரியராக அமர்த்தி, மிகவும் குறைந்த ஊதியம் வழங்கி சுரண்டலில் ஈடுபட்டிருந்தன. தொடர்ந்து அதிகாரிகள் நட்த்திய சோதனையால் நிலைமை கணிசமாக மாறியுள்ளது. கல்வித் தகுதியில் குறைந்த ஆசிரியர்கள் இப்போது நியமிக்கப்படுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் நியாயமானதாக இல்லை.
‘கோடிகளில் புரளும் தொழில் கல்லூரிகள்கூட பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் ஊதியத்தை வழங்காத நிலையில், பாவப்பட்ட பள்ளி நிர்வாகங்களை நிர்ப்பந்தம் செய்வது அநியாயம்’ என பள்ளி முதலாளிகள் தரப்பில் கூறுகின்றனர். ஒருவர் செய்யும் தவறு இன்னொருவரின் தவறை நியாயப்படுத்த முடியாது என்பது ஒரு புறம் இருந்தாலும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை எந்தத் துறையிலும் முழுமையாக அமல்படுத்த அரசால் இயலவில்லை என்பது வேதனைக்குரியது.
விவசாயக்கூலிகள் தொடங்கி கல்லூரி முதல்வர்கள் வரை இந்த விஷயத்தில் பரிதாபத்துக்கு உரியவர்களே. அரசு ஊழியர்களுக்கான ஒவ்வொரு ஊதியக்குழுவின் பரிந்துரையும் அறிவிக்கப்படும் வேளையில் இவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் கொஞ்சமல்ல. அகவிலைப்படி உயர்வு அறிவிப்புகள் அடிக்கடி வரும்போதும் அதே ரியாக்ஷன்.
எல்.கே,ஜி அட்மிஷன் விவகாரத்தில் இதெல்லாம் எப்படி பொருந்தும் என்ற கேள்வி எழலாம். என்னதான் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலும், பாடம் சொல்லித்தரும் ஆசிரியர் ஆசிரியை நிலைதான் கல்வித் தரத்தில் பிரதிபலிக்கும். தகுதியும் பொறுப்பும் உள்ள ஆசிரியர்கள் வேண்டும் என்றால் நியாயமான ஊதியம் வழங்கினால்தான் கிடைப்பார்கள். பள்ளிக்கு பள்ளி மாறுபடாமல் சீரான ஊதியம் வழங்கப்பட்டால் அனைத்துப் பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்கள் பணியாற்ற முடியும். இடம் பிடிப்பதற்கான போட்டி இவ்வளவு மோசமாக இருக்காது.
கட்டணம் அதிகமாக இருந்தாலும் சில பள்ளிகளை நோக்கியே எல்லா பெற்றோரும் படை எடுக்கின்றனர். இதனால் பள்ளிகள் இஷ்டத்துக்கு நன்கொடை வசூலிக்கின்றன. அதற்கும் அசராத பெற்றோரை சமாளிக்க, எல்.கே.ஜி குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. அதற்கான விண்ணப்பம் அதிகாலை வினியோகிக்கப்படும். ஒரு மணி நேரத்தில் கதவு மூடப்படும்.. என்று அதிரடியாக அறிவிக்கின்றன. பள்ளிக்கு வெளியே இரவே வந்திருந்து காத்திருக்கும் பெற்றோரை பார்க்கும்போது பரிதாபத்துக்கு பதில் கோபமே கொப்பளிக்கிறது.
குறிப்பிட்ட பள்ளியில் படித்தால் மட்டுமே குழந்தை உருப்படும் என்பது எத்தனை முட்டாள்தனமானது என்பதை அவர்கள் உணரவில்லை. தங்கள் குழந்தை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
கல்வித்துறையில் சீர்திருத்தம் என்று தலைப்பு கொடுத்தால் மணிக்கணக்கில் பேசுவதற்கு எத்தனையோ மேதைகள் தயாராக இருக்கிறார்கள். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாமல், சூழ்நிலைக்கு பொருத்தமாக புதிய யோசனைகளை அவர்கள் கண்டறிந்து மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். உதாரணமாக சொன்னால், வசதி படைத்த நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டு அறிமுகம் செய்தபோது சிலர் கொதித்தார்கள். அந்த திட்டம் இன்று சிறப்பாக செயல்படுகிறது. டாக்டர்களும் பணியாளர்களும் பலன்களை பகிர்ந்து கொள்கிறார்கள். நிதித்துறையின் தயவை எதிர்பார்க்க தேவையில்லாததால் மருத்துவமனைக்கு வசதிகளும் கருவிகளும் அதிகரிக்கின்றன.
அதுபோல அரசுப் பள்ளிகளில் கட்டணத்துடன் இங்க்லிஷ் மீடியம் வகுப்புகள் தொடங்கப்பட்டதும் நல்ல பலன் தருகிறது. கட்டிடம், மைதானம், காற்றோட்டமான வகுப்பறைகள் என அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பும் வசதிகளும் தாராளமாக இருக்கின்றன. லாபநோக்கம் இல்லாமல் பள்ளி நடத்த முன்வருபவர்கள் இந்த வசதிகளை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம்.
பிரமாண்டமான வளாகங்கள், பள்ளி கல்லூரி வகுப்பறைகள், வசதிகள் ஒரு நாளில் கால் பகுதி நேரமே பயன்படுத்தப்படுகின்றன என்பது இன்றைய சூழ்நிலையில் விசித்திரமாக தோன்றுகிறது. இலவசமாக கொடுக்க வேண்டிய குடிநீரை பாட்டிலில் அடைத்து அரசே விற்பதா என்று கேட்பவர்கள் கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். தனியார் 20க்கும் 30க்கும் விற்பதை அரசு 10 ரூபாய்க்கு தருகிறதே என்று நன்றியுடன் வாங்கிச் செல்லும் கூட்டம் கூடுகிறதே தவிர குறையவில்லை.
கல்வி அமோகமான வியாபாரம் என்பது இமயத்தில் செதுக்கிய சத்தியவாக்கான பிறகு, ஆகப்பெரிய முதலாளியான அரசாங்கம் கைகட்டி வேடிக்கை பார்ப்பதில் அர்த்தமில்லை.
(இழு தள்ளு 21/ கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 24.04.2014)
கதிர் வேல் Kathir Vel
No comments:
Post a Comment